திருப்பாவை - மாரி மலை முழைஞ்சில்
(அற்புதமான பாசுரம். கொஞ்சம் நீண்ட பதிவு. பொறுமையுடன் படித்து நரசிம்ஹனின் அருள் பெறுக.)
23.மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
இந்தப் பாசுரம் நரசிம்ஹரைப் பற்றியது. நரசிம்மனைப் பற்றி வர்ணிப்பது முடியாத காரியம். நாராயண பட்டத்ரி நரசிம்ஹாவதாரத்தைப் பற்றிக் கூறுகையில் என்னால் அதைச்சொல்ல முடியவில்லை என்று அந்த தசகத்தை முடித்து விடுகிறார். பிறகு அடுத்த தசகத்தில் பக்தி மேலிட்டு அவனைப் பற்றி வர்ணிக்கும் அவாவுடன் அதிசயமான வார்த்தைகளில் கூறுகிறார் .
அதைப் படிக்கையிலேயே நமக்கு மயிர்கூச்செரியும்படி உள்ளன அந்த ஸ்லோகங்கள்.அப்படி இருக்கையில் இந்தப் பாசுரத்தை எவ்வாறு என் சிற்றறிவால் வர்ணிக்க முடியும்? முயல்கிறேன்.
மாரிமலை முழைஞ்சில் – மலை போன்ற ஹிரண்ய கசிபுவின் மாளிகையில் உள்ள தூண் என்று வைத்துக் கொள்ளலாம். முழைஞ்சில் என்றால் குகை. நரசிம்ஹம் அதற்குள் இருந்ததனால் அது குகை போன்றது.
மன்னிக்கிடந்துறங்கும்- மறைந்து உறங்கும் சிங்கம் போல வெளி வருவதற்கு தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தவன்.
இங்கு வரதராஜ பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திரத்தில் தேசிகர் சொல்வதைப் பார்ப்போமா?
அவர் சொல்கிறார். பகவான் நரசிம்ஹமாக உலகம் முழுவதும் வ்யாபித்திருந்தாராம். ஏனென்றால் ஹிரண்யன் எந்த இடத்தைக் காட்டுவானோ என்று. அதனால் அவன் வெளிவந்த அந்தத்தூணைத் தவிர மற்ற இடங்களில் அவன் இன்னும் இருக்கிறான் என்கிறார்.
ஸ்தம்பைக வர்ஜம் அதுனா அபி கரீச
நூனம் த்ரைலோக்யம் ஏததகிலம் ந்ருசிம்ஹ கர்பம்
( வரத ராஜ பஞ்சாசத் ஸ்லோகம் 23)
சீரிய சிங்கம் ----புறப்பட்டு- நரசிம்ஹாவதார வர்ணனை
சீரிய சிங்கம் –பகவான் பள்ளி கொண்டிருந்த போதும் சிங்கம் உறங்குகையிலும் மற்ற மிருகங்களுக்கு பயத்தை விளைவிப்பது போன்று தீயவர்களுக்கு பயத்தை உண்டாக்குகிறான்.
.அறிவுற்று- பக்தர்களின் குரல் கேட்டு
தீவிழித்து- கோபம் கொண்டு
முழங்கி- சிங்கத்தின் கர்ஜனை போல நரசிம்ஹன் தூணிலிருந்து வெளி வந்தபோது செய்த கர்ஜனை ஆயிரம் இடி முழங்குகுவது போல இருந்ததாம். உலகம் பூராவும், ஹிரண்யனின் உள்ளமும் நடுங்கியதாம்.
நாராயண பட்டத்ரி சொல்கிறார். அந்த கர்ஜனையைக் கேட்டு பிரம்மா தன் தாமரை ஆசனத்தில் இருந்து நழுவினாராம். ஒருவேளை தான்தானே ஹிரண்யனுக்கு இந்த வரங்களைக் கொடுத்தது என்ற பயத்தினாலோ என்னவோ!.
வேரி மயிர் பொங்க----புறப்பட்டு- நரசிம்மாவதாரம் பல பக்தர்களாலும் மஹான்களாலும் பல விதமாக அனுபவிக்கப்பட்டுள்ளது. பாகவதம் அதை அத்யத்புத ரூபம் என்கிறது.,
பூவைப்பூ வண்ணா- கிருஷ்ணாவதார ரஹஸ்யம் இதன் மூலம் சொல்லப் படுகிறது..
மாரி என்பது பாற்கடலின் நீராகும். மலை என்பது ஆதிசேஷன். அவனுடைய குஹை போன்ற உடலில் பகவான் படுத்துறங்கும் நாராயணனே நரசிம்ஹன்.அவனே பூதேவியின் வேண்டுகோளுக்கிறங்கி ,,
வேரிமயிர்----பேர்த்துதறி- தன் கருப்பு வெள்ளை கேசத்தை எடுத்து வீசினான். பூவைப்பூ வண்ணனாக அழகான் உருக்கொண்டான். ஆதிசேஷனை உதறி முதலில் அனுப்பினான்.
ஸஹஸ்ரநாமம் நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான் என்கிறது. அதாவது நரசிம்மமாக இருக்கையிலும் அவன் அழகுடையவன். முந்தைய பாசுரத்தில் திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் என்று அவன் கண்களை வர்ணித்த ஆண்டாள் இதில் தீவிழித்து என்கிறாள்.அதாவது தீயோர்க்குத் தீயெனக் காணும் கண்கள் பக்தர்களுக்கு குளுமையாக உள்ளன.
வேதாந்த தேசிகர் காமாசிகாஷ்டகத்தில் கூறுகிறார்.
ஸடாபடல பீஷண்ஏ(णे) ஸரபஸ அட்டஹாஸோத்படே
ஸ்புரத்க்ருதி பரிஸ்புரத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
க்ருபாகபடகேஸரின் தனுஜடிம்பதத்தஸ்தனா
ஸரோஜசத்ருசா த்ருசா வ்யதிபிஷஜ்ய தே வ்ய்ஜ்யதே
கிருபையினால் மாய சிங்க வடிவில் தோன்றிய பிரானே! உன்னுடைய உருவத்துக்கு மாறான நடவடிக்கையினால் உன் நிஜ ரூபம் தெரிகிறது. பயங்கரமான பிடரி மயிர், உரத்து பயமளிக்கும் அட்டஹாசமான சிரிப்பு, கோபத்தில் துடிக்கும் புருவம், இவற்றிற்கிடையே உன்னுடைய தாமரைக்கண்ணால் தயையுடன் அந்த அசுரக்குழந்தையை ஒரு தாயின் தயையுடன் கூடிய பார்வை.
பகவான் நரசிம்ஹராக பயங்கரமான உருவத்துடன் காட்சி அளிக்கிறார். சிலிர்க்கும் பிடரி மயிர் ,(சடா) உரத்த அட்டஹாசம். அவர் புருவம் கோபத்தில் துடிக்கிறது( ஸ்புரத்க்ருதிபரிஸ்புரத்). ஆயினும் பக்தர்கள் இதனால் ஏமாறவில்லை என்று கூறுகிறார் தேசிகர், அவனை கபடகேஸரி என்பதன் மூலம்.
அதனால்தான் ஆண்டாள் தீ விழித்து என்று கூறி உடனே பூவைப்பூ வண்ணா என்கிறாள்.
சீரிய சிங்காசனம் – நீதி வழங்கும் சிம்மாசனம் . அதில் உட்கார்ந்தால் அவன் கொடுத்த வாக்கை நிறைவேற்றியாக வேண்டும். அதனால்தான் இங்கு நரசிம்மனை பற்றி கூறியது. பிரம்மா கொடுத்த வரத்தையும் மீறாமல் பிரஹ்லாதன் "ஹரி எங்கும் உள்ளான்," என்ற வார்த்தையையும் மெய்ப்பித்தான்.
மாரி மலை முழைஞ்சில் என்பது வேதங்களைக் குறிக்கும் . வேதம் என்பது ஓர் மலை. அதில் உள்ள குகை என்பது வேதத்தின் ரஹஸ்யமான உபநிஷத்துக்கள். மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்பது அதன் உட்பொருளான பகவான். உபநிஷத்துக்களின் பொருளை உணர்வது அறிவுறுதல். அவ்வாறு அறிவுற்றவர் உலகில் சஞ்சரித்து தீ விழித்து, தன் ஞான பிரகாசத்தால், போதருமாபோலே , பகவானின் பெருமையை பரப்புவர். வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்த்துதறி என்பது எண்ணத்தாலும், வாக்காலும் , செயலாலும் பகவத் சேவைக்கு தங்களை அர்ப்பணிப்பதைக் குறிக்கும்
No comments:
Post a Comment