Friday, November 16, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 5,6 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 5 அத்தியாயம் 5/6

அத்தியாயம் 5

ரிஷபரின் உபதேசம்

இந்த உடல் சிற்றின்பங்களை நுகர்வதற்காக அன்று. எதனால் சித்தம் நிர்மலமாகி பிரம்மானுபவசுகம் கிடைக்குமோ அந்தத் தவத்தை செய்வீர்களாக.

மகான்களின் சேவை மோக்ஷ வாசல். ஸ்திரீ சங்கம் அஞ்ஞான வாசல். மகான்கள் யார் என்றால், சமசித்தம், கோபமின்மை, சாந்தம், எல்லோரையும் நேசிக்கும் தன்மை இவை உள்ளவராவர்.

ஆத்ம விசாரத்தில் ஈடுபடாது, உலக சுகங்களைக் கருதியே செயலாற்றும் மனிதர்கள் திரும்பத் திரும்ப பிறக்கிறார்கள். அறியாமை மனதில் உள்ளவரை கர்ம வினை தொடர்கிறது. இறைவனிடம் மனம் லயிக்கும் வரை பிறப்பிறப்பு என்பதற்கு முடிவே இல்லை. 
மனைவி மக்கள் சொத்து சுகம் இவைகளிடம் ஏற்படும் பற்றே ஹ்ருதயக்ரந்தி அல்லது மனதில் உண்மையை அறிய தடையாயிருக்கும் முடிச்சுகள்.இந்த முடிச்சுகள் அவிழ வேண்டுமானால் ஞானியாகிய குருவின் சேவை , அவருடைய அருள் இன்றியமையாதது .

துறவு மனப்பான்மை, சுகதுக்கங்களை சமமாக பாவிப்பது, சுயநலமான கர்மங்களை விட்டொழிப்பது, தவம்,செயல்களை எல்லாம் பகவதர்ப்பணமாகவே செய்வது, பகவானைப் பற்றி கேட்டல், கூறுதல், பக்தர்களின் சேர்க்கை, யாரிடமும் விரோதம் இல்லாமல் இருப்பது, சம புத்தி , அமைதியான மனநிலை, இந்த்ரிய நிக்ரஹம், எல்லா உயிரிடத்தும் இறைவனையே காணுதல் இவை நான் என்ற உணர்வால் ஏற்பட்ட தடைகளை நீக்கும்.

எங்கும் இறைவனை காண்பதால் தெளிந்த ஞானம் ஏற்படுகிறது. இதன் பின் விவேகத்தாலும் , விடாமுயற்சியாலும் நான் என்ற அஹங்காரத்தை அடியோடு அகற்ற வேண்டும்.

பகவானையே விரும்புபவன், அவரை அடைவதையே பரம புருஷார்த்தமாக கருதுபவன், பிதாவாயின் புத்திரர்களையும்., குருவாயின் சீடர்களையும், அரசனாயின் பிரஜைகளையும் புத்தி புகட்டி தத்துவத்தை அறியச் செய்ய வேண்டும்..
இதைக் கூறிய ரிஷபர் தன் நிலையை எடுத்துரைக்கிறார்.

" இந்த என்னுடைய சரீரம் கர்ம வினையால் ஏற்பட்டதன்று. என் மனது சத்வ குணத்தால் நிரம்பியுள்ளபடியால் அதில் அதர்மத்துக்கு இடமில்லை. ஆதலால் என் புத்திரர்களான நீங்கள் அனைவரும் உத்தமனான உங்கள் தமையன் பரதனை பின்பற்றுவீர்களாக."

இவ்விதம் கூறிய ரிஷபர் மேலும் சொல்கிறார். 
"தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள், தேவர்கள் இவர்கள் படிப்படியாக உயர்ந்த ஸ்ருஷ்டியாவர். தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் ப்ரஜாபதிகள். ருத்ரன், பிரம்மா இவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள். இவர்கள் இருவரும் என் பக்தர்கள் ( அதாவது மகாவிஷ்ணுவின்) . நான் மகான்களின் பக்தன். இவர்கள் எனக்களிப்பது எதுவோ அது எனக்கு ஹவிர்பாகத்தைக் காட்டிலும் உயர்ந்தது . சொல் செயல் எண்ணம் எல்லாமே என்னுடைய ஆராதனையாக ஆனால் அவனுக்கு சரீர சம்பந்தம் இல்லை. "

சுகர் கூறினார்.

இதற்குப் பிறகு ரிஷபர் பரதனை பூமியை ஆளும்படி நியமித்து அனைத்தையும் துறந்து அவதூதராக உன்மத்தனைப் போல், விரித்த சடையுடன் , வெளியேறினார். மற்றவர் கண்களுக்கு ஊமையைப்போலவும் குருடனைப்போலவும் செவிடனைப்போலவும் உன்மத்தனைப் போலவும் காணப்பட்ட அவர் தேசம் முழுவதும் சஞ்சரிக்கையில் சிலர் அவரை பலவிதத்திலும் துன்புறுத்தியும் , தேகப் பற்று இல்லாமையால் எதுவும் அவரை பாதிக்கவில்லை. ஆயினும் இந்த உலகம் யோகிகளை புரிந்துகொள்வதில்லை என்று கண்ட அவர் அஜகரவ்ருத்தி என்னும் மலைப்பாம்பு போன்ற நிலையை அநுஷ்டித்தார். மற்றும் அனேக யோக பாவனைகளை அனுஷ்டித்து பகவானுடன் அபேத பாவனையை அடைந்தவராய் யோக சித்திகளை உடையவர் ஆனார். அஷ்டமாசித்திகக்ளும் அவரை வந்தடைந்தன. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை

அத்தியாயம் 6

பரீக்ஷித், ஆத்மஞானம் அடைந்தவரான அவருக்கு இந்த சித்திகள் ஒரு தடையே இல்லை. அப்படி இருக்கையில் எதற்காக அவர் அவற்றை நிராகரித்தார் என்று வினவினார் .

அதற்கு சுகர் பதிலளிக்கையில் , மனம் என்பது நம்பத்தகாதது. எவ்வாறு ஒரு வேடன் தான் பிடித்த மிருகத்தை கட்டவிழ்த்து விட விரும்ப மாட்டானோ அதுபோல யோகிகள் வசப்படுத்தின மனதை எந்த சலனத்திற்கும் உட்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் எப்பேர்ப்பட்ட முனிவர்களும் சலனத்திற்கு இடம் கொடுத்ததாக சரித்திரமே இருக்கிறதே என்று கூறினார்.

இவ்வாறு ரிஷபர் நாடெங்கும் திரிந்து குடகுமலைக் காடுகளில் பித்தனைப் போல், வாயில் கற்களைப் போட்டு மென்று கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் அப்போது காற்றின் வேகத்தால் மூங்கில்கள் உராய்ந்து கடுமையான காட்டுத் தீ பரவ அதில் அவருடைய சரீரம் எரிந்து மறைந்தது.

கலியுகத்தில் அர்ஹன் என்ற கொங்கு நாட்டரசன், அவனுடைய் பூர்வ கர்ம வாசனையினால் ரிஷபருடைய சரிதத்தைப் பற்றி கேள்வியுற்று அவர் வர்ணாஸ்ரம தர்மத்தைத் துறந்தவராய் இருந்தது அவருடைய நாத்திகக் கொள்கையை காட்டுகிறது என்றெண்ணி தன் தர்மத்தை விட்டு பிரஜைகளிடம் நாத்திகத்தைப் பரப்பினான்,அவனைப் பின்பற்றி பலர் வேத கர்மாக்களை விட்டுத் தனி மதத்தை ஸ்தாபித்தனர். (அதுதான் ஜைன மதம் என்று கூறப்படுகிறது.)

இந்த அவதாரம் ரஜோ குணம் மேலிட்டவர்க்கு கைவல்ய மார்க்கத்தை விளக்குவதற்காக ஏற்பட்டது. 
சுகர் மேலும் கூறினார்..

" உங்களுக்கும் யாதவர்களுக்கும் ரட்சகனும், குருவும், தெய்வமும் நண்பனுமாக விளங்கிய பகவான் வேலைக்காரனுமாக அல்லவா இருந்தான்! முகுந்தன் தன்னை நாடுவோர்க்கு முக்தியைக் கொடுத்தாலும் இந்த மாதிரி பக்தியை அவ்வளவு எளிதில் கொடுக்க மாட்டான்.

சிற்றின்பங்களில் அழுந்திக் கிடக்கும் உலகிற்கு அறிவுறுத்தி எந்த ரிஷபதேவர் பயமற்ற ஆனந்தமான ஆத்ம உலகைக் காட்டி அருளினாரோ அவருக்கு நமஸ்காரம்.,"

  

No comments:

Post a Comment