திருப்பாவை-ஒருத்தி மகனாய்
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
இந்தப் பாசுரத்தில் அவதார ரஹஸ்யம் சொல்லப்படுகிறது. கண்ணன் கீதையில்,' ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத:, த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம ந ஏதி மாம் ஏதி பாண்டவ,' என்கிறான். அதாவது " என் அவதார ரஹஸ்யங்களையும் , செயல்களையும் யார் உள்ளபடி அறிகிறானோ அவன் மறுபடியும் பிறப்பதில்லை . என்னையே அடைகிறான்." என்று பொருள்
'என் ஜன்மம்,' என்பதன் பொருள் யாது? 'அஜாயமானோ பஹுதா விஜாயதே ,' பிறப்பே இல்லாதவன் பல விதத்தில் பிறக்கிறான்,' என்று கூறுகிறது உபநிஷத். இது முரண்பாடு உடையதாகத் தொன்றினாலும் அது அப்படி அல்ல. பகவானுக்கு கர்மா கிடையாதாகையால் கர்ப வாசம் இல்லை.
பிறகு எப்படி ராமனாகவும், வாமனனாகவும், கிருஷ்ணனாகவும் பிறக்கிறான் என்றால் அவன் பிறப்பதில்லை அவதரிக்கிறான். தேவகி , கௌசல்யை, அதிதி இவர்கள் கர்பத்தில் அவனை சுமப்பதுபோல அவன் மாயையால் உணர்கிறார்கள். இந்த ரகசியம் எல்லோருக்கும் தெரிவதில்லை.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து-வேதாந்த தேசிகர் யாத்வாப்யுதயத்தில் . கிழக்கு திசையில் சூரியன் உதிப்பது போல் தேவகியிடத்தில் பகவான் தோன்றினான் என்கிறார். பிறந்தான் என்று சொல்லவில்லை. சூர்யன் எப்போதும் இருக்கிறான் நாம் அவனை கிழக்கில் முதலில் பார்க்கிறோம் . அதேபோல பகவான் எங்கும் இருக்கிறான். அவனை நாம் தேவகி புதல்வனாகக் காண்கிறோம்.
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர- இங்கு ஒளித்து என்பது கம்சனுக்கு பயந்து என்றல்ல பொருள். தன் நிஜ ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு மானுடக் குழந்தையாகத் தோன்றினான் என்று அர்த்தம். யாதவகுலத்தை ரட்சிக்க கோபாலனாக வந்தான். ப்ரஹ்லாதனை ரட்சிக்கத் தூணில் ஒளிந்திருந்தான். மகாபலியை ரட்சிக்கத் தன் நிஜ உருவை மறைத்து வாமனனானான். தண்டகாரண்யத்து ரிஷிகளை ரட்சிக்க தசரத ராமனாக வந்தான்.
.தரிக்கிலானாகி------நெருப்பென்ன நின்ற நெடுமாலே- கண்ணனையே நினைத்து அச்சத்தால் அவனையே எங்கும் கண்டான் கம்சன். நெருப்பை வயிற்றில் கட்டிக்கொண்டதுபோல் உணர்ந்தான். ஆனால் அவன் தேவகி வாசுதேவன் புத்திரன் அல்ல அவன் நெடுமாலே என்று உணர்ந்தான் இல்லை.
நெடுமாலே என்பதுதான் அவன் அவதார ரஹஸ்யம்.
திருத்தக்க செல்வம்- அவன சேவையே பெறர்க்கரிய செல்வம். வைராக்ய பஞ்சகத்தில் தேசிகர் , 'அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் ', "என்னுடைய பிதுரார்ஜித சொத்து இந்த அத்திகிரி மேல் இருக்கின்றது " என்று சொல்லி கிருஷ்ணதேவராயரின் அழைப்பை ஏற்க மறுத்தார்.
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்- நாங்கள் கேட்பதைக் கொடுத்தால் சம்சாரமாகிய பெரும் துயரம் தீர்ந்து உன் சேவையாகிய பெரும் இன்பம் அடைவோம் என்கிறாள்.
காயத்ரி மந்திரம் , அஷ்டாக்ஷரம் இவை இரண்டும் முக்தியடைய விரும்புவோருக்கு இரு தாயார்கள். காயத்ரி மந்திரத்தின் மூலம் பகவானின் அடியார் என்ற பிறவி வாய்க்கிறது அது தேவகிக்கு ஒப்பானது. அஷ்டாக்ஷர மந்திரம் முக்திக்கு அழைத்துச்செல்கிறது. ஆகவே அது வளர்ப்புத்தாயான யசோதையை ஒக்கும்.,
ஓரிரவு என்பது சம்சாரம் . தேஹாத்ம புத்தியினால் ஜீவன் இருளில் இருக்கிறது. பகவான் நம்முள் நெருப்புபோல இருந்து கொண்டு நாம் சரணாகதி செய்யும்போது நம்முள் உள்ள தீய எண்ணங்களாகிய அசுரர்களையும் நான் என்ற அகந்தையான கம்சனையும் அழிக்கிறார்.
சரணாகதியின் மூன்று தளங்கள்
1..ஸ்வரூப சமர்ப்பணம்
நம் ஸ்வரூபம் அதாவது ஆத்மாவை அவன் பாதத்தில் நான் உன்னுடையவன் என்ற பாவத்தில் சமர்ப்பிப்பது. இது 'ஒளித்து வளர ,' என்றதன் மூலம் நான் என்ற உணர்வை விடுத்து அவனுடைய அடியவன் என்ற மனோபாவத்தைக் குறிக்கிறது.
2. பலசமர்ப்பணம்- நம்செய்கையின் பலனை அவனுக்கு அர்ப்பணிப்பது. 'செல்வமும் சேவகமும்' என்பது நம் செய்கைகளின் பலன் அவன் சேவையே என்பதைக் கூறுகிறது.
3. பரசம்ர்ப்பணம்- நம்மைக் காக்கும் பொறுப்பை அவனிடமே ஒப்படைபப்து. இது 'அருந்தித்துவந்தோம்,' என்பதன் மூலம் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment