Tuesday, December 11, 2018

Narada bhakti sutram 28,29,30 in Tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம் - 28, 29, 30

28.தஸ்யா: ஞானம் ஏவ ஸாதனம் இத்யன்யே

சிலர் ஞானமே பக்தியடைய வழி என்கின்றனர்.

பகவானிடத்தில் பக்தி வரவேண்டும் என்றால் பகவான் என்பது யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஸ்ரவணம்.

பக்தி எப்படி வருகிறது என்று பார்த்தால் பகவத் கதைகள், ஸ்வரூபம், இவை பற்றி படித்தோ கேட்டோ தெரிந்துகொள்கிறோம்., அதன்மூலம் அவன் மேல் ஒரு ஈடுபாடு வருகிறது. இது மட்டும் போதுமா என்றால் போதாது.

இந்த உலக வாழ்க்கை நிலையல்ல . என்னும் ஞானமும் வரவேண்டும். அப்போதுதான் உலகப்பற்று விட்டு அவன்மேல் பற்று வரும்.

இதுதான் ஞானம் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. பக்தி ஞானம் இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க முடியாது. ஞானம் இல்லாத பக்தி மூடபக்தி. பக்தி இல்லாத ஞானம் வறட்டு ஞானம்.

இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன என்பதை அடுத்த சூத்திரம் சொல்கிறது.

29. அன்யோன்யாஸ்ரயத்வம் இதி அன்யே

ஞானத்தினால் பக்தியும் பக்தியினால் ஞானமும் வளர்கின்றன. ஆகவே இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன.

உண்மையில் இரண்டும் ஒன்றே.
கீதையில் பகவான் முதலில் அர்ஜுனனுக்கு ஆத்மாவைப்பற்றியும் ப்ரம்மத்தைப்பற்றியும் உபதேசித்துப் பின்னர் பக்தியைப் பற்றி கூறுகிறார். பிறகு பக்தியினால் மட்டுமே தன்னை அடையமுடியும் என்கிறார். இது ஞானம் சேர்ந்த பக்தி.

சபரி, த்ருவன் முதலியோர் பக்தியின் மூலம் ஞானத்தை அடைந்தனர். அனுமன் சூரியனிடம் ஞானத்தைப் பெற்று ராமனைக் கண்டபின் அவனே பரமாத்மா என்ற ஞானத்தால் பரம பக்தியை அடைந்தான். அதுதான் பராபக்தி.

நான் என்ற உணர்வு அற்று எல்லாம் அவனே என்ற மனோநிலை ஞானத்தின் மூலம்தான் வரும். ஞானம், பக்தி இரண்டும் ஒன்று சேராவிட்டால் அது அகந்தைக்கு வழி வகுக்கக் கூடும்.

30.ஸ்வயம் பலரூபதா இதி ப்ரம்மகுமார:

பக்திக்கு பக்தியே பலனாக இருக்கிறது. இது ப்ரம்மகுமாரரான நாரதர் கூறுவது.

பக்திக்கு அதைத் தவிர வேறு சாதனங்கள் இல்லை. Love for love's sake என்று சொல்வதுபோல பயனை எதிர்பார்க்காமல் பகவானிடத்தில் செலுத்தும் அன்பே பக்தி அனுமன் ராமனிடம் "நான் வைகுண்டத்திற்கு வரவில்லை. இங்கே உன்னை பக்தி செய்துகொண்டு இருக்கிறேன்". என்றான். குலசேகரர் அரங்கனைத் தொழும் பாக்கியமே போதும். அமரருலகும் வேண்டாம் என்றார். இதுதான் பராபக்தி.




No comments:

Post a Comment