ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 16/17
அத்தியாயம் 16
பூகோள வர்ணனை
சூரியன் மேரு மலையைச் சுற்றி வரும்போது ப்ரியவ்ரதர் தன் தேரில் சூரியனுடன் சுற்றி வந்தாராம். அந்தத் தேரின் சக்கரம் ஏற்படுத்திய பள்ளங்களே ஏழு சமுத்திரங்கள் ஆயின என்றும் அதனால் பிரிக்கப்பட்ட பூமியே ஜம்புத்வீபம் முதலிய ஏழு கண்டங்கள் ஆயின என்றும் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டது பற்றி சுகரிடம் விரிவாக விளக்கும்படி பரீக்ஷித் வேண்ட அவர் அதைக் கூறலுற்றார்.
ஜம்புத்வீபம் என்பது தற்போதைய ஆசியா. இது தாமரை இலை வடிவில் உள்ளது. இதில் ஒன்பது வர்ஷங்கள் உள்ளன. இதன் மத்திய பாகத்தில் உள்ளது இலாவருத வர்ஷம்(இமயம், திபெத்) இதன் மத்தியில் தங்க மயமான மேரு மலை உள்ளது. இது பூமியாகிய தாமரையின் நடுப்பாகம் ஆகும்.
இலாவ்ருதத்தின் வடக்கில் நீல, ஸ்வேத, ஸ்ருங்கவான் மலைகள் உள்ளன. இவை முறையே ரம்யக, (ரஷ்யா, சைபீரியா) ஹிரண்மய , (மஞ்சூரியா) குரு (மங்கோலியா) வர்ஷங்களுக்கு எல்லையாக உள்ளன.
தெற்கில் நிஷத , ஹேமகூட , ஹிமாலய பர்வதங்கள் உள்ளன. இவை முறையே ஹரிவர்ஷம்(அரேபியா), கிம்புருஷ வர்ஷம்(இமயத்தாழ்வாரம்), பாரத வர்ஷம் ( இந்தியா) இவைகளுக்கு எல்லையாக உள்ளன. கிழக்கில் மால்யவான் , மேற்கில் கந்தமாதனம் என்ற பர்வதங்கள் முறையே கேதுமாலம் ( பாரசீகம், துருக்கி), பத்ராச்வம் (சைனா) என்ற வர்ஷங்களுக்கு எல்லையாக உள்ளன.
அத்தியாயம் 17
பகவான் த்ரிவிக்ரமனாக உலகை அளக்கையில் அவருடைய பாதத்தில் இருந்து பெருகிய பகவத்பாதீ எனப்படும் கங்கையின் நீர் ஆயிரம் யுகங்களுக்குப்பின் விஷ்ணுபதத்தில் விழுந்து அதில் உள்ள த்ருவமண்டலத்தில் விழுந்து சப்தரிஷி மண்டலம் வழியே பெருகி தேவலோகத்தையும் சந்திர மண்டலத்தையும் நனைத்துப் பிறகு மேருமலையின் மேல் விழுகிறது.
அங்கே ஸீதா, அலக்நந்தா, சக்ஷு, பத்ரா என நான்காகப் பிரிந்து வெவேறு மலைகளின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. ஸீதா கந்தமாதன பர்வதத்தின் வழியே பத்ராஸ்வ வர்ஷத்தில் (சீனா) ஓடி கிழக்கே கடலை அடைகிறது. சக்ஷு மால்யவான் பர்வதத்தின் வழியே கேதுமால வர்ஷத்தில் ஓடி (பாரசீகம் , துருக்கி) மேற்கே கடலில் கலக்கிறது. பத்ரா ஸ்ருங்கவான் மலையின் வழியே உத்தர குரு ( வடக்கு மங்கோலியா ) சென்று வடக்கே கடலில் கலக்கிறது.அலக்நந்தா ஹேமகூட பர்வதத்தின் வழியே பாரத வர்ஷத்தில் ஓடி தெற்கே கடலில் கலக்கிறது. இதைத்தவிர கணக்கற்ற நதிகள் மேருவில் இருந்து விழுந்து மற்ற வர்ஷங்களில் பாய்கின்றன.
இவற்றுள் பாரத வர்ஷம் கர்ம பூமி எனப்படுகிறது. இதில்தான் புண்ணியம் பாபம் இரண்டும் கர்மங்களின் மூலம் சம்பாதிக்கப்படுகின்றன. இந்த ஒன்பது வர்ஷங்களில் பகவான் தமது மூர்த்தி பேதங்களால் பிரசன்னமாக இருந்து அருள் பாலிக்கிறார் .
இலாவ்ருதத்தில் பரமசிவன் ஒருவரே புருஷர். இரண்டாவது புருஷன் எவனும் அங்கே பிரவேசித்தால் பார்வதியின் சாபத்தால் பெண்ணாகிவிடுவான் என்று கூறப்படுகிறது., இங்கு பகவான் நாராயணன் ஸங்கர்ஷண ரூபத்தில் ஆராதிக்கப்படுகிறார்.
மற்ற வர்ஷங்களின் அதி தேவதா ஸ்வரூபம் பற்றிய விவரம் அடுத்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment