Tuesday, January 1, 2019

17th paasuram ambarame tanneere- thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-அம்பரமே தண்ணீரே

17.அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் - 
நந்த கோபர் அம்பரம், அதாவது வஸ்திரம், தண்ணீர் , சோறு இவை தானம் செய்வதில் சிறந்தவர். கண்ணனையும் அவ்வாறே தானமாகக் கேட்கிறாள் ஏனென்றால் அவர்களுக்கு உண்ணும் சோறு, பருகும் நீர் , தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் அல்லவா!

அறம் செய்யும் –அறம் என்பது தர்ம சிந்தையுடன் கொடுப்பது. யாதவாப்யுதய காவ்யத்தில் வேதாந்த தேசிகர் கூறுகிறார், கண்ணன் பிறந்தபோது நந்தகோபர் கொடையில் சிந்தாமணியையும், கற்பகத்தருவையும் மிஞ்சிவிட்டாராம்.

யசோதா-யச: ததாதி இதி யசோதா. யச; என்றால் புகழ். ஆனால் வேதத்தில் யச: என்றால் பிரம்மன். கிருஷ்ணனாகிய பிரம்மனை உலகுக்குத் தந்தவள்.

அம்பரம் என்றால் ஆகாசம்.என்று ஒரு அர்த்தம்.' அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த என்ற அடுத்தவரி இதைக் குறிப்பிடுகிறது. இந்த வரியிலுள் அம்பரம் என்றால் ஆகாசம் என்று பொருள் கொண்டு அறிஞர்கள் இந்த வரியும் பகவானையே குறிப்பிடுவதாகக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

எப்படி என்றால்,அன்னம் என்பது பிரிதிவி . ஸ்ருஷ்டியில் ஆகாசம், நீர் , மண் என்ற கிரமத்தில் வருவதால். அதை அறம் செய்யும் , அதாவது சிருஷ்டி தர்மத்தை செய்தவன் எம்பெருமான். நந்தகோபாலன் என்பதும் அவனையே குறிக்கும் ஆனந்தம் தரும் கோபாலன் என்ற பொருளில்.

மேலும் அம்பரம் என்பதை வஸ்திரம் என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணன் திரௌபதிக்கு ஈந்தது வஸ்திரம். போரில் தாகம் மிகுந்த குதிரைகளுக்கு தன் கோலால் தரையைக் குத்தி நீர் கொடுத்தான். அக்ஷயபாத்திரத்தில் மிகுந்த ஒரு துளியை சாப்பிட்டு துர்வாசர் முதலியவர்களுக்கு அன்னம் கொடுத்தான்.

அம்பரம் ஊடறுத்து- ஓங்கி உலகளந்த- த்ரிவிக்ரமனாய் பிரம்மாண்டத்தை காலால் கிழித்து தன் பதம் அலம்ப நீர் வரவழைத்தான். அதுவே ஆகாசகங்கை ஆனது.

உம்பர் கோமானே – தேவாதி தேவன். 
செம்பொற்கழலடிச்செல்வா பலதேவா – செம்பொற்கழல் என்பது வீரக்கழல். இங்கு பலராமனின் அசுரரகளைக் கொன்றது, ஹஸ்தினாபுரத்தைத் தஙன் கலப்பையால் இழுத்து கங்கையில் விழசெய்தது, யமுனையை தன் ஜலக்ரீடைக்காக தானிருக்கும் இடத்திற்குத் திருப்பியது இவ்வாறான செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.

உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய்- பலராமன் ஆதிசேஷனின் அவதாரமாகையால் பகவானின் படுக்கையாகிய அவன் எழுந்தால் பகவானும் எழுந்து விடுவான்.

இந்தப் பாசுரம் அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது. அம்பரம் என்றால் ஆகாசம். அதன் குணம் சப்தம். ப்ரண்வம்தான் முதல் சப்தம்.அதனால் அது அஷ்டாக்ஷரத்தின் ஆரம்பமாகிய பிரணவம்.

உபநிஷத் சொல்கிறது, 'அன்னம் பிரம்ம இதி வித்யாத்.' அதனால் சோறு என்பது நாராயண சப்தம்.

தண்ணீர்- குளிர்ந்த நீர் நம சப்தத்தைக் குறிக்கிறது. நம: என்று சரணாகதி செய்வதால் சம்சார தாபத்தில் இருந்து ஜீவன் குளிர்ந்த நீர் வர்ஷம் போன்ற பகவானின் அருளைப் பெறுகிறான்.

அறம் என்பது ஆசார்யன் சேஷியாகிய பகவானிடம் ஜீவனாகிய சேஷனை சேர்ப்பித்து ஜீவனிடம் பகவானை சேர்ப்பிப்பது.

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்பது அஷ்டாக்ஷர மந்த்ரம்.,, மந்திரங்களுக்குள் தலையாயதாகையால். அது பகவானை நமக்கு கொடுப்பதால் யசோதைக்கு ஒப்பிடப்படுகிறது..

No comments:

Post a Comment