Friday, December 28, 2018

12th paasuram kanaitu ilam - thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை-கனைத்திளம்

12.கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

கனைத்திளம் கற்றெருமை- மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய எருமை கன்றுக்கிரங்கி -கன்றை நினைத்து 
முலை வழியே பால் சோர கன்றை நினைத்தபோதே பால் சொரிகின்றனவாம்.

எருமை கன்றை நினைந்து பால் சொரிவதைப் போல் பகவான் நம்மை நினைந்து கருணை பொழிகிறான்.
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்-

போன பாசுரத்தில் கோவலர் தம் பொற்கொடியே என்று அந்தப்பெண்ணின் தந்தைக்கு ஏற்றம். இதில் அண்ணனை முன்னிற்று தங்கை எழுப்பப் படுகிறாள்.

நற்செல்வன் என்றது ராமனுக்கு லக்ஷ்மணன் போல கிருஷ்ணனுக்கு உற்ற தோழனாகிய ஸ்ரீ தாமனைப் பற்றிக் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். தங்காய் என்றது அவனைப் போலவே நீயும் பகவத்கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்பது.

அவன் கிருஷ்ணனிடம் மனதை செலுத்தி இருந்ததால் பால் கறப்பதை மறந்தானாம். அதனால அவர்கள் இல்லம் பாலால் சேறு போல் ஆகிவிட்டதாம்.

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி- மேலே பனிவெள்ளமிட , கீழே பால் வெள்ளமிட, நடுவே மால் வெள்ளமிட நின்ற நிலையாகையினாலே கைக்குப் பிடிப்பு வேண்டும் என்று உன் வாசற்கடை பற்றி நிற்கின்றோம் என்கிறாள்

சினந்திங்கு தென்னிலங்கைக் கோமானைச்செற்ற – ராவணனை வதைத்த ராமனைப்பற்றிக் கூறுகையில் அவன் தென்னிலங்கையை அழிக்க வில்லை அதன் அரசனான ராவணனை மட்டுமே வதைத்தான் என்று பொருள்,. ஏனென்றால் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்தாகிவிட்டதால்.

மனதிற்கு இனியானை -. மனதிற்கும் சர்வ ந்த்ரியங்களுக்கும் சுகத்தைக் கொடுப்பவன். வால்மீகி ராமனை 'ஸோமவத் பிரியதர்சன: சந்திரனைப்போல் பார்ப்பவர்க்கு மனதில் சந்தோசம் அளிப்பவன் , என்கிறார்.

அனைத்து இல்லத்தாரும் அறிந்து – எல்லோரும் எழுந்து விட்டனர் ஆகையால் நீ தூங்குவது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதுஎன்கிறாள்.

எருமை , நற்செல்வன் என்னும் சொற்கள் பிராட்டியையும் , பெருமாளையும் குறிக்கிறது என்பர். 
எருமை என்றால் வடமொழியில் மகிஷி . அது மனைவியையும் குறிக்கிறது. லக்ஷ்மியை உடையவனாதலால் அவன் நற் செல்வன்.

இந்தப் பாசுரம் த்வய மந்திரத்தைக் குறிக்கும் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து சொல்லப் படுவதால். தங்காய் என்பது தங்கையைக் குறிக்கும் சொல் அன்று. தங்கமயமானவள், ஹிரண்மயீ , லக்ஷ்மி.

திவ்ய மஹிஷியான பிராட்டி. எருமை கன்றை நினைப்பது போல நம்மை நினைத்துக் கவலைப்படுகிறாள். கருணை என்னும் பாலைச்சொரிகிறாள்.

பகவானைப்போல் நிக்ரஹ எண்ணம் இல்லாதவள். சீதையாக ராமனிடமே, தண்டகாரண்யரிஷிகள் தங்களுக்கு இடர் விளைவிக்கும் ராக்ஷசர்களை அழிக்க வேண்டும் என்று கேட்ட போது, நம்மிடத்தில் ஒன்றும் பிழை இழைக்காதவரை தண்டித்தல் கூடாது என்று உரைத்தவள்
. ராவணனுக்கே தர்மத்தை உபதேசித்தவள். ' ந கச்சித் ந அபராத்யதி , யார்தான் குற்றம் செய்யாதவர்கள் என்று ஹனுமனிடம் கூறினவள்.

அதற்கும் மேலாக தன்னிடமே அபராதம் இழைத்த காகாஸுரன் ராமன் காலில் விழுந்த போது அவன் தலையை சரியாக காலில் இருக்கும்படி திருப்பினாளாம்.

அவள் செய்கையால் அதிகக் கருணை சுரந்து உள்ளம் சேறானவன் நற்செல்வன்.

இலங்கை என்பது நம் சரீரம்.சினம் என்றால் கோபம் என்றும் அர்த்தம் அதோடு தமிழில் ஸ ச இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாததால் அதை சின்னம் என்று எடுத்துக்கொண்டால் சங்கு சக்கரச் சின்னம் கொண்ட ப்ரபன்னன். அவன் அழகிய (தென்) இலங்கையான சரீரத்திற்கு கோமானான அஹங்கார மமகாரங்களை ஆச்சார்யகிருபையினால் அழிக்கிறான்.

பேருறக்கம் என்பது சரீரமே நான் என்னும் உணர்வு. 
வாசற்கடை என்பது இந்திரியங்கள். அவை மனத்துக்கு இனியானை பாட முற்பட்டால் ஆத்மஞானம் என்னும் பனி வர்ஷம் தலை மேல் விழுகிறது.

இந்த பாசுரம் பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அவர் தோன்றியது தாமரைப் பொய்கையில். அவர்தான் முதலில் பாடியவர் ஆகையால் கனைத்திளம் கற்றெருமை எனப்படுகிறார். கன்றுக்கிறங்கி, நம் எல்லோருக்கும் பயன்படத் தம் அனுபவத்தை மொழிந்தவர்.

  

No comments:

Post a Comment