Friday, December 28, 2018

8th paasuram keezh vanam - thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- கீழ் வானம் வெள்ளென்று

8. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு 
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் 
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய 
பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட 
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய 
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் 
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்
.
இன்னொரு பெண்ணை எழுப்புகிறாள். 
கீழ் வானம் வெள்ளென்று- .கிழக்கு வானம் பொழுது விடியும் முன் வெளுக்கிறது.

எருமைச்சிறுவீடு- எருமைகள் பனிபடர்ந்த புல்லைத்திங்கின்றன. அதை சிறுவீடு மேய்தல் என்று கூறுவர். அதனால் அவைகள் அதிகமாகப் பால் கறக்கின்றன. பசுக்களால் ஏறப்புல்லை ஜீரணிக்க முடியாது ஆகையால் அவை விடிந்த பிறகுதான் மேய்ச்சலுக்குச் செல்லும்.

போவான் போகின்றாரை போகாமல் காத்து- ஏற்கெனவே புறப்பட்ட மற்றவரை தடுத்து நிறுத்தி உன்னை அழைக்கிறேன் என்கிறாள்.

கோதுகலமுடைய பாவாய்-கண்ணனிடம் பேரன்பு கொண்டவள். பாவை என்றது பதுமை போல் அழகானவள் என்ற பொருளில்.

மாவாய் பிளந்தானை – குதிரை வடிவில் வந்த கேசியின் வாயைப் பிளந்து அவனை அழித்தவன். 
மல்லரை மாட்டிய- கம்சனால் ஏவப்பட்ட மல்லரைக் கொன்றவன்.

தேவாதிதேவனை- தேவர்களின் தலைவன். "அயர்வறும் அமரர்கள் அதிபதி ,' திருவாய்மொழி முதல் பாசுரம்.

மனிதர்களுக்கு பகவத் பக்தி ஏற்படும்வரை இரவு. பிறகுதான் விடியல். ஞானம் என்னும் சூரியன் உதிக்கக் காரணமாக உள்ளவர்கள் ஆசார்யர்கள். மாவாய் பிளந்தான் என்பது ராமானுஜரையும் அவர்க்குப் பின் வந்த ஆச்சார்யர்களையும் குறிக்கிரது. இந்திரியங்கள் அடக்க முடியாத குதிரைகள் போல் இஷ்டப்படி அலைகின்றன . அதை அடக்கியவர்கள் ஆசார்யர்கள்.

மல்லரை மாட்டிய என்பது எதிரவாதம் செய்தோரை வென்று தங்கள் கொள்கையை நிலைநாட்டுவது. அவர்களே மனிதருள் தேவர்கள் பகவான் அதனால் தேவாதிதேவன்.

ஆவாவென்று ஆராய்ந்து – அவன் புகழ் பாடினால் அவன் நம் யோக்யதியை ஆராய்ந்து அருள் புரிவான்.

இந்தப் பாசுரம் நமாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 
1. அவர் தம்மைப் பாவை என்று திருவாய்மொழியில் கூறுகிறார்.
2.எழுந்திராய் என்பத அவருக்கு பொருந்துகிறது . ஏனென்றால் அனைத்து ஆழ்வார்ளிலும் அவர் ஒருவர்தான் உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறார். 
3. கீழ்வானம் வெள்ளென்று என்பது மதுரகவி ஆழ்வார் கண்ட ஒளி . அது அவரை நம்மாழ்வாரிடம் அழைத்து வந்தது. நம்மாழ்வார் சூரியனைப் போல் கலியுக ஆரம்பத்தில் அறியாமை இருளைப் போக்க அவதரித்தவர்.

https://drive.google.com/…/1iv7X3DEq2hLVU2QAZGQoK1hJeKWdVP1…

No comments:

Post a Comment