Thursday, February 7, 2019

Srimad Bhagavatam skanda 7 adhyaya 7 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 7- அத்தியாயம் 7

பிரஹ்லாதனை மற்ற அசுரச் சிறுவர்கள் அவன் பக்திமானாக இருப்பதன் காரணம் கேட்டார்கள். அதற்கு அவன் கூறியதாவது,

ஹிரண்ய கசிபு மந்தர மலைக்குத் தவம் செய்யப்போகையில் தேவர்கள் அசுரர்கள் மேல் படையெடுத்தனர். இந்திரன் ஹிரண்யகசிபுவின் மனைவியை சிறைப்பிடித்து எடுத்துச்சென்றான். பயத்தினால் அவள் கதறுகின்றபோது தேவரிஷி நாரதர் அங்கு தோன்றினார். அவர் இந்திரனிடம் குற்றமற்ற அவளைக் கவர்ந்து செல்லுதல் தகாதென்று கூறி பிறன் மனைவியும் பதிவ்ரதையும் ஆனஅவளை விட்டுவிடுமாறு கூறினார்.

அதற்கு இந்திரன் அவளிடம் ஹிரண்யனின் வீரியம் கருவாக உள்ளது என்றும் அவள் பிரசவிக்கும் வரை தன்னிடம் வைத்துக்கொள்வதாகவும் கூற நாரதர் அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை மகானாகவும் பாகவதனாகவும் விளங்குவான் என்றும் அவனால் தேவர்களுக்கு நன்மையே விளையும் என்றும் கூறியதைக் கேட்டு அவளை விட்டுவிட நாரதர் அவளைத் தன் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச்சென்றார்.

ரிஷியை பக்தியுடன் பூசித்துப் பணிவிடை செய்தாள். கருணை மிக்க நாரத ரிஷி அவளுக்கு தருமத்தின் தத்துவத்தையும் நிர்மலமான ஞானத்தையும் உபதேசித்தார். பெண் தன்மையால் அவளுக்கு அது காலப்போக்கில் மறந்து விட்டது. ஆனால் அவள் கருவில் இருந்த பிரஹ்லாதனுக்கு அந்த நினைவு நீங்காமல் இருந்ததால் ஞானமும் பக்தியும் உண்டாயிற்று.

இதைக் கூறிய பிரஹ்லாதன் அவன் தோழர்களுக்கு உபதேசம் செய்தான். அவன் கூறியது,

"பிறத்தல், இருத்தல், வளர்தல், முதிர்தல், குறைதல், அழிதல் என்கிற ஆறு மாற்றங்களும் உடலுக்குதானே அன்றி ஆத்மாவுக்கு அல்ல. நான் ஆத்மாவே தேகம் அல்ல என்ற ஞானம் ஏற்படும்போது, பூமியில் மறைந்து கிடக்கும் பொன்னை எவ்வாறு அதை எடுக்கும் முறை அறிந்தவன் அதை அடைவானோ அது போல உடல்களாகிய பூமியில் ஞானி ப்ர்ம்மஞானத்தை அடைவான்.

விழிப்பு ,கனவு, ஆழ்ந்த உறக்கம் இவை நான் என்னும் உணர்வினால் வருபவை. அவற்றுக்கு அப்பால் சாட்சியாய் நிற்பதே ஆத்மா. ஆத்மாவை உணராத அறியாமையினால் வருவது சம்சாரம்.அதனால் நாம் செய்யவேண்டியது என்னவென்றால் அக்ஞானத்தினால் உண்டாகும் நான் என்ற உணர்வே கர்மத்திற்கும் அதன் விளைவான கர்ம பலனுக்கும் வித்தாகும் என அறிந்து அக்ஞானத்தை ஞானத்தின் மூலம் போக்க வேண்டும்.

இதற்கு எளிதான வழி பகவானிடம் பக்தி கொள்வதே ஆகும். ஈஸ்வரனும் பகவானும் ஆன ஹரியானவர் எல்லா உயிர்களிடத்தும் உறைகிறார் என்ற மனத்துடன் அவற்றை திருப்தி செய்யும் சாதனங்களால் செவ்வனே போற்ற வேண்டும். "

இவ்வாறு கூறிய பிரஹ்லாதன் அவர்களுக்கு ஹரிபக்தியை உபதேசித்தான். 
" பகவானின் குணங்களையும் அவர் லீலைகளையும் கேட்டு பக்தி ஏற்படுகிறது. பக்தி மேலீட்டால் ஒருவன் எப்போது அவர் நாமத்தைக் கூறினாலும் அவரை பூஜித்தாலும் , நினைந்தாலும் பரவசம் கொள்கிறானோ அப்போது சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு அவரை அடைகிறான்.

இந்த உலக போகங்கள் நிலையற்றவை. இன்பம் என்று நினைப்பதே பின்னர் துன்பம் ஆகிறது. அழியப்போகும் உடலின் மீது கொண்ட ஆசை , மனைவி, மக்கள் , உற்றார் , உறவினர் இவர்கள் மீது வைக்கும் பற்று இந்த உடல் உள்ள வரைதான்.

எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவான முகுந்தனை பக்தி செய்வதற்கு உயர்குடிப் பிறப்போ, தேவத் தன்மையோ, ரிஷித்தன்மையோ , நன்னடத்தையோ , விரிந்த அறிவோ போதுமானதல்ல. தானம், தவம்,யாகம் ,வ்ரதம் இவைகள் களங்கமற்ற பக்தி இல்லாவிடில் வெளி வேஷமே.

ஆகவே தன்னுயிரைப்போல் மன்னுயிரைக் கருதி எல்லா உயிர்க்ளுக்கும் உயிரும், ஈசனும், பகவானும் ஆகிய ஹரியிடம் பக்தி செலுத்துங்கள்.

தைத்யர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், ஸ்திரீகள், இடையர்கள், பறவைகள் , மிருகங்கள், யாவராயினும் அச்சுத பக்தியால் அவனை அடைந்திருக்கின்றனர். 
கோவிந்தனிடம் ஏகாந்த பக்தியும் , எங்கும் அவனையே காணுதலும் இருப்பதே உயர்ந்த நலமாகும்."

  

No comments:

Post a Comment