ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 3-அத்தியாயம் -12
அத்தியாயம் 12
முதலில் பிரம்மாவிடம் இருந்து ஐந்து அஞ்ஞானத்தின் வேறுபாடுகள் ஆகிய தமஸ், மோஹம், மஹாமோஹம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் இவை தோன்றியது.,
1.தமஸ்- தன் இயற்கையை அறியாமல் இருப்பது,
2.மோஹம்- அதனாலுண்டான மயக்கம்., அதாவது தேகம்தான் நான் என்ற உணர்வு
3. மஹாமோஹம்- விஷயசுகங்களில் ஈடுபாடு
4.தாமிஸ்ரம்- அதற்குத்தடை ஏற்படும்போது வரும் சினம்
5.அந்த தாமிஸ்ரம் – தன்னிலை இழப்பு.
இது எதனால் என்றால் முதலில் சிருஷ்டியைப் பற்றிய அறிவு தோன்றாததால் ஏற்பட்ட அறியாமையின் விளைவு.
இதைக்கண்ட பிரம்மா தன சிருஷ்டியின் மீது வெறுப்புக் கொண்டார். பிறகு, பகவானை தியானம் செய்து ஸநகாதியரை சிருஷ்டித்தார். அவர்கள் பக்வத்த்யானத்தால் அடைந்த ஞானத்தில் இருந்து தோன்றியபடியால் பிறவியிலேயே ஞானிகளாக இருந்தார்கள். அவர்களை நோக்கி பிரம்மா பிரஜைகளை உண்டாக்கும்படி கூறினார். ஆனால் அவர்கள் அதை விரும்பாமல் ஆத்மஞானத்தை அடையவேண்டி தவத்தை மேற்கொண்டனர்.
அப்போது பிரம்மாவிற்கு ஏற்பட்ட கோபத்திலிருந்து ருத்ரன் தோன்றினார். அவர் உருவம் நீலமும் சிவப்பும் கலந்து காணப்பட்டதால் அவர் நீலலோஹிதர் என்று பெயர் பெற்றார். அவரே முதலில் தோன்றிய தெய்வ உருவமாவார். அவருக்கு தன் பெயர் , இடம் இவை தெரியாததால் அதைக் கொடுக்கவேண்டி கூக்குரல் இட்டதால் ருத்ரன் என்று பெயர் பெற்றார். ரோதநாத் ருத்ர: ரோதனம் என்றால் சப்தமிட்டு கூவுதல்.
அவருக்கு இதயம், இந்த்ரியங்கள், பிராணன் , ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், சூரியன், சந்திரன், தபஸ் என்ற பதினொன்று இடங்கள் கொடுக்கப்பட்டன. அவருடைய பெயர்கள் முறையே, மன்யு, மனு, மஹிநஸன், மஹான், சிவன், ருதத்வஜன், உக்ரரேதஸ், பவன், காலன், வாமதேவன், த்ருதவ்ரதன் என்று ஏற்பட்டது. இவர்களே ஏகாதச ருத்ரர்கள் அவர்களுடைய பத்னிகள் முறையே, தீ, வ்ருத்தி, உசனா, உமா, நியுத்,ஸர்பி, இலா, அம்பிகா, இராவதி, சுதா, வீக்ஷா ருத்ராணி எனப்படுவோர்.
ருத்ரன் பிரம்மா சொல்படி உயிர்களை சிருஷ்டிக்க ஆரம்பித்தார். அவை அவரைப்போலவே ருத்ரரூபம் கொண்டவையாய் இருக்கக்கண்டு பிரம்மா அவரை ஸ்ருஷ்டிப்பதை நிறுத்தி தவம் செய்ய போகுமாறு கூறினார் .
பிறகு பிரம்மா தன்னிடம் இருந்தே பத்து புத்திரர்களை சிருஷ்டித்தார்.அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர் , க்ரது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷர், நாரதர் ஆவார்.
பிரம்மாவின் மடியில் இருந்து நாரதரும், கட்டை விரலில் இருந்து தக்ஷரும், பிராணனில் இருந்து வசிஷ்டரும் , தோலில் இருந்து ப்ருகுவும், கண்களில் இருந்து க்ரதுவும், மனதில் இருந்து மரீசியும் தோன்றினார்கள். வலது மார்பில் இருந்து ரிஷி தர்மர் தோன்றினார்., இவருடைய புத்திரர்களாக நர நாராயணர்கள் தோன்றினர்.
இவ்வாறு தன் தேகத்தின் பல பகுதிகளிடம் இருந்து பத்து புத்திரர்களை சிருஷ்டித்த பிரம்மாவின் முதுகில் இருந்து மரணத்தின் கருவானதும் பயங்கரம் விளைவிப்பதும் ஆன அதர்மம் தோன்றிற்று. ஹ்ருதயத்தில் இருந்து ஆசையும், புருவத்திலிருந்து கோபமும், கீழ் உதட்டில் இருந்து பேராசையும், வாயில் இருந்து வாக்கும் ஏற்பட்டன. அவருடைய நிழலில் இருந்து கர்தமப்ரஜாபதி தோன்றினார்., இவர் தேவஹூதியின் கணவரும் கபிலரின் பிதாவும் ஆவார்.
பிரம்மா பிறகு முந்தைய கல்பத்தில் இருந்தபடி பிரஜைகளை சிருஷ்டிக்க எண்ணம் கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களில் இருந்து நான்கு .வேதங்கள் வெளிப்பட்டன. இதன்பின், வேதாங்கங்கள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலியன வெளிப்பட்டன.இதன் மூலம் சாஸ்திரங்கள், வர்ணாஸ்ரம தர்மங்கள் முதலியன தோன்றின.
பின்னர் பிரம்மாவின் தேகம் இரு கூறாகப பிரிந்தது. பிரிந்த அவ்விரண்டு வடிவங்களில் இருந்து ஆணும் பெண்ணுமாக இருவர் தோன்றினர். ஸ்வாயம்புவ மனுவாகிய புருஷன் சதரூபையாகிய ஸ்திரீயை மணந்து பிரஜைகளை உற்பத்திசெய்தனர். அவர்கள் மூலம் அந்த கல்பத்தில் மனித சிருஷ்டி ஆரம்பம் ஆயிற்று.
சதரூபை இரண்டு புதல்வர்களையும் மூன்று புதல்விகளையும் பெற்றாள். புதல்வர்கள், ப்ரியவ்ரதனும் உத்தான பாதனும் ஆவார்கள்., புதல்விகள், ஆஹூதி, தேவஹூதி, பிரஸூதி.
உத்தானபாதனின் மகன் துருவன். ப்ரியவ்ரதனின் வம்சத்தில் தோன்றியவர்கள் ரிஷபர், பரதர். ஆஹூதி ருசியையும், தேவஹூதி கர்தம பிரஜாபதியையும், ப்ரஸூதி தக்ஷப்ரஜாபதியையும் மணந்தனர். அவர்கள் மூலம உலக பிரஜைகளின் ஸ்ருஷ்டி ஏற்பட்டது.
அடுத்து வராஹாவதாரத்தின் வர்ணனை.
ஸ்ரீமத்பாகவதம்- வராஹாவதாரம் தொடர்ச்சி
வேதாந்த தேசிகர் வராஹாவதாரத்தை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்
கோபாயேத் அணிசம் ஜகந்தி குஹனாபோத்ரீபவித்ரீக்ருத
.ப்ரம்மாண்ட: பிரளயோர்மிகோஷகுருபி: கோணாரவை: குர்குரை:
யத் தம்ஷ்ட்ராக்ரகோடி காடகடனா நிஷ்கம்பநித்யஸ்திதி:
ப்ரம்மஸ்தம்பமஸௌதஸௌ பகவதீ முஸ்தேவ விச்வம்பரா
பிரளயகாலத்து கடலலைகள் போல குர் குர் என்ற மூக்கின் ஒலிகளால் பிரபஞ்சத்தை தூய்மையாக்கிய எவருடைய கோரைப்பல்லின் முனையில் கோரைக்கிழங்கு போல் திடமாக அமர்ந்து, பூமிதேவியானவள் பிரம்மாமுதல் துரும்பு வரை உள்ள சராசரங்கள் உற்பத்தியாகக் காரணமாகிறாளோ அந்த கபட வராஹப்பெருமான் இந்த உலகங்களைக் காப்பாற்றட்டும்.
வராஹப்பெருமானை குஹனா போத்ரீ , கபட வராஹம் என்கிறார். அதாவது மாயாவேஷதாரீ . அவர் நாசியில் இருந்து (கோணா) வந்த குர் குர் என்ற சப்தம் பிரளயகால வெள்ளத்தின் அலையோசை (ப்ரளயோர்மிகோஷ;) போல இருந்ததாம்.
அவருடைய கோரைப்பல்லின் நுனியில் (தம்ஷ்ட்ராக்ரகோடி) அசையாமல் (நிஷ்கம்பநித்யஸ்திதி)இருந்த பூமி அங்கு ஒட்டி இருந்த கோரைகிழங்கு(முஸ்தா இவ) போலத் தோன்றியது. இதிலிருந்து வராஹப்பெருமானின் உருவம் எத்தனை பெரியது என்று உணரலாம்.
ஸ்ரீமத்பாகவதம் குரை: க்ஷுரப்ரை: தாரயன் ததா ஆப: , பிரளய ஜலத்தைத் தன் கூறிய குளம்புகளால் கலக்கினார் என்று கூருகிறது. அதாவது பிரளயசமுத்திரம் வராஹப்பெருமானுக்கு கோஷ்பதீ அதாவது குளம்படி ஜலம் அளவுதான். அதனால்தான் வெளியே எடுத்த பூமியைத்தன் குளம்படி ஜலத்தில் வைத்தார் என்ற வாக்கியம் காணப்படுகிறது.
எல்லாவற்றையும் தாங்குவதால் பூமி விச்வம்பரா (உலகைதாங்குபவள்) என்று குறிப்பிடப்படுகிறது.
பிரம்மஸ்தம்பம், பிரம்மா முதல் துரும்பு வரை என்ற சொல் சகலமும் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் பிரம்மாவைக் குறிப்பிடவில்லை.
தேசிகர் கபட போத்ரீ என்று சொல்வதன் பொருள்,பகவானின் அவதாரங்கள் தன் உண்மை ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு நாடக நடிகன் போல விதவித வேஷத்தில் தோன்றுவதால், உண்மை பக்தர்கள் மட்டுமே அது வேஷம் என்று அறிகிறார்கள். கெட்டவர்கள் அது உண்மை என்று எண்ணி எதிர்த்து அழிகிறார்கள்.
இதைத்தான் கீதையில் கண்ணன் ,
அவஜானந்தி மாம் மூடா: மானுஷீம் தனும்ஆஸ்ரிதம் , மூடர்கள் என்னை மானுடப்பிறப்பென்று நினைக்கிறார்கள் என்று கூறுகிறார்.
தேசிகர் கிருஷ்ணனை குஹனா கோப: , பொய்யாக இடையர் வேஷம் தரித்தவன் என்று கோபால விம்சதியில் கூறுகிறார்,. காமசிகாஷ்டகத்திலும் நரசிம்மனை கபடகேசரீ என்று கூறுகிறார்.
பாகவதம் வராஹரை கரால தம்ஷ்ட்ரோ அபி அகராள த்ருஷ்ட்யா , அவர் உருவம் பயங்கரமானதாக இருந்தாலும் அவருடைய பார்வை அவரை ஸ்தோத்திரம் செய்தவர்கள் மேல் கருணையுடன் இருந்தது என்று கூறுகிறது.
நரசிம்மவதாரத்தை வர்ணிக்கையில் தேசிகர் ஸரோஜஸத்ருசா த்ருசா என்று கூருகிறார். அதாவது அவருடைய கண்கள் ப்ரஹ்லாதனை பார்க்கையில் தாமரை போல் மலர்ந்து இருந்ததாம்.
அவர் நாசியில் இருந்து எழுந்த குர் குர் என்ற சப்தம் மூன்று உலகங்களையும் புனிதம் ஆக்கியதாம். வ்ருஷாகபி என்ற நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காணலாம். இதன் பொருள் தர்மத்தின் ஸ்வரூபம் என்பது. வ்ருஷ என்றால் தர்மம். கபி என்ற சொல் குரங்கோடு வராஹத்தையும் குறிக்கும். அதனால் யக்ஞவராஹராகிய அவரிடம் இருந்து வெளிப்பட்ட சப்தம் வேதகோஷமே ஆகும்.
No comments:
Post a Comment