ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம்3-அத்தியாயம் 13 வராஹாவதாரம்-முன்னுரை
மஹாவராஹம் தர்மஸ்வரூபம். கெட்ட புத்தியால் ஆசை என்னும் கடலில் மூழ்கிக்கிடந்த உலகை விவேகம் என்னும் கோரைப்பற்களில் மூலம் எடுத்து மறுபடியும் பக்தி என்ற ஜலத்தின் மேல் வைத்தது
ஹிரண்யாக்ஷன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க அதை பகவான் வராஹ ரூபம் கொண்டு அவனைக் கொன்று மீட்டு மறுபடியும் ஜகத்தின் மேல் மிதக்க விட்டார் என்பது வராஹாவதாரத்தின் சாராம்சம்.
ஹிரண்யம் என்றால் பொன்.இது பொன்னாசை முதலிய ஆசைகளைக்குறிக்கும் ஹிரண்யாக்ஷன் என்னும் சொல் பொன்னாசையைக்குறிக்கும். ஹிரண்யே அக்ஷிணீ யஸ்ய ஸ: ஹிரண்யாக்ஷ:, பொன்னின் மேல் கண் உடைய என்று பொருள். அதாவது பொன் முதலிய விஷயசுகத்தின் மேல் ஆசை.
இந்த ஹிரண்ய புத்தி பகவத்புத்திக்கு எதிரி. விஷயசுகமாகிற கடலில் பணத்தாசையால் மூழ்கின புத்தியை விவேகத்தின் மூலம் மறுபடியும் தர்மத்தின் மேல் வைப்பதுதான் வராஹாவதாரம்.
மஹாவராஹத்திற்கு வ்ருஷாகபி என்ற பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். வ்ருஷ என்றால் ' "தர்மம். கபி என்ற சொல், குரங்கோடு வராஹத்தையும் குறிக்கும். அதனால் வ்ருஷாகபி என்பது தர்மஸ்வரூபமான வராஹப்பெருமான்.
பாகவதம் வராஹப்பெருமானை யக்ஞவராஹம் என்கிறது. கீதையிலும் 'ஸர்வகதம் பிரம்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம்' சர்வவ்யாபியான பிரம்மம் யக்ஞத்தில் நிலை பெற்றிருக்கிறது, ' அஹம் க்ரது: அஹம் யக்ஞ: "நானே யக்ஞம்,' என்று காண்கிறோம். ஹிரண்யகசிபு நாராயணன் யக்ஞத்தில் இருக்கிறான் என்று எல்லா யக்ஞத்தையும் நிறுத்திவிட்டான் என்பது ப்ரகஹ்லாத சரித்ரம்.
வராஹவதாரத்தின் மகிமை வராஹபுராணத்தில் சொல்லப்படுகிறது.
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபம் ச மாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டாபாஷாணஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்
இதன் பொருள் என்னவென்றால் வராஹப்பெருமான் சொல்கிறார். "எவனொருவன் என்னை எப்போதும் உடல் நலமாக இருக்கும்போது நினைக்கிறானோ அவனுக்கு கடைசி காலத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் நான் அவனை நினைக்கிறேன் அவனுக்கு நல்ல கதி கொடுக்கிறேன்" என்பது.
கீதையிலும்
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸன்யஸ்ய மத்பரா:
அனந்யேநைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யுஸம்ஸார ஸாகராத்
என்று காண்கிறோம். இதன் பொருள்
"எவனொருவன் எல்லா கர்மங்களையும் எனக்கே அர்ப்பணித்து என்னையே நினைக்கிறானோ அவனை இந்த சம்சாரமாகிற சமுத்திரத்தில் இருந்து நான் தூக்கிவிடுகிறேன்."
இதுதான் வராஹாவதாரத்தின் உட்பொருள்.
இப்போது பாகவதத்தில் வராஹாவதார வர்ணனையைக் காண்போமா?
ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 3 அத்தியாயம் 13
விதுரர் முதல் அரசனான ஸ்வாயம்புவமனு சதரூபையை மனைவியாக அடைந்தபின் என்ன செய்தார் என்று கேட்க மைத்ரேயர் கூறலானார்.
ஸ்வாயம்புவமனு ஜனித்தவுடன் பிரம்மாவை வணங்கி எதைச் செய்தால் இகலோகத்தில் கீர்த்தியும் பரலோகத்தில் நற்கதியும் உண்டாகுமோ அதைக் கூறுமாறு வேண்டினார்.
பிரம்மா அவரிடம் அவர் குணங்களுக்கு தகுதியான பிரஜைகளை உண்டுபண்ணி தர்மவழியில் பூமியை பரிபாலனம் செய்து யக்ஞத்தினால் நாராயணனை பூஜிக்குமாறு கூறினார்.
ஸ்வாயம்புவ மனுவும் அவர் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுபவராக பிரம்மாவிடம் எல்லா ப்ராணிகளுடைய இருப்பிடமான் பூமி பிரளயஜலத்தில் முழுகிவிட்டதாகவும் அதை வெளிக்கொணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரம்மா இந்த விஷயத்தில் தகன் என்ன செய்யவேண்டும் என்று காட்டியருள பகவானை தியானிக்கையில் அவர் நாசித்வாரத்தில் இருந்து கட்டை விரல் பருமனுள்ள ஒரு சிறு பன்றிகுட்டி வெளிவந்தது.
அவர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அது ஒரு கணத்தில் வானளாவ வளர்ந்தது. மரீசி முதலிய பிரஜாபதிகளுடம் சனகாதியருடனும் கூடி பிரம்மா ஆகாயத்தில் பன்றி உருக்கொண்டு நிற்கும் இந்த தெய்வப்பிறவி யாராயிருக்கலாம் என்று சிந்தித்தார்.
இவ்வாறு அவர்கள் வியக்கையில் யக்ஞபுருஷராகிய பகவான் மலைபோல் வளர்ந்து கர்ஜித்தார். அந்த கர்ஜனையைக் கேட்டு ஜனலோகம் தபோலோகம் , சத்யலோகம் இவற்றில் இருந்த ரிஷிகள் மகிழ்ச்சியடைந்து வேத கோஷம் செய்தனர்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பகவான் பிரளயஜலத்தினுள் ஜலக்ரீடை செய்யும் யானைபோல பிரவேசித்தார்.
பாகவதம் வராஹ ரூபத்தை பின்வருமாறு வர்ணிக்கிறது.
உத்க்ஷிப்தவால: கசர: கடோர:சதா விதுன்வன் கரரோமசத்வக்
குராஹதாப்ர: ஸிததம்ஷ்ட்ர ஈக்ஷா ஜ்யோதி: பபாசே பகவான் மஹீத்ர: (ஸ்ரீமத். பா. 3.13. 27)
பகவான் மஹீத்ர:-பூமியை உத்தாரணம் செய்கிறவராக பகவான்
உத்க்ஷிப்தவால: -மேலே தூக்கிய வாலுடன்,
கசர: -ஆகாயத்தில் சஞ்சரிக்கிறவராகவும்
கடோர:-கடுமையானவராகவும்
ஸடா: -பிடரிமயிர்களை
விதுன்வன் –உதறுகின்றவராகவும்
கரரோமச த்வக்-கூரான மயிர்களை உடைய தோல் கொண்டவராக்வும்
குராஹதாப்ர: -குளம்பினால் பிளக்கப்பட்ட மேகங்களை உடையவராகவும்
ஸிததம்ஷ்ட்ர: - வெண்மையான கோரைப்பற்களுடனும்
ஈக்ஷா ஜ்யோதி:-பிரகாசமான கண்களுடனும்
பபாசே- விளங்கினார்
அவர் ஜலத்துள் வஜ்ராயுதம் போல் பிரவேசித்ததும் சமுத்ரம் அலைக்கப்பாடு உயரக் கிளம்பிய அலைகள், கைகளைத் தூக்கி "பிரபுவே காப்பாற்றும்" என்று கூறுவது போல இருந்தது.
பின்னர் பிரளய ஜலத்தில் மூழ்கியிருந்த பூமியைத் தன் தெற்றிப்பல்லிடை தூக்கிக்கொண்டு வெளிக்கிளம்பியபோது அசாதாரணமான அழகோடு விளங்கினார். அப்போது எதிர்த்த ஹிரண்யாக்ஷனை சிங்கமானது யானையைக் கொல்வதுபோல் விளையாட்டாக ப்ரளய ஜலத்திலே கொன்றார்.
'தமால நீலம் ஸிததந்தகோட்யா க்ஷ்மாம் உத்க்ஷிபந்தம் கஜலீலயாங்க,' தமாலவ்ருக்ஷம் போல் கருநீல மேனியில் , பூமி அவருடைய வெண்ணிற பற்களிடை துலங்க மத்தகஜம் போல நடந்து பிரம்மா முதலியவர்களுக்கு முன் தோன்றினார்.
அவரைக்கண்ட ரிஷிகள் யக்ஞ வராஹமூர்த்தியாகிய அவரை யக்ஞங்களின் பல்வேறு பாகங்களை அவருடைய அங்கங்களாக வர்ணித்து துதித்தனர்.
ஜிதம் ஜிதம் தே அஜித யக்ஞபாவன த்ரயி தனும் ஸ்வாம் பரிதுன்வதே நம:
யத்ரோமகர்தேஷு நிலில்யு: அத்வரா: தஸ்மை நாம: காரணசூகராய தே
(ஸ்ரீமத். பாக.3.13.34)
வெல்லமுடியாதவனே,யக்ஞங்களால் ஆராதிக்கப்படுபவனே , ஜெயமுண்டாகட்டும். எவருடைய ரோமக்கால்களில் யாகங்கள் மறைந்திருக்கின்றனவோ அப்படிப்பட்ட , வேதங்களே சரீரமாக பூமியை உத்தாரணம் செய்ய வராஹ உருவெடுத்து எல்லா திசைகளிலும் சரீரத்தஹி உதறி நீரை இறைக்கிறீர்கள். அத்தகைய உமக்கு நமஸ்காரம்.
நமோ நமஸ்தே அகில மந்திர தேவதாத்ரவ்யாய சர்வக்ரதவே க்ரியாத்மனே
வைராக்யபக்த்யாத்மஜய அனுபாவிதஞானாய வித்யாகுரவே நமோநம: (ஸ்ரீமத்.பா. 3.13.3)
எல்லா மந்த்ரங்கள் , தேவதைகள் , திரவ்யங்களுடன் சகல யாகங்கள், பூஜைகள் இவற்றின் ரூபமானவரும், வைராக்யத்துடன் கூடிய கர்மானுஷ்டானத்தினால் ஏற்பட்ட சித்தசுத்தியுடன் கூடிய பக்தியால் உண்டான மனோஜயத்துடன் அனுபவிக்கப்பட்ட ஞானத்தினால் காணப்பெற்றவரும் ஆன, ஞானகுருவான உம்மை நமஸ்கரிக்கிறோம்.
உமது கோரைப்பற்களின் மேல் காணப்படும் பூமியானது, ஏரியிலிருந்து எழுந்த வலிமையான யானையின் தந்தத்தில் காணப்படும் இலையுடன் கூடிய தாமரைமலரை ஒத்திருக்கின்றது.
ஜனலோக, தபோலோக சத்யலோக ஜனங்களாகிய நாங்கள் உங்கள் சடையின் நுனியால் வாரியிறைக்கப்பட்ட ஜலத்துளிகளால் புனிதம் அடைந்தோம்.
பிரம்ம ஞானிகளால் இவ்வாறு துதிக்கப்பட்ட பகவான் பூமியை ஜலத்தில் முன்போல் வைத்துவிட்டு மறைந்தார்.
இவ்வாறு வராஹாவதாரத்தை வர்ணித்துவிட்டு மைத்ரேயர் மேலும் கூறினார்.
ய ஏவம் ஏதாம் ஹரிமேதஸோ ஹரே:
கதாம் ஸுபத்ராம் கதநீயமாயின:
ச்ருண்வீத பக்த்யா ச்ரவயேத வோசதீம்
ஜனார்தனோ அஸ்யாசு ஹ்ருதி ப்ரஸீததி (ஸ்ரீ. பா.3.13.48)
ஜனங்களின் துக்கத்தைப் போக்குபவரும், ஆச்சரியமான மாயாசக்தியை உடையவருமான ஹரியின் மங்களமானதும் மனோஹரமானதுமான கதையை யார் கேட்பாரோ அல்லது கேட்கச்செய்வாரோ அவர் விஷயத்தில் ஜனார்தனன் விரைவில் சந்தோஷம் அடைகிறார் .
அடுத்து தேசிகரின் வராஹாவதார ஸ்தொத்திரத்தைக் காண்போம்.
No comments:
Post a Comment