Thursday, January 3, 2019

14th paasuram ungal puzhakkadai thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- உங்கள் புறக்கடை

14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்- செங்கழுநீர்ப்பூ காலையில் மலர்கிறது. அது பகவான் மேனியை அலங்கரிப்பதில் ஆசை கொண்டு மலர்கிறதாம். அதே காரணத்தால் ஆம்பல் (LILY) ஏமாற்றம கொண்டு கூம்பினதாம்.

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்----காஷாய வஸ்திரத்தைத் தரித்து பற்களை நன்றாக வெண்மையாக்கி தவம் செய்பவர்களாகிய சன்யாசிகள் தனுர்மாத ஆராதனத்திற்காக கோவில் திறப்பதற்கு சங்கை ஊதிக்கொண்டும் திறவுகோல் எடுத்துக் கொண்டும் செலகின்றனாராம்.

சங்கிடுவான் என்பதற்கு திறவுகோல் கொண்டு திறப்பதற்கு என்றும் பொருள். பிருந்தாவனத்தில் சங்கு ஊதிப் பிறகுதான் ஆராதனம்.

நாணாதாய் நாவுடையாய் –எங்களை முன்னமே எழுப்புவதாகக் கூறிவிட்டு இன்னும் தூங்க உனக்கு நாணம் இல்லையா என்று கேட்ட பின்னர் அவளை சமாதானம் படுத்துமாறு நாவுடையாய் என்கிறாள். அதாவது நல்ல வாக்கை உடையவள் பாடத்தெரிந்தவள் என்று பொருள்.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்- சங்கிற்குத்தான் முதலிடம். கருப்பூரம் நாறுமோ ? கமலப்பூ நாறுமோ என்று சங்கைப்பற்றியே பத்துபாடல் பாடினவள் அல்லவா?

இதில் பக்தியோகம் பக்தர்களின் சேர்க்கை இவை சொல்லப்படுகின்றன. எப்போதும் அழியாமல் இருக்கும் வீடு மோக்ஷம்.அதற்குப் புறக்கடை சம்சாரம். தோட்டம் என்றால் சரீரம்.

செங்கழுநீர், அஹிம்சை, இந்த்ரியநிக்ரஹம், எல்லா உயிர்களிடத்தும் தயை, பொறுமை, ஞானம், தவம், தியானம், சத்யம் என்கிற ஆத்மகுணங்கள். பகவானைப் பற்றிய அறிவு என்ற சூரியன் எழும்போது இவை மலர்கின்றன. ஆம்பல் என்பது காமக்ரோதாதிகள். இவை வாடிவிடுகின்றன.

நாணாதாய் என்பது நாமசங்கீர்த்தனம் செய்ய கூச்சம் கூடாது என்று பொருள். 
நாவுடையாய்- நாவு படைத்தது நாராயணன் புகழ் பாடுவதற்கே.

செங்கல் ----தவத்தவர்- திருமண் , ஸ்ரீசூர்ணம் அணிந்து சிவப்புக்கறை வெள்ளை வேட்டி அணிந்த பிரபன்னர்களைக் குறிக்கிறது.
.தங்கள் ----போதந்தார்- அவர்கள் இதயமே ஆலயம்., அங்கு உள்ள பகவானை தியானிக்கின்றனர். சங்கிடுவான் என்பது மனதை ஒருமுகப்படுத்தி அவன் நாமத்தில ஆழ்வது.

இந்தப் பாசுரம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கும் எனக் கருதப்படுகிறது. நாணாதாய்- நான் என்ற உணர்வு இல்லாதவர். நாவுடையாய் – அவர் பாணர் குலத்தவர்.

No comments:

Post a Comment