திருப்பாவை- அன்று இவ்வுலகம்
24. அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்று முந்தைய பாசுரத்தில் சொன்னதை மறந்து அவன் வந்தவுடன் அவனுக்கு மங்களாசாசனம் செய்து தான் பல்லாண்டு பாடியவரின் புதல்வி என்று நிரூபிக்கிறாள்.
1.அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி-- மகாபலியை ஆட்கொண்ட வரலாறு. ப்ரஹ்லாதனின் வம்சத்தாரைக் கொல்ல மாட்டேன் என்று அளித்த வாக்குப்படி மகாபலியின் அகந்தையை மாத்திரம் அழித்து அவனுக்கு அருளினான். மூவடியால் உலகம் அளந்ததனால் அடி போற்றி என்கிறாள்.
பரதனுக்கே திருவடி கிடைக்கவில்லை. பாதுகைதான் கிடைத்தது. ஆனால் மஹாபலிக்கோ தன் தலையில் பகவான் திருவடியைத் தாங்கும் பாக்கியம் கிடைத்தது. ஓரடியால் மண்ணையும் ஈரடியால் விண்ணையும் அளந்தவன் மகாபலிக்கு அருளவே மூன்றாவது அடி வைத்தான்.
2. சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-ராவணனைக் கொல்வதற்காக காட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. அயோத்தி அரசனாக இருந்தே அதை செய்திருக்கலாம். ஆனால் தண்டகாரண்யம் சென்றது அங்குள்ள ரிஷிகளுக்கு அபயம் கொடுக்கவே.
தென்னிலங்கை செற்றாய் என்றால் இலங்கையை அழித்தாய் என்று பொருள் அல்ல. விபீஷணனுக்கு அதை ஏற்கெனவே கொடுத்தாகிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், தென்- அழகிய, நிலம் – தேசம், கை- கைக்கொண்ட, அதாவது இலங்கையை தன்கைக்குள் வைத்திருந்த ராவணனை செற்றாய் – அழித்தாய் என்பதாகும்.
3. பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி –உலகளந்த திருவடியின் இன்னொரு பெருமை. சகடாசுரனை சிசுபருவத்திலேயே உதைத்துக் கொன்றது. இது ஏன் சிறப்பாகச் சொல்லவேண்டும் என்றால் உலகளந்தது த்ரிவிகரமனாக. ஆனால் சிறிய சிசுவாக இருக்கும்போதே ஒரு பெரிய வண்டியை உதைத்து அது தூளாக வேண்டும் என்றால் அது வியப்புக்குரிய செய்கை அல்லவா. அதனால் தான் புகழ் போற்றி என்கிறாள்.
4.கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி- கன்று உருவத்தில வந்த அசுரனை எறிந்து அழித்தது அவன் கரங்கள். ஆனால் கழல் போற்றி என்பதன் பொருள்., அவன் கன்றை சுழற்றி எறிந்தபோது அவன் ஒரு கால் முன்னும் ஒரு கால் பின்னும் வைத்து நின்றிருந்த கோலத்தை அனுபவிக்கிறாள்.
5 குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி- குன்று குடையாய் எடுத்தது பெரிதல்ல உனக்கு அது ஸாதாரணம் ஆனால் கோபர்களைக் காக்கும் உன் குணமானது போற்றத்தகுந்தது. இதன் மூலம் பகவானின் சௌசீல்யம் குறிப்பிடப்படுகிறது.
ராமனுடைய பட்டாபிஷேகத்தில் ஒரு தொண்டுக்கிழவர் ராமா என்று கட்டிக்கொண்டாராம்.அப்போது ராமன் இது என் தந்தையே வந்து வாழ்த்துவதுபோல் உள்ளது என்றானாம். ஆயர்களுக்கு அவன் குடை பிடிக்கிறான். தருமருக்கு பட்டாபிஷேகம் செய்கிறான். அர்ஜுனனுக்கு தேரோட்டுகிறான் . இவை கிருஷ்ணாவதாரத்தில் அவனுடைய சௌசீல்யத்தைக் காட்டுபவை. இவ்வளவு ஏன்! அர்ச்சாவதாரமாக கோயில்களில் இருக்கையில் அர்ச்சகர் சொல்ப்டி கேட்கிறான். அவர் உணவு கொடுக்கும் வரை காத்திருக்கிறான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அதனால்தான் குணம் போற்றி என்கிறாள்.
6.வென்று பகை கெடுக்கும் – பகையை மட்டும் அழிக்கிறான் பகைவனை அல்ல.
போற்றி என்று ஆறுமுறை . இது பகவானின் ஆறு குணங்களான , ஐஸ்வர்யம், ஞானம், பலம், சக்தி, தேஜஸ், வீர்யம் இவைகளைக் குறிப்பது.
இந்தப் பாசுரம் சரணாகதியைக் கூறுகிறது. இது 24 வது பாசுரம். 2+4=6. சரணாகதியின் ஆறு அங்கங்களைக் குறிக்கிறது. த்ரிவிக்ரமன் கால் முத்திரை இட்டு எல்லாம் அவன் உடைமை என்று பறை சாற்றினான். அந்தத் திருவடியை சரண் அடைவோமாக என்று பொருள்.
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி- தென் – அழகிய (அதாவது நாம் விரும்பும்), நிலம் – சரீரம், சரீரத்தை கைவசம் கொண்ட மனம் . அதை நல்வழியில் நடத்துபவனின் திறன் சொல்லப்படுகிறது.
பொன்றச்சகடம்- வினையாகிய சகடத்தை பொன்ற, அதாவது அழியச்செய்தவன்.
கன்று குணிலா எறிந்தாய்- கன்று போல் மேல்மேலும் வரும் பாபங்களை அருள் என்னும் எறிதடியால் அடித்து அப்பால் எறியும் திருவடி போற்றி.
குன்று குடையாய்- வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம் போன்ற குணங்களாகிற குடையால் பாப மழையில் இருந்து நம்மைக் காக்கிறான்.
நின் கையில் வேல் போற்றி- கைங்கர்யத் தடையாக உள்ள பாப சம்ஸ்காரம்தான் நம் பகை. வேலாகிய பகவத் சங்கல்பம் அதை நீக்கிவிடுகிறது.
ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த , அன்று இவ்வுலகம் அளந்தாய் என்று மூன்று முறை த்ரிவிக்ரமாவதாரம் சொல்லப்படுகிறது. இது மகாபலியால் தர முடியாத மூன்று அடிகளை நான்
தருகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.
No comments:
Post a Comment