Monday, May 27, 2019

The stuti of Godha - Andaal

கோதைத் துதி-20
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 05.05.2019)

பகவான் கீதையில்,  " ஓ..! அர்ஜூனா..! எவர்கள் என்னை எவ்விதமாக வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே நின்று நான் அருள்புரிகின்றேன்..!" என்கிறார்..!

கௌரவர்கள் படைபலத்தை விரும்பினார்கள்..! 

பாண்டவர்கள் பரந்தாமனை விரும்பினார்கள்..!

பாண்டவர்களுக்காக கண்ணன் பட்டபாடு கொஞ்சமா.. நஞ்சமா..?

ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன்..!  பக்திக்கு உட்பட்டவன்..!

அவனை ஆஸ்ரயிப்பவர்களுக்கு அவன் அமுதம்..!  

வஞ்சகர்களுக்கு நஞ்சு..!

"உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
ஆகி, உன்-தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி, அகல் இடம் புடை சூழ்
அடு படை அவித்த அம்மானே..!
அமரர் தம் அமுதே..!  அசுரர்கள் நஞ்சே..!
என்னுடை ஆர் உயிரேயோ..! "  (திருவாய்மொழி 8-1-4)
எனப் பாடுகின்றார் ஸ்வாமி நம்மாழ்வார்.

கௌரவர்களின் சேனை அகன்ற பூமியின் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றது..! அப்படைகளை அடியோடு அழித்தாய்..!  தேவர்களுக்கு அமுதே..!  அசுரர்களின் நஞ்சே..! என்னுடைய அரிய உயிரே..! உன்னுடைய அடியார்கள் எப்பொழுதும் விரும்புகின்ற வடிவமே உன்னுடைய வடிவமாகி, உனக்கு அடியார்களாகிய அவர்கள் உகந்து ஈடுபடுவதற்கு இடமாக நீ செய்த செயல்கள் மிகவும் மாயைப் பொருந்தியவை..!   இவ்வாறு அடியார்கள் இட்ட வழக்காக இருக்கிறாய் என்னும் ஞானத்தாலே நான் தரித்திக்கிறேன்..! எனினும் அடியேன் வினைவயப்பட்டவனாகையினால், இதுவும் பொய்யோ என்று ஐயுறுகின்றேன்..!

ஸ்வாமி நம்மாழ்வார் போன்றுதான் ஆண்டாளும் ஐயுறுகின்றாள்..! 

பிரவாற்றாமையினால் அரற்றுகின்றாள்..!  

பேதலிக்கின்றாள்..! 

இறுதியில் வெல்கின்றாள்..!  

அவளிட்ட வழக்காக அரங்கன் மாறுகின்றான்..!  

அவள் விரும்பியபடியே அவளை விட்டு அகலாது இருக்கின்றான்..!  

ஆண்டாள் அவனுக்கு ஒரு சுதந்திரமும் கொடுக்கவில்லை..!  

ஸ்வதந்திரனாக ஆனால் எங்காவது அவளை விட்டுப் பிரிந்துவிட்டால் என்ன செய்வது..?.!   

ஒரு பக்கம் தானும், மறுபக்கம் தன் தந்தையையும் நிறுத்தி வைத்து,  அங்கிங்கு எங்கும் சுதந்திரமாக அசையாதபடி, அன்பினால் கட்டிப் போட்டிருக்கின்றாள்..!

ஸ்ரீவில்லிபுத்துாரில் சித்திரை ரேவதி - ரங்கன் அவதார தினத்தன்று  ரங்கமன்னார் பெயரளவிற்குப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் வந்துவிடுவார்..! 

பின்னா் ஆண்டாள்தாம் புறப்பாடு கண்டருளி, ரங்கநாதன் ஸம்பந்தமான பாசுரங்கள், கொண்டாட்டங்கள் அனைத்தையும் ரசித்துக் கொண்டாடுவாள்..! 

அவனை நோகாமல் பூப்போன்று காப்பாள்..!
  
ஸ்வாமி தேசிகன் பாடுகின்றார்..!  ரங்கநாதன் சமஸ்த லோகத்திற்கும் நாயகன்..! அவன்தான் இந்த ஜகத்திற்கும் பிதா..! ஆயினும் உன் திருமேனி ஸ்பர்ஸம் பட்ட மாலையினை அவன் தரித்துக்கொள்வதால் அவனது திருமேனி மேலும் பொலிவடைந்தது..! நீ காதலுடன் அவனைப் பார்க்கும் அரைக்கண் பார்வை அலையலையாய் அவன் சுந்தர தோள்களில் நீலோத்பல (கருநெய்தற்) மாலைப் போன்று ஒரு அதிர்வினை ஏற்படுத்துககின்றது..! நீலோத்பல புஷ்ப மாலை ஒருவிதமான ஈரப்பசையுடன் குளிர்ச்சியாகயிருக்கும். அது போன்று அவன் உன் காதலினால், பக்தியினால் குளிர்ந்து போகின்றான்..!  நீ சாற்றும் மாலைகளை, நீ தலைநிமிர்ந்து அவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தம் திருமுடியில் சாற்றிக்கொண்டு, ஆசையோடிருக்கின்றான் என்கிறார்..!

20. தந்யே ஸமஸ்த   ஜகதாம் பிதுருத்தமாங்கே 
      த்வந்மௌளி  மால்யபர  ஸம்பரணேந  பூய : | 
      இந்தீரவ  ஸ்ரஜ மிவாதததி  த்வதீ யாநி 
      ஆகேகராணி  பஹூ மாந  விலோகி தாநி  ||

ஸமஸ்த லோக  நாயகனான ---எல்லா உலகங்களுக்கும்  பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது, நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் --அதைத் தரித்ததால்,  தந்யமாயிற்று   மேலும், நீ, அடங்காத காதலுடன்  அரைக்கண்களால்  , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து, அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்)மாலைபோல் அமைந்துள்ளது. தலை குனிந்து  நீ நாணி நிற்கிறாய்; ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், நீ  ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்  (உருப்பட்டூர் ஸ்ரீசௌந்திரராஜய்யங்காரின் விளக்கவுரை)

தாஸன் - முரளீ பட்டர்

No comments:

Post a Comment