Friday, December 21, 2018

6th paasuram pullum silabina - thirupaavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- புள்ளும் சிலம்பின காண்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி 
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

முதல் ஐந்து பாசுரங்கள் பாவை நோன்பைப் பற்றி உள்ளன. அடுத்த பத்துப் பாசுரங்கள் அதை அனுஷ்டிக்க இருக்கும் பெண்களை எழுப்புவதாக உள்ளன. இது பகவத் கைங்கர்யத்திற்காக பாகவதர்களை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிக்கு ஒப்பானது.

ஏன் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும்?

1. உயரிய பக்தன் பகவனைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து விடக்கூடும். அதனால் சேர்ந்து போக வேண்டும்.

குலசேகரர் முகுந்த மாலையில், சொல்கிறார்,
பத்தேநாஞ்சலினா நதேன சிரஸா காத்ரை:: ஸரோமோத்கமை: 
கண்டேன ஸ்வரகத்கதேன நயனேன உத்கீர்ணபாஷ்பாம்புனா
நித்யம் த்வச்சரணாரவிந்தயுகள த்யானாம்ருதாஸ்வாதினாம் 
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம்

இதன் பொருள், 
எங்களுடைய வாழ்க்கை கூப்பின கரங்களுடனும், வணங்கின தலையுடனும், அங்கங்கள் மெய்சிலிர்த்து தழுதழுத்த குரலுடன், கண்ணீர் பெருகும் கண்களுடன், தினமும் உன் தாமரைப் பாதங்களின் தியானம் என்ற அம்ருதத்தை பருகியே கழியட்டும்.

2. பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

3. இனிப்பான எதையும் தனியாக அனுபவிக்கலாகாது. ராமன் காட்டுக்குப் போவது தனக்கு முன்னம் தெரிந்திருந்தால் என்னென்ன பாவம் செய்தோரின் கதி தனக்கு கிடைக்கட்டும் என்று சொல்கையில் , பரதன், சுவையான தின்பண்டத்தை பிறருக்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுவதை அந்த பாவங்களில் ஒன்றாகக் கூறுகிறான்,.

4. எப்போதும் பாகவதர்களை முன்னிட்டே பகவானை சேவிக்க வேண்டும்.

5 பெண்களுக்கு மெல்லிய இதயம் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே விரும்புவர்.

புள்ளும் சிலம்பின –பறவைகளுக்கு இயற்கையாக நேரத்தைப்ப்றிய அறிவு அதிகம். அதனால் காலையில் மனிதர்களுக்கு முன் விழிக்கின்றன.

இதற்கு பதிலாக எழுப்பப்படுகின்ற பெண், முதிய ஆயர் பெண்களுக்கு தூக்கம் வருவதில்லை அதனால் அவர்கள் விடியுமுன்பே விழித்துத் தயிர் கடைகிறார்கள்.அந்த சத்தத்தில் பறவைகள் விழிக்கின்றன என்று கூறுகிறாள் போலும். அதற்கு பதிலாக இன்னொரு சம்பவத்தைக் கூறுகிறாள்.

புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ – புள் என்றால் பறவை அவற்றின் அரையன் அதாவது அரசன் என்பது கருடன்.அவனுடைய கோ என்பது பகவானை. இல் என்றால் அவனுடைய கோவில். 
கருடனை ஏன் குறிப்பிடவேண்டும் என்றால் கருடனின் குரலும் தரிசனமும் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது.

வெள்ளை விளிச்சங்கு என்பது கோவில்களில் முழங்கப்படும் வெள்ளை நிறச் சங்காகும். வெண்மை சுத்த சத்வத்தைக் குறிக்கிறது.

பேரரவம் – சங்கின் ஒலி பக்தர்களுக்கு பேரரவமாக இருக்கிறது. ஏன் என்றால் அது அவர்கள் இதயத்தில் இருக்கும் பகவானை எழுப்புகிறது.

பிள்ளாய்- இது ஒரு இளம் பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த சொல் பெரியாழ்வாரைக் குறிப்பதாக ஒரு விளக்கம் உண்டு. பகவானின் மேல் எந்த பொல்லாக் கண்ணும் விழலாகாதென்று பல்லாண்டு பாடியதால் அவர் இளம் பிள்ளையாகக் கருதப்படலாம். புள்ளும் சிலம்பின என்பது அவருடைய நந்தவனத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு திருப்பாவை பாசுரங்களில் பெரியவர்கள் வெவ்வேறு ஆழ்வார்களை நினைவபடுத்துவதாகக் கூறுகின்றனர்.

பேய் முலை நஞ்சுண்டு – பூதனா சம்ஹாரம். அவளிடம் ஸ்தன்ய பானம் செய்யும்போது கண்ணன் கண்களை மூடிக்கொண்டிருந்தானாம் . ஏனென்றால் அவன் கடாக்ஷம் அவள் மேல் விழுந்தால் அவளைக் கொல்ல முடியாது என்று. ஆயினும் அவனுடைய சரீர சம்பந்தத்தால் அவள் நற்கதி அடைந்தாள்.

கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி – கள்ளத் தனமாக சகட உருவில் வந்த அசுரனை கண்ணன் காலால் உதைத்தபோது அது உடைந்தது ஆனால் அதன் துகள் கூட அங்கு இல்லையாம், நாராயண பட்டாத்ரி சொல்கிறார். அவன் பாதம் பட்டவுடன் அசுரன் சுத்த சத்துவத்தில் லயித்து விட்டான் அதனால் அங்கு ரஜஸ் ( பொடி) கூட இல்லை என்று.

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு – முனிவர்களும் யோகிகளும், பாற்கடலில் (வெள்ளத்து) ஆதிசேஷன் மேல் (அரவில்) துயிலமர்ந்த – பள்ளி கொண்ட ,வித்தினை- சிருஷ்டியின் வித்தான பகவானை , உள்ளத்துக்கொண்டு – அவர்கள் உள்ளத்தில் கண்டு

மெல்ல எழுந்து- உள்ளத்தில் அவன இருப்பதால் மெல்ல எழுந்திருக்கிறார்கள், அவன் துயில் கலையக் கூடாதே என்று. பிரஹ்லாதன் மலையிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட போது தன் இதயத்தில் இருக்கும் பகவானுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று இரு கைகளாலும் மார்பைப் பிடித்துக்கொண்டு விழுந்தான் என்று உபந்யாசகர்கள் கூறுவர்.

ஹரி என்ற பேரரவம் – எல்லோரும் ஹரிநாமத்தைக் கூறும்போது அது பேரரவமாக இருக்கிறது

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்- அது நமது உள்ளம் புகுந்து நம்மை குளிர்விக்கிறது. 
ஹரிநாமம் செவி வழியே புகுந்து இதயத்தை அடைந்து குளிர்ந்த மழையைப் போல் பக்தரின் இதயத்தை குளிர்விக்கிறது. .

ருக்மிணி சொல்கிறாள்.
ச்ருத்வா குணான் புவனசுந்தர ஸ்ருண்வதாம் தே
நிவிச்ய கர்ணவிவரை: ஹரதோ அங்க தாபம். 
இதன் பொருள், பகவானுடைய குணங்கள் கேட்பவர் செவியில் புகுந்து சம்சாரத்தினால் ஏற்படும் துன்பங்களைப் போக்குகிறது.

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு- இந்த வரி பெரியாழ்வாரை பாசுரமாகிய 'அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து ' என்பதை நினைவூட்டுகிறதல்லவா?

இந்தப் பாசுரத்தின் உள்ளர்த்தம் என்ன என்று பார்த்தோமாகில், 
புள் என்பது ஹம்சாவதாரத்தைக் குறிக்கும். பகவான் ஹம்ச உருவில் சனகாதியருக்கு பிரம்ம தத்துவத்தை எடுத்துரைத்த வரலாறு பாகவதத்தில் காணப்படுகிறது. சிலம்பனம் என்பது பகவானுடைய பேச்சு.

பெரியாழ்வார் கண்ணனுடைய செங்கீரைப்பருவத்தை வர்ணிக்கும்போது சொல்கிறார். 
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே என்று மற்ற அவதாரங்களுக்கு முன் ஹம்சாவதாரத்தைச் சொல்கிறார்.

கோவில் என்பது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது. சங்கு என்பது ப்ரணவ ஸ்வரூபம் . 
பூதனை என்பது அவித்யை. அதனால் அஹம்கார மமகாரம் ஏற்படுகிறது. பகவான் அதை உறிஞ்சி விடுகிறான்.

கள்ளச்சகடம் – இந்த்ரியங்கள் அவை சரீரம் என்னும் வண்டியை புலன்கள் பக்கம் செலுத்துகின்றன. வெள்ளத்து அரவு என்பது சம்சார சாகரம். பகவான் நமமுள் தூங்குவது போல் காத்திருக்கிறான் நாம் எப்போது அழைப்போம் என்று.
ஹரி என்ற பேரரவம் பக்தன் பகவானைக் கூவி அழைக்கும் ஒலி.

  

No comments:

Post a Comment