Friday, December 28, 2018

9th paasuram thoo mani thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை தூமணி மாடத்து

9. தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய 
தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய் 
மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான் 
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ 
எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும் 
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்

இந்த உலகில், சிலர் நல்ல காரியம் செய்யத் தாமே வருவார்கள். சிலர் பின்னர் சேர்ந்து கொள்வர் . சிலர் கூப்பிட்டால் தான் வருவார்கள். இந்தப்பெண்ணும் அந்த வகை.

சுற்றும் விளக்கெரிய – கோகுலத்தில் எல்லா மாளிகைகளும் ரத்தினங்கள் பதிக்கப்பட்டவை,(தூமணி மாடம்) அதனால் எப்போதும் ஒளி வீசினாலும் சம்ப்ரதாயத்திற்காக விளக்குகளும் ஏற்றப்படுகின்றனவாம்.

மாமன் மகளே –ஆண்டாள் தன்னை கோகுல வாசியாக எண்ணிக்கொள்வதால் அங்கு எல்லோரும் உறவினர்கள்.

மணிக்கதவம் தாள் திறவாய்- கதவுகள் எல்லாம் ரத்தினங்கள் பதிப்பப்ப்ட்டு இருப்பதால் வாசல் எது என்றே தெரியவில்லையாம். அதனால் நீயே வந்து திற என்கிறாள்

மாமீர் அவளை எழுப்பீரோ- இவர்கள் குரல் கேட்டு பெரியவர்கள் வெளியில் வந்து விட்டனர் ஆனால் அந்தப்பெண் உறங்குகிறாள். அதனால் அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.

உம்மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ – குரலும் கொடுக்கவில்லை ஆதலால் ஊமையா அன்றி செவிடா என்கிறாள்.
அனந்தலோ – செல்வத்தினாலும் அழகினாலும் செருக்குற்றாளோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ – மந்திரவசப்பட்டு நீண்ட துயிலில் ஆழ்ந்தாளா?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும் நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய் -பெரியவர்களை நாராயணனின் நாமங்களைக் கூறி அவளை எழுப்பச்சொல்கிறாள்.

.மாமன் மகள் என்றதன் காரணம் உண்மையான உறவினர்கள் பகவானின் பக்தர்களே என்று பொருள்.

மாமாயன் – மாயத்தினால் ஆயர்சிறுவனாகத் தோன்றுபவன். மாதவன் என்றது மா அல்லது லக்ஷ்மியின் நாயகன் ( மாயா: தவன்) அதனால் தயையே உருவானவன். வைகுந்தன் என்றால் அது அவன் பரத்வத்தைக் குறிக்கிறது.

அவனுடைய மாயை எப்பேர்ப்பட்டது என்றால் இந்திரன் பிரமன் இவர்கள் கண்ணனுடைய நிஜ ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் ஆனாலும் அவனுடைய மாயையால் மறைக்கப்பட்டு அவனை இடைச்சிறுவனாக எண்ணினர்..

வராஹவதாரத்தில் சமுத்திரம் அவன் கணுக்கால் வரைதான் இருந்ததாம். ஆனால் யசோதை அவனை ஒரு கை ஜலத்தில் குளிப்பாட்டினாளாம்! மாமேகம் சரணம் வ்ரஜ என்று அவன் பாதத்தில் .சரணமடையச் சொன்னவன் குளிக்கும்போது தாயின் கால்களைக் கட்டிக்கொண்டானாம்!

இந்தப் பாசுரத்தின் கருத்து என்னவென்றால் மாளிகை முதலிய உலக உடைமைகளை நிரந்தரம் என்று நம்பக்கூடாது. ஒரே நிரந்தரமான வஸ்து பகவான்தான்.

தூமணி என்பது பகவான்தான் . தூய மணி, ஸத்யஸ்ய ஸத்யம். உபநிஷத் இந்தத் தூயமணியைப் பற்றி கூறுகிறது. அதைக்கொண்ட வேதம்தான் மாடம். விளக்குக்கள் என்பது வேதத்தை , விளக்குகள் மாடத்தைப் பிரகாசிக்க செய்வது போல வேதத்தை விளக்கும், ஸ்ம்ருதி, இதிகாச புராணங்கள் , ப்ரம்மசூத்ரம் இவையாகும்.

இந்த ஞானம் படைத்தோர் துயிலணையாகிய பகவானில் துயிலுகின்றனர். இந்த துயிலணையில் நாமும் ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது உறங்குகிறோம்.,ஆனால் நாம் அதை அறிவதில்லை. ஞானிகள் அதை உணர்கிறார்கள்

மணிக்கதவம் தாள் என்பது நம் கர்மா.,.அது திறக்க வேண்டுமானால் ஆச்சார்யரின் அருளும் பரமாசார்யனான் பகவானின் அருளும் வேண்டும்.. அது கிடைத்துவிட்டால் பாகவத குழாமில் சேர்ந்து ஊமையாகவும், செவிடாகவும், அனந்தலாகவும் ஆகி விடுவோம். அதாவது அவனைத்தவிர வேறு விஷயங்களில் ஊமையாகவும், அவன் பெருமை தவிர வேறு எதையும் கேட்காத செவிடாகவும், அவன் சேவையிலே பெருமை கொண்டும் ஆவது.


இந்தப் பாசுரம் திருமழிசை ஆழ்வாரை குறிப்பதாகக் கொள்வர். காரணம் ,
1. மாமாயன் மாதவன் வைகுந்தன் இவை அவர் பாசுரங்களில் காணப்படும் பெயர்கள். 
2. துயிலணை என்பது அவருடைய பாசுரங்களில் அடிக்கடி காணப்படும் பகவானின் துயிலமர்ந்த கோலம்,
3. சுற்றும் விளக்கெரிய – அவர் வேத வித்தகர் ஆயினும் ஊமை போலும் செவிடர் போலும் அவரை அவமதித்தவர்களை பொருட்படுத்தாது இருந்தவர்.
4.மந்திரப்பட்டாளோ- அவர் பேயாழ்வார் என்ற மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர். 
5. துயிலணை மேல் கண்வளரும் என்றது பரம ஏகாந்திக்கு உலகவிஷயங்களில் இருந்து விலகுவதுதான் துயில்.

https://drive.google.com/…/1iv7X3DEq2hLVU2QAZGQoK1hJeKWdVP1…

  

No comments:

Post a Comment