Monday, January 7, 2019

22nd paasuram angan maa thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- அங்கண்மாஞாலத்து

22.அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

அங்கண்மாஞாலம் என்றால் அழகிய உலகம். பகவானின் மாயையால் இந்த உலகம் நம் அஞ்ஞானத்தினால் அழகானதாகவும் ஆசைக்குரியதாகவும் தோன்றுகிறது. அதனால் உலக விஷயங்களில் பற்று உண்டாகிறது. இந்த அபிமானம் அகலுவதுதான் அபிமான பங்கம்.அது எல்லாமே பகவானுக்குரியது. நாம் இங்கு அவர் சேவைக்காக பிறப்பெடுத்துள்ளோம் என்ற எண்ணத்தால் ஏற்படுகிறது.

அரசர்---சங்கம் இருப்பார்- ஜராசந்தனால் சிறை வைக்கப்பட்ட அரசர்கள் கிருஷ்ணனால் மீட்கப் பட்டபோது, தங்கள் ராஜ்ஜியத்தை திரும்பப் பெறும் ஆசையை விட்டு அவனுக்கு சேவை செய்வதையே விரும்பினர். இதைத்தான் இந்த வரி குறிக்கிறது. 
அதுபோல நாங்களும் எல்லா ஆசைகளையும் விட்டு உனக்குப் பணி புரியவே வந்துள்ளோம் என்கிறாள்.

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூ- பாதி மலர்ந்த தாமரை மலர் பாதச்சிலம்புகளை ஒக்கின்றன. அதுபோல உன் செங்கண் எங்கள்மேல் சிறிதே திறந்த பார்வையுடன் விழ வேண்டும் என்று பொருள்.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்- சூரியனும் சந்திரனும் பகவானின் இரு கண்கள்.'சந்த்ரசூர்யௌ ச நேத்ரே,' என்கிறது உபநிஷத். இதன் பொருள் என்னவென்றால், அன்பர்களைக் காணும்போது சந்திரனைப்போல் குளிர்ந்திருக்கும். துஷ்டர்களை கண்டால் சூரியனைப்போல் தகித்து விடும். இங்கு குளிர்ந்து சந்திரனைப் போலவும் எங்கள் பாவங்களை எரிக்கும் சூரியனைப்போலவும் நீ பார்க்கவேண்டும் என்பது பொருள்.

பாதி மூடிய கண்கள் என்றால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்காமல் அவர்களை ரட்சிக்க மட்டுமே செய்யும் பார்வை என்பது.

சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ – கண்ணன் விழிக்கும் போது முதல் பார்வை தங்கள் மேல் பட வேண்டும் என்கிறாள். தேசிகர் யாத்வாப்யுதயத்தில், ஸ்ரீதேவியும் பூதேவியும் பகவான் காலடியில் அம்ர்ந்திருப்பது அவன் விழிக்கும்போது மற்ற எதையும் காண்பதற்கு முன் தங்களைக்காண வேண்டும் என்பதற்காக என்கிறார். அப்போதுதான் அவனிடம் பக்தர்களுக்காக சிபாரிசு செய்ய முடியுமாம்.

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்- பாவம் பிராயச்சித்தம் செய்தால் போகும் . ஆனால் சாபம் என்பது அனுபவித்தே தீரவேண்டும்.ஆனால் அதுவும் பகவான் கடாக்ஷத்தால் போகும் என்று பொருள்.

இந்தப் பாசுரத்தின் கருத்து , பல ஜன்மங்களுக்குப் பிறகு புண்ய வசத்தால் உன்னிடம் வந்துள்ளோம். எங்களை கருணையுடன் கடாட்சித்துக் காக்க வேண்டும் என்பது.

செங்கண் – அங்கண் – சிவந்த அழகான் விழிகள்.

இந்தப் பாசுரத்தை சேவித்தால் நம் மனோரதம் நிறைவேறத் தடையாயிருப்பவை எல்லாம் நீங்கும் என்று கூறப்படுகிறது,

  

No comments:

Post a Comment