Tuesday, January 1, 2019

16th paasuram naayaganaai ninra -thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- நாயகனாய் நின்ற

16.நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

பகவானின் தரிசனம் கிடைப்பதற்கு முன் த்வார பாலகர்களின் அனுமதியைப் பெற வேண்டும். இது வைஷ்ணவசம்ப்ரதாயத்தில் ததீயபுரஸ்காரம் எனப்படுகிறது. அதாவது பாகவதாராதனம் மூலம்தான் பகவதாரராதனத்தின் பலன் கிடைக்கும்.

நாயகனாய்--- வாயில் காப்பானே – கோயில் காப்பானே என்பது மாளிகை வாசலில் நிற்பவனையும் வாயில் காப்பானே என்பது பள்ளியறைக்கதவின் முன் நிற்பவனையும் குறிக்கும் எனக்கொள்ளலாம். அல்லது ஒருவனையே இரு சொற்களாலும் சொன்னதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

நந்தகோபன் திரு,மாளிகை கோவில் எனப்படுகிறது அதில் பகவான் இருப்பதால்.

கொடி தோன்றும் தோரணவாயில் – அரச மாளிகையின் முகப்பில் உள்ள கொடி அரசன் அங்கு இருக்கும்போது தோரணங்களால் அலங்கரிக்கப்படும். நந்தகோபன் மாளிகை அவ்வாறு உள்ளதால் கண்ணன அங்கு இருப்பதைத் தெரிவிக்கிறதாம்.-

கொடியை பற்றிய சுவையான விஷயங்கள் :
வில்லிபுத்தூரார் சொல்கிறார். துரியோதனன் கிருஷ்ணனுடைய மாளிகைக்கு வரும்போது, அங்குள்ள கொடி, 
'ஈண்டு நீவரினும் எங்கள் எழிலுடை எழுவியண்ணன் 
பாண்டவர்தங்கட்கல்லால் படைத்துணை ஆகமாட்டான்
மீண்டு நீபோக -----கைகளை தடுப்ப போன்று,' அசைந்தனவாம்.

கம்பன் காவியத்தில் இன்னும் ஒரு ரசமான வர்ணனையைக் காண்கிறோம்.
மையரும் மலரின் நீங்கி யான் செய் மாதவத்தின் வந்து 
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று அழிப்பதன்போன்றதம்மா

தாமரை மலரை விட்டு நீங்கி நாங்கள் செய்த தவத்தினால் திருமகள் இங்குற்றாள் என்று ராமனை அழைப்பது போல் அசைந்தனவாம்.

ஆயர்சிறுமியர்- வாயில் காப்போன் கண்ணனை தீயவர் அண்டாமல் பாதுகாக்கிறானாம். பகவானுக்குப் பல்லாண்டு பாடியவரின் மகளல்லவா? எல்லோரையும் காப்பவனையே காப்பவர்கள் என்கிறாள். நாங்கள் ஆயர்சிறுமியர் . அதனால் பயம் வேண்டாம் என்கிறாள்.

மணிக்கதவம்- ஆயர்பாடியில் உள்ள மாளிகைகள் அனைத்துமே தூமணி மாதங்கள் அப்படி இருக்கையில் அவர்களின் தலைவனான நந்த கோபன் மாளிகையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

பகவானின் தர்சனம் கிடைப்பதற்கு முன் கோவில் , கோபுரம், அழகிய வாசற்கதவு இவைகளைக் காண்கிறோம். ஆனால் அவன் முன் நின்ற பின் அவன் அழகைக் கண்டு மற்ற எல்லாம் மறந்து விடுகின்றது. . அது போல உள்ளே சென்றதும் எல்லாவற்றையும் மறந்து அவன் புகழ் பாடத் தொடங்கி விடுகிறாள்.

நென்னலே வாய் நேர்ந்தான்- கண்ணன் முன்னமே எங்களுக்கு அருள்வதாக வாக்களித்துள்ளான் என்கிறாள்.

ராமன் முன்னம் வாக்களித்துப் பின்னர் அதைக் காப்பான். ஆனால் கண்ணனோ நிச்சயமாக செய்வதாக இருந்தால்தான் வாக்களிப்பான். கூனியின் கூனை நிமிர்த்தியபோது அவள் இல்லத்திற்கு வருவதாக் வாக்களித்தான். அதே போல் சென்றான். 
த்ரௌபதிக்கு "வானமே இடிந்து விழுந்தாலும் இமயமலை பொடிப்பொடியாய் தகர்ந்தாலும் என் சொல் மாறாது," என்று வாக்களித்தவன்.,

அதே போல கீதையில் ' கௌந்தேய பிரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணச்யதி', "என் பக்தன் ஒருக்காலும் துயருறமாட்டான், " என்று சொல்கிறான்.

தூயோமாய் வந்தோம்- த்ரிகரணசுத்தியுடன் வந்தோம் என்கிறாள். அதாவது முதல் மனம் புத்தி மூன்றும் தூயதாக் வந்தோம் என்று பொருள்..

துயிலேழப்பாடுவான்- நாங்கள் வந்தது அவனைத் துயிலிலிருந்து பாடி எழுப்புவதற்கு.

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ- ஸாமி வரம் கொடுத்ததாம் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்றபடி உயர் பதவியில் இருப்போர் விருப்பப்பட்டாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எளிதில் காண விடமாட்டார்கள்.அதனால் நீ எங்களைத் தடுக்காதே என்கிறாள்.

இந்தப் பாசுரம் அஷ்டாக்ஷரம், த்வய மந்த்ரம், சரம் ஸ்லோகம் ஆகிய மூன்றையுமே உள்ளடக்கி இருக்கிறது.

நாயகனாய் நின்ற----கோயில்காப்பானே –இது மூலமந்திரமாகிய ஓம் நமோ நாராயணாய. நாயகனாய் நின்ற என்பது உலக நாயகனாகிய நாராயணன். அவனுடைய கோயில் என்பது பிரணவம்.நந்த கோபன் என்பது முக்தியாகிற ஆனந்தத்தைக் கொடுப்பவன். அது சரணாகதியினால்தான் கிடைக்கும் அதுதான் நம: என்னும் சொல்.

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே – இது த்வய மந்திரமாகிய ஸ்ரீமான் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே , ஸ்ரீமதே நாராயணாய நம்: என்பதாகும். கொடித்தோன்றும் தோரண வாயில் என்பது வைகுண்டம். காப்பான் என்பது பகவான். அவன் பாதம் சரணமடைந்தோருக்கு முக்தி தருவான் எனப்பொருள்.

ஆயர் சிறுமியரோமுக்கு----வாய் நேர்ந்தான் – இது சரம ஸ்லோகமான சர்வதர்மான் பரித்யஜ மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வாம் ஸர்வபாபேப்ய: மோக்ஷயிஷ்யாமி என்பது. அதாவது யாராயிருந்தாலும் செய்ய வேண்டிய ஒரே காரியம் அவனை சரணமடைவது என்பதாகும்.

துயிலெழப்பாடுவாம் ------மாற்றாதே அம்மாநீ-ஸம்சாரமாகிய நீண்ட துயிலில் இருந்து எழுவதற்கு ஆசார்யரை ரஹஸ்யத்ரய உபதேசம் செய்ய வேண்டுதல்.

நேய நிலைக்கதவம்-ஒவ்வொரு மந்திரமும் இரு கதவுகளைக் கொண்டது. மூலமந்திரம்- ஓம்- நமோ நாராயணாய. த்வயம் – இரு பாகங்கள் . சரம ஸ்லோகம் –இரு வரிகள்.

இந்தக்கதவுகள் ஆச்சார்யரின் அனுக்ரஹத்தால் திறக்கப்பட வேண்டும், அதாவது, உட்பொருள் அறியப்பட வேண்டும்.

  

No comments:

Post a Comment