Monday, January 21, 2019

Vallalaar

மஹான்கள் 
அருட்சோதி வள்ளலார்

பசி வியாதி நிபுணர் J.K. SIVAN

நாளை தைப்பூசம்.

1874ம் வருஷம் சித்தி வளாகத்தில் விளக்கேற்றிய வள்ளலார் அடிகள் நாள்.,

''இதோ இந்த தீபம் தான் இனி வணங்கவேண்டிய தெய்வம்'' என்று அன்பர்களிடம் கடைசி வார்த்தையாக கூறிவிட்டு உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டார். அன்று தை 19ம் நாள் பூசம் வந்தது. வள்ளலார் ஜோதியோடு கலந்தார். நாளைக்கு தை 21ம் நாள் தைப்பூசம்.

பிறகு அறையை திறந்து பார்த்த அன்பர்கள் அங்கு ஒருவரையும் காணவில்லையே. எங்கே சென்றார் வள்ளலார். தீபம் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது முன்னிலும் பிரகாசமாக. ''அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை''

அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த அறையை பார்க்க சாயந்திரம் 6 மணி வரை அனுமதியாம். நாளை வடலூரில் பக்த கோடிகள் நிரம்பி வழிவார்கள்.

வள்ளலார் ஒரு ஆச்சர்யமான மனிதர். மனிதர் என்று எப்படி சொல்வது? தெய்வம் மானிடனாக வந்த உரு வாயிற்றே.! அவர் எந்த குருவிடமும் தீட்சை பெறவில்லை. ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். அவரது ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை எக்ஸ்ரே தன்மை கொண்டதோ என்னவோ. பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. எங்கிருக்கிறார் என்று அறியமுடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார்.

மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும். நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் எதைப்பற்றியோ ஏதோ கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்). உடம்பை மூடிய ஒரு வெள்ளைத் துணி வேஷ்டியாகவும் உடலின் மேல் உரையாகவும் போர்த்திக்கொள்வார். ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு கவளம் அதுவும் ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கலந்த நீர் தான் ஆகாரம். சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின் தோளில் இருந்தபோதே சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) புரிந்துவிட்டது. பல பாடல்களில் அது வெளிப்பட்டது.

இந்த சந்நியாசிக்கு உலக இயல் பிடிக்கவில்லை, படமுடியவில்லையே இந்த துயரம் என்று கதறல். போதும் போதும் பட்டதெல்லாம் என்று ஒரு புலம்பல்:

''படமுடியாதினித் துயரம் பட முடியாதரசே 
பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என் 
உடல் உயிராதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் 
உடல் உயிராதிய எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் 
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் 
மணியே, குரு மணியே, மாணிக்க மணியே 
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே

இந்தப்பாட்டில் கண்டபடி, தானே, இறைவனின் உடல் உயிர் ஆவியானவர் அந்த மா மனிதர். சித்தர். ஞானி.

ஒரு ஆடு மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ?'' என்று பயந்துபோவார்.

''என் அப்பா, இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய்'. இது கொடிய விஷ நாகத்தினிடமும் கூட. அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.

'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் 
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன் 
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன் 
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய் 
வீக்களால் மயங்கினேன் விடத்தில் 
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம் 
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''

செடி கொடி தண்ணீரின்றி எங்காவது வாடி வதங்கி தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். 'ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா?' என்று உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவா காருண்யர் அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம்'' அவருக்கு. நமக்கும் கொஞ்சமாவது அவர் வழியில் போக கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஜீவ காருணியத்தைப்பற்றி அவர் கையாலேயே எழுதிய ஒரு சில வரிகள் நம் மனதைத் தொடவில்லையானால் நமது நெஞ்சம் வாடிய எந்த உயிரைப் பற்றியும் கவலையே கொள்ளாது.

தொடரும்.

Image may contain: 1 person, standing and text

No comments:

Post a Comment