Tuesday, April 16, 2019

Vishnu Sahasranama 239 to 249 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ரநாமம் - 27

239. ஸுப்ரஸாத: - அருள் மிகுந்தவர். அபகாரவதாமபி சிசுபாலாதீனாம் மோக்ஷ ப்ரதாத்ருத்வாத் – அபகாரம் செய்தவ்ர்களைக்கூட தண்டனை மூலம் நற்கதிக்கு கொண்டுசெல்பவர் , சிசுபாலனைப்போல. அவர் கையால் வதம் செய்யப்பட்டவர்களுக்கு நற்கதி கிடைக்கிறது. His retribution is for redemption.

240. ப்ரசன்னாத்மா- சுத்தசத்வ ச்வரூபியானதால் விருப்பு வெறுப்பில்லாத தெளிந்த மனதை உடையவர். அநுக்ரஹிக்கும் தன்மை உள்ளவர். எப்போதும் ஆனந்த ஸ்வரூபர்

241. விச்வத்ருக்- உலகைத் தாங்குபவர். விச்வம் தரதி இதி. விச்வத்ருக் , விச்வஸ்ருக், உலகைப் படைத்தவர் என்பது பாட பேதம்.

242. விச்வபுக்-விச்வம் புங்க்தே ,பாலயதி இதி. உலகைக்காப்பவர் சம்ஹாரகாலத்தில் புசிப்பவர். 
உபத்ரஷ்டா அனுமந்தா ச பர்த்தா போக்தா மகேஸ்வர: - (ப.கீ. 13.22) 
பரமாத்மா எல்லா உயிர்களுக்கும் அந்தர்யாமி ஆதலால் அவரே சாட்சியாய் நிற்கிறார், அனுமதிக்கிறார், தாங்குகிறார் , அனுபவிக்கிறார் ( அதாவது அந்தராத்மா இல்லையேல் அனுபவம் இல்லை )

"யஸ்ய ப்ரம்ம ச க்ஷத்ரஸ்ச உபே பவதி ஓதன: ம்ருத்யு: யஸ்ய உபசேசனம் " கடோபநிஷத்.

'எவருக்கு ப்ரம்ம க்ஷத்ரியர்கள் முதலியோர் உணவாகவும் (அதாவது எல்லா ஜீவர்களும்) யமன் ஊறுகாயாகவும் உள்ளதோ அதுதான் பரப்ரம்மம். '
யமன் ஊறுகாய் அல்லது side dish. ப்ரபஞ்சம் சம்ஹரிக்கப்படுவதற்கு மரணமே காரணமாக இருப்பதால்.

243. விபு:- விவிதம் பவதி ப்ரம்மத் ஸ்தம்பபர்யந்தம் இதிவிபு:
நான்முகனில் இருந்து புல் வரை பலவிதமாக இருப்பதால் விபு:, எங்கும் நிறைந்தவர்

244.ஸத்கர்த்தா- ஸத்காரம் என்றால் கௌரவிப்பது (உ-ம் அதிதி ஸத்காரம் ) ஸதாம் ஸத்கரோதி இதி ஸத்கர்த்தா , சாதுக்களை கௌரவிப்பவர். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்பதனால் நல்லோரைப் போற்றி பூஜிப்பவர் என்பது சொல்லாமலே விளங்குகிறது. தர்மரின் ராஜசூய யாகத்தில் அதிதிகளின் பாதத்தை அலம்பிப் பணி செய்தார் அல்லவா!

வடமொழியில் 'தண்டஅபூபிகா நியாயம்' என்று ஒரு சொலவடை உண்டு. அதன் பொருள் என்னவென்றால் தண்டம் அதாவது தடியை அபூபிகா வடையைக் காகங்களிடம் இருந்து காக்க வீசும்போது காகம் மட்டுமல்லாமல் மற்ற எல்லா பறவைகளும் பறந்துவிடும் அல்லவா? அதுபோல எல்லோரையும் காப்பவர் நல்லோர்களை காப்பார் என்று சொல்ல வேண்டுமா என்று பொருள்.

245.ஸத்க்ருத: -நல்லோரால் பூஜிக்கப்படுபவர்.

மஹாத்மானஸ்து மாம் பார்த்த தைவீம் பிரக்ருதிம் ஆஸ்ரிதா: 
பஜந்தி அனன்ய மனஸ: ஞாத்வா பூதாதிம் அவ்யயம் (ப.கீ. 9.13)

மகாத்மாக்கள் தெய்வத்தன்மையை அனுசரிப்பவர்களாய் எல்லாவற்றிற்கும் ஆதியும் அழிவற்றவனும் ஆன என்னை அறிந்து பூஜிக்கிறார்கள்..

246.ஸாது: -ஸாத்நோதி விச்வஸர்ஜனாத்மகம் கர்ம – பிரபஞ்ச சிருஷ்டி முதலியவைகளை செய்பவர். க்ருதம் ஜகத் ஸஹஜபாவேன கமயதி இதி- சிருஷ்டித்த உலகை நட்புடன் நடத்துபவர். 
பக்தர்களுக்கு அவர் சாது, அதாவது அவர்களுக்கு,தூது போகவோ, தேரோட்டவோ எது வேண்டுமானாலும் செய்வார்.

247. ஜஹ்னு: -'ஹா' என்றால் விலக்கிவிடுவது. அபஹ்னுதே அபனயதி இதி ஜஹ்னு: பக்தியில்லாதவரை விலக்கிவிடுகிறார் ,அதாவது தன்னுடைய ஸ்வரூபத்தை மறைக்கிறார். பக்தர்களுடைய பாபங்களை விலக்கி விடுகிறார்.

248. நாராயண: - நாரானாம் அயன: நாராயண: நாரா: என்பது மஹத் முதலிய தத்வங்கள் . மஹத்>அஹங்காரம்>பஞ்ச தன்மாத்திரைகள் (சூக்ஷ்ம பூதங்கள்) > ஸ்தூல பிரபஞ்சம். எல்லாம் மூன்று குணங்களின் வேறுபாடே . இவைகள் நாரா: எனப்படுகின்றன. அவைகளின் இருப்பிடம், அதாவது அயனம் நாராயணனே.

இன்னொரு பொருள், நாரா: அயனம் அஸ்ய இதி நாராயண: . அந்தர்யாமியாக எல்லாவற்றிற்கும் உள் இருப்பதால அவைகள் பகவானுடைய இருப்பிடம் அல்லது அயனம் ஆகின்றன. அதனால் நாராயணன் என்ற நாமம் ஸர்வவ்யாபித்வம் ஸர்வாந்தர்யாமித்வம் இரண்டையும் குறிப்பிடுகிறது.

'யச்ச கிஞ்சித் ஜகத்சர்வம் த்ருச்யதே ச்ரூயதேபி வா , அந்தர்பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:'- நாராயண சூக்தம்.

'இந்த பிரபஞ்சத்தில் காணப்படுபவை கேட்கப்படுபவை எல்லாவற்றிற்கும் உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் நிற்கிறார்.'

249. நர: - நயதி இதி நர:ப்ரோக்த: பரமாத்மா ஸனாதன: - வழி நடத்துபவர்.

  

No comments:

Post a Comment