Thursday, December 20, 2018

Narada bhakti sutram 43,44,45 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரதபக்தி சூத்ரம்

43.துஸ்ஸங்க: சர்வதா ஏவ த்யாஜ்ய:

கெட்டவர்களின் நட்பு விலக்க வேண்டியதாகும்.

பராபக்தி வரும் வரையில் பேத பாவனையை ஒழிக்க இயலாது. நாம் எடுத்த இந்த ஜன்மமானது நம் பிராரப்த கர்மத்தை கழிக்கவே. கெட்ட சகவாசம் திருடர்களுடன் இருந்த ஒருவன் அவர்களுடனே சிறை வாசத்தைப் பெறுவதுபோல அவர்களுடைய கர்மாவில் பங்கு பெறுவதாகும். மேலும் அவர்களுடைய எண்ண அலைகள் நம்மை பாதிக்கும். அஜாமிளன் ஆஸ்திகமான் பிராமணனாக இருந்த போதிலும் ஒரு கெட்ட ஸ்திரீயுடன் சேர்ந்ததால் பாவியானது போல.

கூடாநட்பின் தீமையை பின் வரும் இரண்டு சூத்திரங்களும் விளக்குகின்றன.

44. காமக்ரோதமோஹ ஸ்ம்ருதிப்ரம்சபுத்தினாசகாரணத்வாத்

கூடாநட்பு காமம், குரோதம், மோகம், நினைவழிவு , புத்தி நாசம் இவைகளின் காரணமாக இருப்பதால்.

.இதை பகவான் கீதையில் விஸ்தாரமாகக் கூறியுள்ளார்.
த்யாயதோ விஷயான் பும்ச: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ அபிஜாயதே 
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: 
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாச: புத்தி நாசாத் விநச்யதி. (பக. கீ. 2.62/63)

இது எப்படி கூடாநட்பால் ஏற்படும் என்றால், அவர்களின் சகவாசமானது விஷய சுகங்களை நாடச்செய்கிறது. அதனால் அவற்றில் பற்று (ஸங்கம்) ஏற்படுகிறது., அதனால் அவற்றில் ஆசை (காமம்) உண்டாகிறது. அது தடைப்பட்டால் கோபம் (குரோதம்)எழுகிறது. அதன்பின் இதுவரை கற்ற நல்லது எல்லாம் மறந்து விடுகிறது ( (ஸ்ம்ருதிப்ரம்சம்) பிறகு அறிவு மழுங்கி விடுகிறது. (புத்திநாசம்)கடைசியில் மனிதன் நாசம் அடைகிறான்.(விநச்யதி).

இதை கெட்ட சகவாசத்தில் விழுந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த மகனின் செயல்களைப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வேண்டாத இச்சையைத் தூண்டிவிடும் சகவாசம் ( அது மதுவோ, மாதுவோ,போதைப்போருளோ எதுவானாலும்) வீட்டில் பெரியோர்களின் அறிவுரையை எதிர்க்கச் செய்கிறது. அவர்களுடைய அன்பையும் தன் வளர்ப்பையும் மறக்கச்செய்கிறது. கோபத்தினால் பெற்றோர்களிடம் விரோதம் கொண்டு அறிவை இழந்து விடுகிறான்.

சுந்தரகாண்டத்தில் ஹனுமான் சொல்கிறார். "க்ருத்தோ ஹன்யாத் குரூன் அபி." கோப வெறி கொண்டவன் பெரியவர்களையோ, குருவையோ கூடக் கொல்லத் தயங்கான். பெற்றோர் உற்றோர் என்று பார்ப்பதில்லை. ஆசையின் வேகம் அப்படிப்பட்டது. இதுதான் புத்திநாசம் என்பது.,

45. தரங்காயிதா அபி இமே ஸங்காத ஸமுத்ராயந்தே

கெட்டவை முதலில் அலைகளைப்போல் தோன்றினாலும் ஒன்றாகச் சேர்ந்தால் கடலாகிவிடும்.

தீய நட்பு முதலில் கொஞ்சமாக இருந்தாலும் அதை வளர விடக்கூடாது. முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். இந்த்ரியங்களைத் தூண்டிவிடும் ஆசையானது கெட்ட சகவாசத்தால் மரமாக வளர்ந்து விடும். அலை வருவது போல ஆசைகள் வந்து வந்து போகும் அதைத் தடுக்காமல் விட்டால் கடலெனப் பெரிதாகிவிடும்., ஆகவே ஆரம்பத்திலேயே தீய சக்திகளை விலக்கி விடவேண்டும்.

No comments:

Post a Comment