Monday, May 27, 2019

Avataaram meaning

அவதாரம்' என்றால், இறங்குதல் என்று பொருள். வைகுண்டத்திலிருந்து பகவான் நம்மைக் கடைத்தேற்றுவதற்காக இறங்குகிறான். இங்கே ஒரு ஐயம் எழலாம். ஏன் பகவான்தான் இறங்கி வந்து நம்மைக் காக்க வேண்டுமா? அவனுடைய சுதர்சன சக்கரத்தையோ, கருடனையோ, ஆதிசேஷனையோ அனுப்பி வைத்து, நம்மை காக்கச் சொன்னால், அவர்கள் கடமை ஆற்ற மாட்டார்களா? கண்டிப்பாகச் செய்வார்கள். ஆனால், கருணையே வடிவான பெருமான், அப்படிச் செய்ய மாட்டான். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:

ஒரு அரசன் தன் சிறு குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு, கப்பலிலே சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டு வந்தான். சட்டென்று கப்பல் அசைந்தது. குழந்தை கை தவறி கடலில் விழுந்தது. அரசன் பதறிப் போய் உடனே கடலில் குதித்து, நீந்தி, குழந்தையைக் காப்பாற்றினான். அரசனுக்கு அருகில் சேனாதிபதியும், மந்திரியும், வீரர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களை ஏவி, அரசன் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லி இருக்கலாமே! ஏன், தானே குதிக்க வேண்டும்? ஒரே பதில்தான்! அரசன் மற்றவர்களை ஏவி இருந்தால், அவன் அரசனாக இருந்திருப்பான். தகப்பனாக இருந்திருக்க மாட்டான். தானே குதிக்கவேதான், தந்தைக்குரிய பாசத்தோடே நடந்து கொண்டான்.

இந்தத் தந்தைக்கும், சிறு குழந்தைக்கும் இரண்டு ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். வயதான நமக்கும், நம் தந்தைக்கும் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், பகவானுக்கும் இன்று, நேற்றா தொடர்பு? நித்தியமான முடிவில்லாததான தொடர்பு. அவ்வளவு தூரம் நம்மோடு தொடர்புடைய, பாசமுடைய பெருமான் யாரையாவது அனுப்பியா நம்மை காப்பாற்றச் சொல்வார்? தானே குதித்தால்தானே தந்தை, தாய்க்குரிய பாசம் அவனிடத்தில் தங்கும்! பாசமுடைய ஒரு தாயைப் போல, நம்மைக் காப்பதற்காக எம்பெருமான் பூலோகத்தில் இறங்குகிறார். அவருடைய அவதாரங்கள் பொய் கிடையாது. கானல் நீரைப் போலப் பொய்யானவை அல்ல; நிஜமானவை. பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவதரிக்கிறான் என்று சொல்லுகிறபடியால், கண்டிப்பாக பிறப்பு உள்ளது என்று தெரிகிறது. ஆனால், சாத்திரங்களோ,  

அஜாயமான: பஹுதா விஜாயதே

 என்று கூறுகின்றன. பிறப்பே இல்லாத பெருமான் பல வகையான பிறப்புக்களை ஏறிட்டுக் கொள்கிறான். ஆழ்வார் அப்படியே தமிழ்ப் படுத்தி,
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் என்று சாதித்தார். 'பிறப்பில்' என்பதால், பிறப்பில்லாதவன் என்று விளங்குகின்றது. 'பல்பிறவிப் பெருமான்' என்றதால் பல பிறவிகள் எடுத்துக் கொள்கிறான் என்று விளங்குகின்றது. பிறவியற்றவனுக்கு பிறப்பு உண்டு என்று சொன்னால் முரண்படாதா? இதில் எந்த முரண்பாடும் இல்லை. அவன் பிறக்கிறான் என்பது உண்மை. பிறக்கவில்லை என்பதும் உண்மை. இதில் குழப்பமே இல்லை. அவன் பிறப்பதில்லை; அதாவது நம்மைப் போல் பிறப்பதில்லை. நாம் அனைவரும் கர்மத்தாலே தூண்டப்பட்டு, கர்மங்களைக் கழித்துக் கொள்வதற்காகப் பிறக்கிறோம். ஆனால், பகவானுடைய பிறவிக்குக் கர்மங்கள் காரணமாகாது. பெருமானுடைய விருப்பம், இச்சை - நம்மைக் காக்க வேண்டும் என்கிற துடிப்பு. அதுவே அவர் பிறவிக்குக் காரணமாகிறது. ஆக, கர்மங்களால் பிறக்கவில்லை என்பதால், 'பிறப்பிலி' என்று கொண்டாடப்படுகிறான். நம் போன்றோரைக் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் பிறக்கிறான் என்பதால், 'பிறக்கிறான்' என்று போற்றப்படுகிறான். இப்படி இரண்டுமே உடைய பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.

No comments:

Post a Comment