Thursday, February 7, 2019

Srimad Bhagavatam skanda 6 adhyaya 18/19 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 6 அத்தியாயம் 18/19

அத்தியாயம் 18/19
அடுத்து சுகர் பரீக்ஷித்திற்கு திதியின் புத்திர்ர்களான தைத்யர்களைப் பற்றிக் கூறலானார். 
அதிதி, திதி இருவரும் கச்யபருடைய மனைவிகள். அதிதியிடம் தேவர்கள் தோன்றினர். வாமனராக அவதரித்த பகவான் விஷ்ணு அவளுடைய கடைசி புத்திரர்.

திதியின் புத்திரர்கள் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்ய கசிபுவும் ஆவர். ஹிரண்ய கசிபுவின் புத்திரர்கள் ஸம்ஹ்லாதன், அனுஹ்லாதன், பிரஹ்லாதன், ஹ்லாதன் என்பவர். இவர்களில் ஸம்ஹ்லாதனின் மகன் பஞ்சஜனன். அனுஹ்லாதனின் மகன் மகிஷன். ஹ்லாதனின் புத்திரர்கள் வாதாபி, இல்வலன். ப்ரஹ்லாதனின் மகன் விரோசனன். இவனுடைய மகனான மகாபலியின் புத்திரன் பாணாசுரன். ஹிரண்ய கசிபுவின் மகளான சிம்ஹிகாவின் மகன் ராஹு.

திதியின் மற்ற புத்திரர்களான மருத்துக்கள் 49 பேர் . இவர்கள் தேவேந்திரனால் தேவர்களாக அழைத்துக் கொள்ளப்பட்டனர்.

பரீக்ஷித் சுகரிடம் இவர்கள் திதியின் புத்திரர்களாக இருந்தும் எவ்வாறு தேவர்கள் ஆனார்கள் என்று கேட்க சுகர் கூறலுற்றார்.

தன் புத்திரர்களான ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இவர்கள் இந்திரனை ஆதரித்த விஷ்ணுவால் கொல்லப்பட்டதைக் கண்டு திதி கோபத்தினால் இந்திரனைக் கொல்லும்ம் புத்திரனைப் பெற வேண்டி கச்யபரிடம் அதற்கு வழி கூறுமாறு வேண்டினாள்.

அவர் அவளை பும்சவனம் என்னும் வ்ரதத்தை ஒரு வருடம் நியமம் தவறாமல் அனுஷ்டித்தால் அவளுக்கு இந்திரனைக் கொல்லக்கூடிய புத்திரன் பிறப்பான் என்றும் நியமம் தவறினால் அவன் தேவர்களுக்கு அனுகூலனாகி விடுவான் என்றும் கூறினார்.

அந்த வ்ரதத்தின் நியமங்கள் பின்வருமாறு. 
உயிர்களை இம்சிக்கக்கூடாது. பிறரை சபிக்கக்கூடாது. பொய் பேசக்கூடாது. நகத்தையும் ரோமத்தையும் வெட்டக்கூடாது. அமங்கலமான பொருள்களைத் தொடக்கூடாது. நீரில் இறங்கி ஸ்நானம் செய்யக்கூடாது. கோபித்தல் கூடாது.

துர்நடத்தையுள்ளவர்களோடு பேசக்கூடாது. அசுத்தமான வஸ்திரத்தை தரிக்கக்கூடாது. உச்சிஷ்டத்தை சாப்பிடக்கூடாது. களைந்த மாலையை மீண்டும் தரிக்கக்கூடாது. கையினால ஜலத்தை ஏந்திப் பருகக்கூடாது.

அசுத்தமாகவும், ஆசமனம் செய்யாமலும், சந்தியாகாலத்திலும் விரிதலையுடனும், அலங்கரித்துக் கொள்ளாமலும் ,வாக்கை அடக்காமலும் வெளியில் செல்லக்கூடாது

கால்களை சுத்தம் செய்யாமலும், ஈரக்கால்களுடனும் , வடக்கோ மேற்கோ தலை வைத்துக்கொண்டும் , பிறருடனும், சந்த்யா காலத்திலும் சயநிக்கக்கூடாது.

சுத்த் வஸ்திரம் அணிந்து, எப்போதும் பரிசுத்தமாகவும், மங்கள ஸ்வபாவம் கொண்டவளாக, காலையில் சாப்பிடுவதற்கு முன் பசுவையும் பிராம்மணர்களையும் லக்ஷ்மீ தேவியையும் நாராயணனையும் பூஜிக்க வேண்டும்.

சுமங்கலிகளை மாலை சந்தனம் நைவேத்யம் , பூஷணம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும்.. பர்த்தாவையும் பூஜித்து உபசரித்து அவரைத் தன் வயிற்றினுள் புகுந்தவராக பாவிக்க வேண்டும்.

திதியும் கச்யபரிடம் இருந்து கர்பாதானம் பெற்று அவ்வாறே வரத்தை அனுஷ்டித்து வந்தாள். இந்திரன் அவளுடைய ஆஸ்ரமத்திற்கு வந்து அவளுக்கு சுச்ரூஷை செய்துவந்தான்.

அவள் வ்ரதத்திலிருந்து நழுவும் ஸமயத்தை எதிர்பார்த்து இருந்த இந்திரனின் நற்பயனாக ஒரு நாள் ஸாயங்காலத்தில் திதி வரத்தினால் களைத்தவளாக கால் அலம்பாமலும் ஆசமனம் செய்யாமலும் விதிவசமாய் தூங்கிவிட்டாள்.

அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரன் அவள் கர்பத்துள் தன் யோக மாயையால் பிரவேசித்து அவள் கருவை வஜ்ராயுதத்தால் ஏழு துண்டாக்கினான். அழத்தொடங்கிய அவற்றை அழாதே (மா ரோதி: ) என்று சொல்லி ,மேலும் ஏழு துண்டாக்கினான் . (7x7=49)

அவை எல்லாம் இந்திரனிடம் தங்களைக் கொல்ல வேண்டாம் என்றும் தங்கள் இந்திரனுக்கு சகோதரர்கள் என்றும் இறைஞ்சியபடியால் அவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

சுகர் ப்ரீக்ஷித்திடம், துண்டானபோதும், அந்தக்கரு இறக்கவில்லை. இந்திரனுடன் சேர்ந்து ஐம்பது மருத்துக்கள் ஆயின. திதி மஹாவிஷ்ணுவை துதித்தபடியால் அவரால், எவ்வாறு உங்களை அச்வத்தாமாவுடைய அஸ்திரத்திலிருந்து காப்பாற்றினாரோ அவ்வாறே அவை காக்கப்பட்டன என்று கூறினார்.

பின்னர் பரீக்ஷித்தின் வேண்டுகொளுக்கிணங்க பும்சவன வ்ரதத்தை விரிவாக வர்ணித்த சுகர் இந்த வ்ரதததை அனுஷ்டிப்போர் வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறுவார் என்றும் ஸ்திரீகள் நல்ல கணவரையும் புத்திரர்களையும் அடைவர் என்றும் கூறினார்.

ஆறாவது ஸ்கந்தம் முற்றிற்று.

அடுத்த் ஸ்கந்தம் ப்ரஹ்லாத சரித்திரம்

No comments:

Post a Comment