Friday, December 21, 2018

Narada bhakti sutram 46 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம்

46.கஸ்தரதி கஸ்தரதி மாயாம்? ய: ஸங்கான் த்யஜதி. யோ மஹானுபாவம் சேவதே நிர்மமோ பவதி

மாயையை யார் வெல்ல வல்லார்? எவர் பற்றை விட்டு சிறந்த மஹானுக்கு சேவை செய்வதன் மூலம் நான், எனது என்ற பாவனையை ஒழிக்கிறானோ அவனே மாயையை வெல்கிறான்.

மாயை என்பது என்ன? பகவான் கீதையில் சொல்கிறார். 
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா 
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (ப.கீ. 7.14)

"இந்த என்னுடைய மாயை என்பது முக்குணத்தின் மூலம் உண்டாவது. யார் என்னை சரண் அடைகிறார்களோ அவர்களே மாயையைக் கடக்கிறார்கள்."

மாயையை பிரகிருதி என்பார்கள் ; முக்குண வடிவானதால். அவித்யா என்பார்கள் அறிவை மறைப்பதால். அனிர்வசநீயம், இருப்பது ஆனால் இல்லாதது என்பது அத்வைத வாதம். ராமானுஜர் இதை இறைவனின் அற்புத சக்தி என்கிறார். கண்ணன் இதை என் மாயை என்கிறான். ஏனென்றால் ஞானம் வரும் வரையில் பகவான் மாயையினால் தன்னை மறைத்துக் கொள்கிறான். நம் கர்மாவைத் தொலைப்பதற்கு இது அவனால் ஏற்படுத்தப் படுகிறது.

சரீரசம்பந்தம் நான் எனது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதனால் நான் காணும் உலகம் உண்மை என்ற மயக்கம் ஏற்படுகிறது. இது பகவானை சரண் அடைவதன் மூலமே நீங்கும். பற்றை விடுவது அவனிடம் அனன்ய பக்தி செலுத்துவது இவை சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் அநாதி கால கர்ம வாசனையால் பீடிக்கப்பட்ட மனிதனுக்கு அவ்வளவு சுலபமல்ல. அதனால் நாரதர் மஹாத்மாக்களின் சேவையே அதற்கு வழி என்கிறார்.

இதையே கண்ணனும் கீதையில் சொல்கிறான்.
தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ர்ச்னேன சேவயா 
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானின: தத்வதர்சின: (ப.கீ. 4.34)

"ஆத்ம ஞானத்தை குருவை வணங்கி சேவை செய்து இடையறாத கேள்விஞானத்தால் அறிவாயாக.உண்மை அறிந்த பெரியோர்கள் உனக்கு அதை உபதேசிப்பார்கள். "

இதன் பொருள் என்னவென்றால் சிஷ்யனானவன் அடக்கம், ஸ்ரத்தை இவைகளுடன் அறிய வேண்டும் என்ற ஆவலும் உடைத்தாய் இருக்க வேண்டும்.
மாயையைக் கடப்பவனின் லக்ஷணம் என்ன என்பதை அடுத்த சூத்திரம் கூறுகிறது,

  

No comments:

Post a Comment