Friday, November 16, 2018

Narada Bhakti sutram part15 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

நாரதபக்திசூத்ரம் -15

சூத்ரம் 15
தல்லக்ஷணானி வாச்யந்தே நானாமத பேதாத்

பக்தியின் வரைமுறையை பலர் பல விதமாகக் கூறியுள்ளார்கள்.

பக்தி இல்லாத மதங்களே இல்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர் கூட அவர்களுடைய தலைவர்களிடம் பக்தி கொள்கின்றனர். ப்ரார்த்தனை இல்லாத மதங்களே இல்லை.

ஸநாதன மதத்தில் பக்திதான் பிரதானம். வேதத்தை மூலமாகக் கொண்ட ஸநாதன மதத்தில் முக்கியமான பிரிவுகள், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் , த்வைதம் என்பன.

ஷண் மதங்கள் என்று சொல்லப்படும், சௌரம், கௌமாரம், காணாதிபத்யம் , சைவம், வைணவம் என்ற பிரிவுகள் வேத காலத்தில் இல்லை. நாரதர் அந்த காலத்தில் இருந்த பக்தி பற்றிய கொள்கைகளையே இங்கு சொல்கிறார்.

இங்கு ஸனாதன மதத்தின் மூன்று பிரிவுகளாகிய அத்வைதம் விசிஷ்டாத்வைதம் த்வைதம் இவைகளை நிறுவிய ஆசார்யர்கள் பக்தியை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

தைலதாரைபோல் ( எண்ணை ஒழுகுவது போல் ) ஒரே சீராக ஒரு பொருள் மீது மனம் ஓடுமானால் அதுவே தியானம். அது பகவான் மேல் ஓடினால் அதுவே பக்தி என்கிறார் ராமானுஜர்.

விவேகம் வைராக்யம் இவைகளை கைக்கொண்டு முமுக்ஷுத்வம் அதாவது முக்தியில் நாட்டம் வருமேயானால் அதன் மூலம் வரும் ஆத்மஞானமே பக்தி என்கிறார் சங்கரர் .

ஸ்ரீமன் நாராயணன் மேல் எழும் ஆழ்ந்த அன்பே பக்தி என்கிறார் மத்வர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது என்னவென்றால் தண்ணீருள் மூழ்கியவன் வெளியே வந்து மூச்சுவிடத் துடிப்பதுபோல இறைவனை அடையத் துடிப்பதே பக்தி என்று.

இனி நாரதர் கூறும் பக்தியின் வெவ்வேறு வகையான வரைமுறைகளை அடுத்த சில சூத்ரங்களில் காணலாம்.




No comments:

Post a Comment