Thursday, December 20, 2018

3rd paasuram ongi ulagalantaha thiruppavai in tamil

Courtesy:Dmt.Dr.Saroja Ramanujam

ஓங்கி உலகளந்த-திருப்பாவை


3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால் 
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள 
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப 
நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி 
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

ஓங்கி உலகளந்த உத்தமன்-த்ரிவிக்ரமாவதாரம் . வாமனராக வந்து மூன்று அடி நிலம் கேட்டு இரண்டில் பூமி , ஆகாசம் இரண்டையும் த்ரிவிக்ரமனாக வியாபித்து மூன்றாவது அடி எங்கே என்று மகாபலியைக் கேட்க. அவன் தலையில் திருவடியை வைத்து அவனுக்கருள் செய்தவன்.

உத்தமன் என்று கூறக் காரணம் மகாபலியின் அகந்தையை அழித்து அவனுக்கு பக்தி ஸாம்ராஜ்யத்தைக் கொடுத்ததால். அதுமட்டும் அன்றி அவனை பாதாள லோகத்திற்கு அதிபதியாகச்செய்து அவனுக்குத் தானே காவல் இருந்தவன்.

மஹாபலி இந்த உலகம் தனது என்று எண்ணியதைப் போலவே நாமும் நம் உடல், உயிர் , ஆத்மா முதலியவை நம்முடையது என்று எண்ணுகிறோம். உண்மையில் எதுவும் நம்முடையது அல்ல. நம் குழந்தைகள் கூட நம் மூலம் வருவதுதான் நம்முடையன அல்ல. . அப்படி இருக்கையில் நம் உடமைகள் என்று எதைச் சொல்ல முடியும்?

நம்மாழ்வார் கூறுகிறார் . பகவான் முதல் அடியிலேயே இந்த உலகம் முழுவதும் அளந்துவிட்டானே அப்படி இருக்க மூன்றாவது அடிக்கு எங்கே இடம்? ஆகாயம் என்பது மகாபலியின் சொந்தமல்ல .ஆகவே அவன் கொடுத்தது ஒரே அடி மண்தான் என்கிறார்.

அவன் வாமனனாக வந்தபோதும் அகலகில்லேன் என்று உறையும் திருமகள் அவன் மார்பில் இருந்தாளாம் . அதனால் அவன் தன் மார்பை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டிருந்தானாம் . ஏனென்றால் லக்ஷ்மி கடாக்ஷம் மகாபலியின் மேல் விழுந்தால் அவனுடைய ஐஸ்வர்யத்தைக் கவர முடியாது என்று.

பேர் பாடி – அவன் நாமமே போதும் நம்மைக் காப்பாற்ற. திரௌபதியை காத்தது அவன் நாமமே அல்லவா? நாமம் நாமியை விடப் பெரியது., ஆகவே ஆண்டாள் நாமத்தைப் பாடும்படி சொல்கிறாள். 
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் –நீராடல் என்பது அகப்புரத்தூய்மை. இது பக்தியால் மட்டுமே வருவது.

புரந்தர தாசர் தன் குரு கூப்பிட்டார் என்று கேட்டவுடன் ஸ்நானம் செய்யாமலே புறப்பட்டாராம். அதைக் கண்டு ஸ்நானம் செய்யாமல் குருவை தரிசிக்கலாமா என்று கேட்டவரிடம் அவர் கூறினார், "மனஸு குளிய பேகு , க்ரிஷ்ணாநதியலு தீர்த்தமாடி" என்று. கிருஷ்ணன் என்னும் நதியில் குளித்து மனம் சுத்தமானால் போதும் என்று.

சாற்றி நீராடல் ஏன்றால் எல்லாமே பகவத் கைங்கர்யமாகச் செய்தல்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து-ஆயப்பாடி மட்டும் இன்றி நாடெங்கும் மாதம் மும்மாரி பெய்ய வேண்டும் என்று பொருள். முன் காலத்தில் மக்கள் தருமவழியில் சென்ற போது மாதம் மூன்று முறை மழை பெய்யுமாம். ஒன்பது நாள் வெய்யில் ஒரு நாள் மழை என்ற கணக்கில்.அதனால் அதிவ்ருஷ்டி , பெரும்மழை ,அனாவ்ருஷ்டி, மழையின்மை ,இரண்டும் இல்லாமல் இருக்கும்.

இப்போதும் மகாபாரத்ததில் விராட பர்வம் பாராயணம் செய்தால் அந்த இடத்தில் மட்டும் அன்றி நாடு முழுவதும் மழை பெய்யும் என்று கருதப்படுகிறது.

மும்மாரி என்பது வாமனாவதாரத்தில் மகாபலியின் கரங்களில் இருந்து விழுந்த தண்ணீர் , பிரம்மாவின் கமண்டலுவில் இருந்து த்ரிவிக்ரமனுடைய பாதத்தில் சேர்க்கப்பட்ட ஜலம், அது போதாததால் பிரம்மாண்டத்தை கிழித்து பகவானால் கொண்டுவரப்பட்ட ஆவரண ஜலம் ஆக மூன்று. ஆவரண ஜலமே பின்னர் கங்கையானது.

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள - கிருஷ்ணன் பிறந்ததும் நெல் பயிர்கள் ஓங்கி வளர்ந்தனவாம்.,நீர் மட்டம் உயர்ந்து மீன்கள் அதனூடே துள்ளி விளையாடுன்றனவாம்.

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண் படுப்ப- பொறிவண்டு என்பது கருவண்டு. அது குவளை மலரில் புகுந்து தேனை உண்டு மீன்கள் அலைவதால் அசைக்கப்பட்ட மலர் தொட்டிலைப்போல் தாலாட்ட உறங்குகின்றனவாம்.

இங்கு பொறிவண்டு என்பது கார் மேகவண்ணனாகிய பகவானைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பக்தர் மனமே குவளை மலர் . பக்தியினால் தாலாட்டப்பட்டு உறங்குகிறான் என்று பொருள்.

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –ஆயர்பாடியில் உள்ள பசுக்கள் பெரியவை, பெரும்பசுக்கள். நிறையப் பால் கொடுப்பவை. வள்ளல்.

புக்கிருந்து – பக்கம் இருந்து , சீர்த்த முலைபற்றி வாங்க – பால் கறக்கும்போது
தேங்காதே – வஞ்சமில்லாமல் 
குடம் நிறைக்கும்- வைத்த குடத்தை நிறைக்கின்றனவாம்.

பால் முழுதும் கறக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் பாத்திரம் சிறியதாகவோ அல்லது கறப்பவனின் திறமையின்மையோதான் காரணம். அதுபோல ஆசார்யர்கள் வள்ளல் பெரும் பசுக்கள். அவர்களிடம் இருந்து நாம் பெரும் ஞானம் நம் திறமைக்கும், புத்திக்கும், நம் கர்மவினைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக பகவானின் அருளுக்கும் ஏற்ப மாறுபடும்.

மாதம் மும்மாரி என்பது பகவானையே சரண் புகுவது, பக்தியைத்தவிர வேறு எதையும் வேண்டாதிருப்பது, அவனை அடைவதே குறிக்கோளாகக் கொள்வது என்ற மூன்றைக் குறிக்கும். மேலும் அது மூன்றுவித சேவையையும் குறிக்கும். அதாவது, (லிகித கைங்கர்யம்,) பகவானைப் பற்றி எழுதுவது, அவன் மகிமையை பிறருக்கு எடுத்துச்சொல்வது, (வாசிக கைங்கர்யம்,) அவனை ஆராதிப்பது,

https://drive.google.com/…/1QQxXvfnFlT-z0pOsH3Rz9tkGSnSfgpJh

lInk to my class on Thiruppavai audio

  

No comments:

Post a Comment