Tuesday, January 1, 2019

15th paasuram ellelan kiliye - thiruppavai in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை - எல்லே இளம் கிளியே

15. எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

இந்தப் பாசுரம் .ஆண்டாளுக்கும் உள்ளே இருக்கும் பெண்ணுக்கும் நடந்த வாக்குவாதமாக அமைந்திருக்கிறது. இந்தப்பெண் எல்லோரையும் விடச் சிறியவள்.ஆனால் பேச்சில் கெட்டிக்காரி. 
முன் பாசுரத்தில் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்பதை இவளும் சேர்ந்து பாடுகிறாள் ஆனால் எழுந்து வரவில்லை. அதனால் இளம் கிளி எனப்படுகிறாள்.

இன்னம் உறங்குதியோ- அவள் உறங்கவில்லை ஆனால் பரம பாகவதர்களான மற்றவர்கள் பதம் தன் வீட்டில் படவேண்டும் என்று பதில் கூறவில்லை. 
சில்லேன்றழையேன்மின்- அவள் ஏற்கெனவே கிருஷ்ணானுபவத்தில் ஆழ்ந்துள்ளதால் மற்ற பேச்சு கர்ணகடோரமாக உள்ளது.

நங்கை மீர் போதர்கின்றேன்- அவர்கள் இதைக் கேட்டு கோபிக்காமல் இருக்க இதோ வந்து விடுகிறேன் என்கிறாள்.
வல்லை உன்--------வாயறிதும்- உன்னைப்பற்றி நன்கு அறிவோம் என்று சொல்ல அதற்குப்பதிலாக நீங்கள்தான் வல்லீர்கள் என்று கூறிப்பின் நானேதான் ஆயிடுக என்கிறாள்.

நானேதான் ஆயிடுக என்ற சொற்கள் மிகவும் பொருள் செறிந்தவை. பாகவத அபசாரம் அடியோடு விலக்க வேண்டும். இதனால் பாகவத தாஸ்யம் சொல்லப்படுகிறது. மேலும் என் துக்கத்திற்கு நானேதான் காரணம் என் கர்மவினைதான் காரணம் என்று உணர்ந்து பகவானின் கிருபையை வேண்டுதல் கூறப்படுகிறது.

வல்லானைக் கொன்றனை மாற்றானை மாற்றழிக்க வல்லானை-இந்த வரிகள் பின்வருமாறு விளக்கப்படுகின்றன
.
வல்லனைக் கொன்றானை – கம்சனால் ஏவப்பட்ட யானையைக் கொன்ற கிருஷ்ணன். 
மாற்றானை என்றது இன்னொரு யானையாகிய கஜேந்திரன். அவனுடைய மாற்று அதாவது எதிரியான முதலையை, அழிக்கவல்லானை – அழித்தவன்.

மாற்றான் என்பது பகவானை எதிர்த்தவர்களையும் குறிக்கும் அவர்களுடைய மாற்று அதாவது விரோதத்தை மட்டும் அழிக்க வல்லான்.

ராவணனுக்கும் இன்று போய் நாளை வா என அவனுக்கு புத்தி வர இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தான். சிசுபாலனின் நூறு தவறுகளைப் பொறுத்தான். மகாபலியின் அகந்தையைமாத்திரம் அழித்து அவனுக்கு அருள் செய்தான். மாரீசனுக்கும் இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தான்.

உலக விஷயங்களில் ஈடுபட்டுக்கிடக்கும் நம்மை அந்தப் பற்றை அழித்து தன்னிடம் சேர்ப்பவன்.
இந்தப் பாசுரம் சரீரம் என்னும் கூட்டில் அடைபட்டுக் கிடக்கும் நமக்கு விழிப்பு வரச் செய்வது. கூண்டில் அடைபட்டு கொடுக்கப்பட்ட உணவைத் தின்று இறக்கைகள் வெட்டப்பட்டுள்ள கிளி போல நாம் இந்த உலக சுகத்தில் ஆழ்ந்து நம் உண்மை ஸ்வரூபத்தை அறிதல் என்ற இறக்கைகள் வெட்டப்பட்டு இருக்கிறோம்.

பகவான் நம்மை இவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாகி விட்டது இன்னம் உறங்குதியோ என்று கேட்கிறான்.ஆனால் நாம் அதை விரும்பாமல் சில்லென்றழையேன்மின் என்று சொல்வதைப்போல காதுகளை மூடிக்கொள்கிறோம்.

அதை உணர்ந்தாலும் குடும்பத்தை கவனிக்க வேண்டியது முதலிய சாக்குப் போக்குகளால் ஆன்மீகப் பாதையில் செல்வதை தள்ளிப்போடுகிறோம்.

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்பது, பகவானைப் பற்றி கேட்ட மாத்திரத்தில் அவனை நினைக்கவேண்டும் அதற்கு எந்த தாமதமும் இருக்கக்கூடாது என்பதாகும்.

இந்தப் பெண்ணைப்போல சிலர் ஸாமர்த்தியமாகப் பேசி உலக விஷயங்களை விட்டு வர முடியாததற்குக் காரணங்களைக் கூறுவர். விடுவது என்பது எப்போது எப்படி என்று யோசித்துச் செயவதல்ல. அப்படி யோசிப்பவர்களால் எவ்வளவு வயதானாலும் அங்கம் கலிதம் பலிதம் முண்டம் ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம், உடல் தளர்ந்தது தலை வழுக்கை ஆகிவிட்டது அப்போதும் ஆசை விட்ட பாடில்லை என்று பஜகோவிந்தம் கூறுவதுபோல பற்றை விட முடியாது.

  

No comments:

Post a Comment