Monday, May 27, 2019

Thiruvidandhai temple

தொண்டைநாட்டு திருப்பதிகள் 22 பதிவு  54

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏

திருவிடவெந்தை   03

     மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்கும்
இத்தலத்தின் (SSI 258 of 1910) கல்வெட்டு செய்தியைக் கூறுகிறது. 

     8. முதல் ராஜராஜசோழன் ராஜராஜசோழத் தேவர், குலோத்துங்க
சோழன் போன்றோர் இங்கு கைங்கர்யம் செய்து, இவர்கள் தொடர்பான
கல்வெட்டுகளும் காணப்படுவதால் இது ஒரு காலத்தில் சோழநாட்டுக்கு
அடங்கிய பகுதியாகும், சோணாட்டுத் திருப்பதியாகவும் விளங்கி இருத்தல்
வேண்டும். 

     9. கலிச்சிங்கன் என்ற பெயரில் திருமங்கையாழ்வாருக்கு இங்கு ஒரு
மடம் இருந்த செய்தியும் கல்வெட்டால் அறிய முடிகிறது. இது மிகவும்
தொன்மையான மடம். மலையாளத்திலிருந்து யாத்திரையாக வந்த சில
வியாபாரிகள் இத்தலத்தின் தீப கைங்கர்யத்திற்கு பொன் அளித்த செய்தியும்
கல்வெட்டால் அறியப்படுகிறது. 

     10. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில்
உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென
தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர். 

     11. திருமங்கையாழ்வாரால் மட்டும் 13 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்டதலம். தமது சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார்
இக்கிராமத்தின் எழிலைச் சொல்லுகிறார் பாருங்கள். 
 

     "காரார் குடந்தை கடிகை கடன்மல்லை
     ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை"
     12. திருவிடவெந்தை என்று சொன்னால் யாருக்கும் தெரியாது.
திருவடந்தை திருவடந்தை என்று சொன்னால்தான் தெரியும்.
சென்னையிலிருந்து வரும் பேருந்துகளிலும் திருவடந்தை என்ற பெயரே
காணப்படுகிறது. 

     13. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். 

     14. இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில்
பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம்
என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

   15. எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக்
கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து
ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள்
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும்
எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது) 

     16. நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில்
மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டுவேண்டிச்
செல்வர் அவர்கட்கு திருமணம் நடைபெறுவதும் கண்கூடு. 

     17. திருவிடவெந்தை எம்பெருமானைப் பற்றி தமது 108
திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளைய்யங்கார் கூறுகிறார். 

     எத்தனையோ பிறவிகள் போயிற்று. அவற்றில் எல்லாம் செய்த கொடு
வினைகள் விடாதே பின்தொடர்ந்து விரட்டி வந்து வாட்டியது. இந்தப்
பிறவியிலோ நான் வேறுயாருக்கும் அடிமை செய்யாது எம்பெருமான்
ஒருவனுக்கே அடிமை பூண்டொழுகலுற்றேன். இதற்குமுன் நான் குற்றேவல்
செய்தேன். அதாவது மானிடர்க்கு அடிமைப்பட்டு வயிறு வளர்த்தேன். இது
குற்றமுள்ள அடிமையாயிற்று. ஆனால் இந்தப் பிறவியிலோ நான்
எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்வதென்று தீர்மானித்து அதன்படி
ஒழுகினேன். எனவே இது வழுவிலா அடிமையாயிற்று. 

     இவ்வாறு திருவிடந்தை எம்பெருமானுக்கே அடிமைப்பட் டேனென்று
தெரிந்ததும் என்னைப் பின் தொடர்ந்து வந்த பாவமெல்லாம் பயந்து 
கொண்டு ஓடிப்போய்விட்டன. 
 

     நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
     கொன்று திரியும் கொடுவினையார் - இன்று
     வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
     திருவிட வெந்தகைக்கே செறிந்து.

ஆழ்வார் எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏

வானமாமலை ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளைமுதல்  திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) திவ்யதேசம் பற்றி காணலாம் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

No comments:

Post a Comment