ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்8 -அத்தியாயம் 8-நரசிம்ஹாவதாரம்
பிரஹ்லாதனின் உபதேசத்தால் குருவின் சிக்ஷையாய் ஏற்காத மாணவர்களைக் கண்டு பயந்த குருபுத்திரன் ஹிரண்ய கசிபுவிடம் சென்று உள்ளதை உள்ளபடி தெரிவித்தான், அதைக் கேட்ட ஹிரண்ய கசிபு கோபத்தால் உடல் துடிக்க தன் மகனை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்று எண்ணினான்.
பிறகு அவன் காலால் மிதிபட்ட பாம்பைப்போல் சீறிக்கொண்டு மூவுலகும் நடுநடுங்கும் தன் கட்டளையை எந்த பலத்தால் மீறினான் என்று கேட்டான். அதற்கு பிரஹ்லாதன் கூறிய மறுமொழி பின்வருமாறு.
" அரசே , பிரம்மாதிதேவர் முதல் எல்லா ஜீவராசிகளும் எவரால் அடக்கி ஆளப்படுகின்றனரோ அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் பலமாக விளங்குகிறார்.
அவரே ஈஸ்வரர். அனைத்தையும் அளவிடும் காலஸ்வரூபி.அவரே அனைவருக்கும் ஆத்மா. முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட அந்த பரம புருஷனே இந்த பிரபஞ்சத்தைத் தன் சக்தியால் ஆக்கிரமித்துள்ளார்.
இதைக் கேட்ட ஹிரண்ய கசிபு அவன் சொற்களை சாகும் நிலையில் உள்ளவனுடைய பிதற்றல் என்று கூறி,
யஸ்த்வயா மந்தபாக்யோக்த மதன்ய: ஜகதீஸ்வர:
க்வாஸௌ யதி வா ஸர்வத்ர கஸ்மாத் ஸ்த்ம்பே ந த்ருச்யதே
(ஸ்ரீ,பா 8.. 8.13)
"பாக்கியமற்ற உன்னால் சொல்லப்பட்டபடி என்னைவிட வேறான உலகநாயகன் ஒருவன் உண்டென்றால் அவன் எங்கே ? எங்கும் இருக்கிறான் என்றால் அவன் ஏன் இந்தத் தூணில் காணப்படவில்லை?" என்றான்.
" பிதற்றும் உன்னுடைய தலையை உடலிலிருந்து நான் நீக்கிவிடப் போகிறேன். உன்னால் சரணமடையப்பட்ட ஹரி உன்னை இப்போது காப்பாற்றட்டும்." இவ்வாறு கூறிக்கொண்டு தன் வாளை எடுத்துக்கொண்டு சிம்மாசனத்திலிருந்து பாய்ந்து தன் முஷ்டியால் தூணைக் குத்தினான்.
அப்போது அண்டகடாஹம் வெடித்தது போன்ற அதிபயங்கரமான சப்தம் உண்டாயிற்று. பிரம்மா முதலியவர்கள் அவரவர் ஸ்தானத்தை எட்டிய அந்த சப்தத்தைக் கேட்டு தங்கள் உலகம் அழியப்போவதாக நினைத்தனர்.
( நாராயண பட்டத்ரி சொல்கிறார். அந்த கர்ஜனையைக் கேட்டு பிரம்மா தன் தாமரை ஆசனத்தில் இருந்து நழுவினாராம். ஒருவேளை தான்தானே ஹிரண்யனுக்கு இந்த வரங்களைக் கொடுத்தது என்ற பயத்தினாலோ என்னவோ!.)
பாகவதத்தில் நரசிம்ஹாவதாரம் பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது.
ஸத்யம் விதாதும் நிஜப்ருத்யபாஷிதம்
வ்யாப்திம் ச பூதேஷு அகிலேஷு ச ஆத்மன:
அத்ருச்யத அத்புதரூபம் உத்வஹன்
ஸ்த்தம்பே சபாயாம் ந மிருகம் ந மானுஷம் ( ஸ்ரீ. பா. 8.8.18)
தன் பக்தனுடைய வாக்கை உண்மையாக்குவதற்கும், எல்லா இடத்திலும் தான் இருப்பதை நிரூபிக்கவும் பகவான் மனிதனுமல்லாத மிருகமும் அல்லாத அத்யத்புத ரூபத்துடன் அந்த சபையில் இருந்த தூணில் தோன்றினான்.
இங்கு பக்தன் என்பது பிரம்மாவையும் குறிக்கும் அவர் கொடுத்த வரத்தை உண்மையாக்க ஹிரண்ய கசிபு கேட்டபடியே அந்த விதிகளை மீறாமல் தோன்றினான் அல்லவா? மனிதனும் இன்றி மிருகமும் இன்றி பிரம்மஸ்ருஷ்டியில் தோன்றாமல், பகலும் இன்றி இரவும் இன்றி மாலை வேளையில், உள்ளையும் இன்றி வெளியேயும் இன்றி வாயிற்படியில், ஆயுதங்கள் இன்றி தன் நகங்களாலேயே வனைக் கொன்றார் )
கரால தம்ஷ்ட்ரம் கரவால சஞ்சல
க்ஷுராந்த ஜிஹ்வம் ப்ருகுடீமுகோல்பணம்
ஸ்தப்தோர்த்வ கர்ணம் கிரிகந்தராத்புத
வ்யாத்தாஸ்ய நாஸம் ஹனுபேத பீஷணம் (( ஸ்ரீ. பா. 8.8.21)
பயங்கரமான தெற்றிப்பற்களும், கொடியதும் கூரியதுமான சுழலும் நாக்கும், நெரிந்த புருவத்துடன் கூடிய பயங்கரமான முகமும், அசைவற்று உயரத் தூக்கிய காதுகளும், மலையின் குகை போல் அகன்ற அத்புதமான வாயும், மூக்கும், பயங்கரமாகப் பிளந்த தாடையும்,
திவிஸ்ப்ருசத்காயம் அதீர்கபீவர க்ரீவோருவக்ஷஸ்தல அல்பமத்யமம்
சந்த்ராம்சுகௌரை: ச்சுரிதம் தநூருஹை: விஷ்வக்புஜாநீகசதம் நகாயுதம்
(ஸ்ரீ. பா. 8.8.22)
ஆகாயத்தைத் தொடும் உருவமும், பருத்த குட்டையான கழுத்தும் விசாலமான மார்பும், சிறுத்த இடையும், சந்திரகிரணங்கள் போன்ற உரோமங்கள் பரவிய தேகமும் ஆயுதங்கள் போன்ற நகங்கள் கொண்ட பல கைகளும், (அமைந்த நரசிம்ஹர் தோன்றினார்.)
அதைக் கண்டு மஹாமாயாவியான ஹரியால் வதம் ஏற்படும் என்று அறிந்தும் இந்த உருவம் என்ன செய்துவிடமுடியும் என்றெண்ணி அசுரயானை போல ஹிரண்ய கசிபு கதாயுதத்தைத் தூக்கிக்கொண்டு அவர் மேல் விட்டில் பூச்சி நெருப்பில் பாய்வதைப்போல் பாய்ந்தான்.
அடுத்த நிமிஷம் பெரிய பாம்பை கருடன் பிடித்தாற்போல் கதாதரராகிய விஷ்ணு கதையை தூக்கிக்கொண்டு பாய்ந்த அவனைப் பிடித்தார் . விளையாடும் கருடனிடம் இருந்து பாம்பு நழுவினாற்போல் அவன் அவர் கையிலிருந்து நழுவினான்.
பிடியினால் துன்புற்று நான்கு திசையிலும் சுழலும் அவனை பாம்பு எலியைப் பிடிப்பது போல் மீண்டும் பிடித்து, வாயிற்படியில் உட்கார்ந்து வஜ்ராயுதத்தாலும் காயப்படாத அவன் உடலைத் தன் துடை மேல் வைத்து சாயங்கால வேளையில் கொடிய விஷப்பாம்பை கருடன் கிழிப்பது போல் தன் நகத்தால் அவன் மார்பைப் பிளந்தார்.
அங்கு வந்த பிரம்மா முதலிய தேவர்கள் அவரைக் கண்டு அஞ்சி தூரத்தில் நின்று அவரைத் துதித்தனர்.
இன்று த்ரயோதசி . நரசிம்ஹாவதாரம் பதிவிடவேண்டும் என்று எண்ணினேன் காலை முதல் இன்டர்நெட் செயல்படவில்லை. நரசிம்ஹர் சரியாக சாய்ந்திர் வேளையில்தான் ஆவிர்பவிக்க எண்ணினார் போலும்.
No comments:
Post a Comment