நாரத பக்திசூத்ரம்-21-24
சூத்ரம் 21
யதா வ்ரஜகோபிகானாம்
பின்னர் கீதையில் கண்ணன் சொல்லபோகும் பக்தியோகத்திற்கு உதார்ணமாக்த் திகழ்ந்தவர்கள் கோபியர்.
முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் சிரமமாக இருந்த தன்னை மறந்து பகவானையே நினைத்தல் என்பது கோபியருக்கு சுலபமாக இருந்தது. முனிவர்களின் கடும் பயிற்சி ஒன்றும் இல்லாமலேயே தூய அன்பினால் மட்டுமே பகவானை அடையலாம் என்று கோபியரின் பக்தி காட்டுகிறது.
கிருஷ்ணனையே நினைந்த அவர்களுக்கு ராச லீலை என்கிற பெரும் அனுபவம் கிடைத்தது. அவர்கள் எல்லாவிதமான் ரசங்களையும் கிருஷ்ணனிடமே அனுபவித்தனர். கோபிகைகள் என்ற ஜீவன்களுக்கு ஒரே புருஷன் பரமாத்மா கிருஷ்ணனே.
விவேகானந்தர் ராசலீலையை பக்தியின் உச்ச்கட்டமாகச் சொல்கிறார். அதில் தனித்தன்மை போய் ஒன்றாகக் கலத்தல் நேர்கிறது. இதை விகல்பமாக பார்ப்பது அறியாமை. பரீக்ஷித் கூட இதை முதலில் அறியவில்லை.
அவனுடைய சந்தேகம் என்னவென்றால் கிருஷ்ணனை காதலனாகக் கருதியவர்கள் எப்படி பக்தியின் உன்னத நிலையை அடைந்தார்கள் என்பது. சுகர் பகவானை முழு மனதுடன் வேறு சிந்தனை இன்றி எப்படி நினைத்து அன்பு செலுத்தினாலும் அவனை அடையலாம் என்கிறார். கிருஷ்ணனே இதை பாகவதத்தில் உறுதி செய்கிறான்.
ந மய்யாவேசித தியாம் காம: காமாய கல்பதே
பர்ஜிதா கதிதா தானா: ப்ராயோ பீஜாய நேஷ்யதே ( பா. 1௦.22.28)
'என்னிடத்தில் சித்தத்தை வைத்தவர்களுடைய காமமானது பிறவிப்பிணியை வளர்க்கும் காமமாக இருக்காது. வறுக்கப்பட்ட விதைகள் மீண்டும் முளைப்பதில்லை "
சுவாமி விவேகானந்தர் கோபியரின் பக்தியை அறிய தூய உள்ளம் வேண்டும் என்கிறார்.
சூத்ரம் 22
தத்ராபி ந மாஹாத்ம்யஞான விஸ்ம்ருதி அபவாத:
லோகாயதமான அன்பிலும் அவர்கள் கிருஷ்ணனின் சிறப்பை மறந்தார் என்பதில்லை.
கண்ணனின் அமானுஷ்ய செயல்களைப் பார்த்தவர்கள் அவன் பகவானின் அவதாரம் என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆனாலும் அன்பினால் அவனை மானுடனாக எண்ணினார்கள். அதுவும் அவன் மாயையே தவிர உண்மை அல்ல.
அவன்மீது பற்று வந்து விட்டால் மற்றவை அனைத்தும் துச்சமாக கருதப்படுகின்றன. அதனால்தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு கோபியர் அவனை நோக்கி ஓடினர். ரிஷிபத்னிகள் தங்கள் கணவர்களையும் பொருட்படுத்தாது கண்ணன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அறுசுவை உணவை எடுத்துக்கொண்டு ஓடவில்லையா? இந்த பக்தியை நாம் பக்தர்கள் சரித்திரத்திலும் காணலாம்.
சூத்ரம் 23-
தத்விஹீனம் ஜாராணாம் இவ
அந்த பக்தி இல்லாவிடில் அது சாதாரண காமம் போல் ஆகிவிடும்.
பகவானுடைய உண்மை ஸ்வரூபம் தெரியாவிட்டால் கோபியரின் நேசம், மற்றும் ஆண்டாள் மீரா போன்றவர்களின் நேசம் உடல் சம்பந்தப்பட்டதாக ஆகிவிடும்.
பக்தி என்பது உடல் சம்பந்தப்பட்டதல்ல. ஆளுமை அற்றது. உலக இயல்பின்படியும் அன்பு என்பது காதலர்களிடையே ஆயினும், கணவன் மனைவியிடையே ஆயினும் புதல்வர்களிடம் ஆயினும் ஆளுமை அற்ற அன்பு தெய்வீகமானது. ஆத்மா ஒன்றுபட்டு இருக்கும்போது உடலின் அருகாமை தேவை இல்லை. அதுதான் தன்னலமற்ற அன்பு.
சூத்ரம் 24-நாஸ்த்யேவ தஸ்மின் தத்ஸுகஸுகித்வம்
தன்னலமான அன்பில் தன் சுகமே முன் நிற்கிறது.
உண்மையான அன்பு என்பது யாரிடம் அன்பு செலுத்துகிறோமோ அவர் சுகத்தையே நாடுவது. கோபியரின் அன்பு தன்னலமில்லாதது கண்ணனுக்காக அவர்கள் எல்லாம் இழக்கச் சித்தமாக இருந்தார்கள்.
No comments:
Post a Comment