Wednesday, April 17, 2019

Kamakshi darshanam -Periyavaa

பெரியவா திருவடியே
சரணம் .

ஸ்ரீ த்யாகராஜ பண்டிதர் என்பவர் பெரிய வேத வித்து. தஞ்சாவூரை சேர்ந்த இவர், நம்முடைய பெரியவாளுக்கு பல வர்ஷங்கள் நிழலாக இருந்து அப்படியொரு கைங்கர்யம் பண்ணியவர். பெரியவாளுடைய அத்தனை தேவைகளையும், பெரியவாளுடைய ஒரு சின்னக் குறிப்பு கூட இல்லாமல், தானாகவே அறிந்து, செய்து வந்த புண்யவான்.

பெரியவா எப்போதுமே தன்னோடு வைத்துக் கொண்டிருக்கும் காமாக்ஷிக்கு பூஜை பண்ணும்போது த்யாகராஜ பண்டிதர் ஒரு பெரிய துணியை, தன் இரு கைகளாலும் அகலமாக ஸ்க்ரீன் மாதிரி பிடித்துக் கொண்டு நிற்பார். பெரியவா உள்ளே என்ன பண்ணுகிறார் என்பது துளி கூட வெளியே தெரியாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் நல்ல உயரமாக இருந்ததால், நிஜமாக பெரிய திரை போட்டதுபோல் பிடித்துக் கொண்டு நிற்பதில் எந்த ஸ்ரமமும் அவருக்கு இல்லை.

"ஒரு சின்ன குறிப்பு கூட, நா….குடுக்க வேண்டிய அவஸ்யம் இல்லாதபடி இப்டி பாத்துப் பாத்து பண்றியே….பதிலுக்கு நா…..ஒனக்கு பண்ண வேணாமா?…"

பகவான் இப்படி நினைத்திருப்பானோ என்னவோ?

ஒருநாள் திரைக்கு அந்தப்பக்கம் தன்னுடைய காமாக்ஷிக்கு, பெரியவா பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். த்யாகராஜ பண்டிதர் வழக்கம் போல் திரையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

ஆனால், அவருக்கு அன்றைக்கு என்னவோ பூஜை ரொம்ப நேரம் நடப்பதுபோல் தோன்றியது. அவருடைய எண்ணம் நிஜந்தான் என்பது போல், அவருக்கு கைகள் வலிக்க ஆரம்பித்தன.

"என்னாச்சு? பெரியவா இன்னிக்கு ரொம்ப நேரமா பூஜை பண்றாளே?………"

ரத்த ஓட்டம் குறைந்ததால் மரத்துக் கொண்டிருக்கும் கை வலி, இந்த யோஜனையோடு சேர்ந்ததும், லேஸாக வலதுகைப் பக்கம் பிடித்துக் கொண்டிருந்த திரை சற்று தாழ்ந்தது…….

ஒரே ஒரு க்ஷணம்!

பண்டிதரின் பார்வை உள்ளே பெரியவா பக்கம் விழுகிறது……..

ஜகத்குருவானவர், தன்னுடைய பாரிஷதருக்கு "இந்தா! பிடி! என்னுடைய அபரிமிதமான அனுக்ரஹத்தை!..." என்று ரொம்ப ஸஹஜமாக வாரித் தெளித்தார்!

"அங்கே! சின்னச்சிறு குழந்தை வடிவில் ஸர்வாலங்கார பூஷிதையாக 'தகதக'வென கோடிஸூர்ய ப்ரகாஶத்தோடு ஸாக்ஷாத் அம்பிகை காமாக்ஷி அமர்ந்திருந்தாள் ! 'ஶ்ருதி ஸீமந்த ஸிந்தூரிக்ருதபாதாப்ஜ தூளிகா" என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு மஹா ஸௌந்தர்யமான வர்ணனை வரும். அதாவது, வேதமாதா தன்னுடைய ஶிரஸை அம்பாளின் பாதங்களில் பதியும்படி நமஸ்காரம் செய்யும்போது, அவளுடைய ஸீமந்தத்தில் [நெற்றியின் உச்சி] பூசியிருக்கும் ஸிந்தூரமானது அம்பாளுடைய சிவந்த தாமரை பாதங்களில் படுவதால், அவை மேலும் சிவந்திருக்குமாம் ! அதோடு, தங்க கொலுஸுகளும், மணிகளும் கொஞ்சிட, ரத்னம் போல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும், அப்பேர்ப்பட்ட அந்த தேவியின் திருப்பாதங்களை, கோடிகோடியாய் ஸுகந்த புஷ்பங்களாலும், மஞ்சள் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து கொண்டிருக்கும், தன் திருக்கரங்களால் பற்றிக் கொண்டு விம்மிக் கொண்டிருந்தார், நம்முடைய பெரியவா!…"

ஆஹா! எப்பேர்ப்பட்ட தர்ஶனத்தை தந்துவிட்டார்!


No comments:

Post a Comment