Friday, December 28, 2018

7th paasuram keechu keechu thiruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- கீசு கீசென்று

7.கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து 
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே 
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து 
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ 
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி 
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

பொழுது விடிந்து விட்டது என்பதற்கு மூன்று அடையாளங்கள் கூறி இந்தப் பெண் எழுப்பப் படுகிறாள்.
1. பறவைகளின் ஓசை
2. தயிர் கடையும் சப்தம்
3. நாராயண நாம சங்கீர்த்தனம்

கீசு கீசு என்றெங்கும் –எங்கும் பறவைகள் சப்தம் இடுகின்றன. தயிர் கடையும் சப்தத்தாலோ அல்லது நாங்கள் பாடுவதாலோ இங்கு உள்ள பறவைகள் மட்டும் எழுந்தன என்று நீ சொல்ல முடியாது என்கிறாள்.

ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்-பார்வைகள் தங்கள் ஜோடியுடன் சல்லாபம் செய்கின்றன.

கேட்டிலையோ பேய்ப் பெண்ணே- உனக்கு கேட்கவில்லையா? அரக்கியர்தான் பொழுது விடிந்ததும் தூங்குவார்கள் அதனால் பேய்ப் பெண்ணே என்கிறாள்.

காசும் பிறப்பும் கலகலப்ப- தயிர் கடையும் பெண்கள் காசு மாலையும் திருமங்கல்யமும் அணிந்திருப்பதால் அவை கடையும்போது சப்தம் செய்கின்றன.

காசு என்பது சம்சாரத்தையும்,பிறப்பும் என்பது பிறவித்தளையையும் குறிக்கின்றன. தயிரைக் கடைகையில் கண்ணன் அருளால் இவை இரண்டும் கலகலத்துப் போய் விடும் என்று பொருள்.

கைபேர்த்து-தயிர் ஆயர்பாடியில் கண்ணன் வந்தபிறகு மிகவும் கெட்டியாகத் தோய்கிறதாம். அதனால் கஷ்டப்பட்டு கைகளால் கடைகிறார்கள்.

.வாசநறும்குழல் ஆய்ச்சியர் – தேவலோகப் பெண்களுக்குத்தான் இயற்கையில் கூந்தலுக்கு மனம் உண்டு. அப்ஸர ஸ்திரீகளே கோபியராய் வந்து பிறந்திருப்பதனால் அவைகள் கூந்தல் மணமுள்ளதாக இருக்கிறது.

மத்தினால் ஓசைப் படுத்த-மத்தின் ஓசை பக்தர்களுக்கு மந்தர மலையைக் கடைந்ததை நினைவூட்டுகிறது

நாயகப் பெண்பிள்ளாய் – இந்தப் பெண் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆதலால் பல பெண்கள் அவள் வீட்டில் தயிர் கடைவதால் மிகுந்த அரவம் கேட்கிறது.

பேய்ப்பெண்ணே என்று அழைத்தபின் அவளை சமாதானம் செய்ய நாயகப் பெண்பிள்ளாய் என்று அழைக்கிறாள்.

நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் – கேசவன் என்ற நாமம் மிக உயர்ந்தது. ஏனென்றால் அதன் பொருள் பிரம்மனையும் ஈசனையும் தன்னுள் கொண்டவன் என்பது. கஸ்ச ஈசஸ்ச கேசௌ, தௌ வச்யதயா ஸந்தி அஸ்ய இதி கேசவ: . க என்றால் பிரம்மா. ஈச என்றால் சிவன். இருவரையும் தன்னுள் கொண்டவன் ஆதலால் கேசவன் என்று கூறப்படுகிறான்.

கேசவன என்னும் நாமம் நாராயணனின் பன்னிரண்டு நாமங்களில் மார்கழிமாதத்திற்கு உகந்த நாமம். அவனே நாராயணன் என்பதைக்காட்ட நாராயணன் மூர்த்தி என்னும் சொல்.

பாடவும் நீ கேட்டே கிடத்தியோ-இது நம்மாழ்வாரை நினைவூட்டுவதாகக் கருதப்படுகிறது. நம்மாழ்வார் தனக்கு தகுதி இல்லாததால் நாராயண நாமத்தைச் சொல்ல மாட்டேன் என இருக்க ஒரு வழிப்போக்கன் தன் சுமையை இறக்கி வைக்கையில் நாராயணா எனக் கூறக்கேட்டு தன் தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்டு நாம ஸ்மரணம் செய்ய ஆரம்பித்தாராம்.

நாமத்தைக் கேட்டும் எழுந்திருக்க வில்லை என்று அந்தப் பெண்ணைச் சாடுகிறாள்.

ஆனைச்சாத்தன் என்பது பகவானையே குறிக்கும் , அவன் ஒரு யானையைக் கொன்று ஒரு யானைக்கு அருள் புரிந்ததால் என்று வைத்துக்கொண்டால் கலந்து பேசின பேச்சரவம் என்பது அவனும் பிராட்டியும் கலந்துரையாடுவதாகக் கொள்ளலாம்.

காசும் பிறப்பும் கலகலப்ப என்பது சுருதி ஸ்ம்ருதி இரண்டும் சேர்ந்து பகவானின் பெருமையைச் சொல்வதைக் குறிக்கும்.

வாசநறும் குழல் ஆய்ச்சியர் என்பது ஆச்சார்யர்கள். அவர்கள் எப்போதும் பகவன்நாமத்தின் மணத்தையே எங்கும் பரப்புகிறார்கள் . வேத வேதாந்தங்களில் ஆழ்ந்து அவன் பெருமையை கைபேர்த்து, அதாவது உயர்த்தூக்கிய கைகளுடன் ( WITH UPRAISED ARMS) வெளியிடுகிறார்கள். 
ச்ருதி ஸ்ம்ருதி இவைகளில் ஆராய்ச்சி செய்த ஆசார்யர்களான வேதவியாசர் முதலியோரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

காசு , பிறப்பு, தயிர் இவை முறையே அஷ்டாக்ஷரம், த்வய மந்த்ரம், சரமச்லோகம் இவைகளைக் குறிப்பதாகவும் பேய்ப் பெண் என்பது குலசேகராழ்வாரைக் குறிப்பதகவும் ஒரு கருத்து உள்ளது. குலசேகரர் ஒரு பாசுரத்தில் 'யான் ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே ' என்று தன்னைக் கூறுகிறார்.

https://drive.google.com/…/1iv7X3DEq2hLVU2QAZGQoK1hJeKWdVP1…

No comments:

Post a Comment