ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம்3அத்தியாயம் 9
பிரம்மா கூறினார்.
வெகுகால த்யானத்திற்குப் பிறகு என்னால் உங்களை அறிய முடிந்தது. எல்லாம் நீங்களே, உங்களைத் தவிர வேறு இல்லை. மாயையினால் பலவாகத் தோன்றுகிறீர்கள்.
வேதங்கள் தங்களுடைய பதகமலத்தின் நறுமணத்தை பக்தர்களின் காதுகளின் வழியாக (அதாவது ச்ரவணம் செய்வதால்) அவர்கள் இதயத்திற்கு கொண்டு செல்கின்றன. தாங்கள் அந்த பக்தர்களின் இதயத்தை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
தாவத் பயம் த்ரவிணகேஹஸுஹ்ருத்நிமித்தம்
சோக: ஸ்ப்ருஹா, பரிபவோ விபுலஸ்ச லோப:
தாவத் மமேதி அஸதவக்ரஹ: ஆர்திமூலம்
யாவத் ந தேஅங்க்ரிம் அபயம் பிரவ்ருணீத லோக: (ஸ்ரீ. பா. 3.9.6)
அபயமளிக்கும் உங்கள் பதத்தை ஆஸ்ரயிக்காத வரையில் மக்கள் தனம், வீடு, பந்துக்கள் இவைகளால் ஏறபடும் பயம், சோகம்,ஆசை, அவமானம், பேராசை என்ற கஷ்டங்களுக்குக் காரணமான 'நான், எனது,' என்னும் உணர்வுகளால் பீடிக்கப்படுகிறார்கள்.
ச்ரவணம், கீர்த்தனம் முதலியவைகளால் மனம் பதப்படாதவர்கள் மேலும் மேலும் கர்மங்களை செய்து சம்சாரத்தில் சுழலுகின்றனர்.
தவம், பூஜை, வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகாதி கர்மங்கள் இவை யாவும் உங்களுக்கு அர்ப்பணமாக செய்யப்பட்டால் ஒழிய ஜனன மரண சுழற்சி நிற்பதில்லை.
யஸ்யாவதாரகுணகர்ம விடம்பனானி
நாமானி யே அஸுவிகமே விவசாக்ருணந்தி.
தே நைக ஜன்மசமலம் ஸஹஸா ஏவ ஹித்வா
ஸம்யாந்தி அபாவ்ருதம்ருதம் தமஜம் ப்ரபத்யே. (ஸ்ரீ. பா. 3.9.15)
எவருடைய நாமத்தையும் கல்யாண குணங்களையும், அவதார லீலைகளையும் உயிர் போகும் தருணம் தன்னையறியாமலும் நினைவு கூருகிறவர்கள் மேலான கதியை அடைகிறார்களோ அந்த பிறப்பற்றவரை சரணமடைகிறேன்.
யந்நாபிபிபத்மபவநாத் அஹம் ஆஸம் ஈட்ய
லோகத்ரயோபகரணோ யதனுக்ரஹேண
தஸ்மை நமஸ்த உதரஸ்தபவாய யோக
நித்ரவஸானவிகஸத் அனிலேக்ஷணாய (ஸ்ரீ. பா. 3.9.21)
யாருடைய கருணையால் நாபியிலிருந்து உலகஸ்ருஷ்டிக்காக நான் தோன்றினேனோ, உலகத்தை தம்முள் அடக்கி யோகநித்திரையிலிருந்து மலரும் தாமரைக்கண்களை உடைய அந்த துதிக்கத்தகுந்த ஈசனான உங்களை நமஸ்கரிக்கிறேன்.
பிரளய ஜலத்தில் வசிக்கின்றவரும், அளவற்ற சக்தியை உடையவரும் ஆன எந்த பகவானுடைய நாபியாகிற மடுவில் இருந்து அவருடைய சிருஷ்டி சக்தியாகிய நான் தோன்றினேனோ அந்த பகவானுடைய விராட் ரூபத்தின் பகுதிகளை விவரிக்கும் எனக்கு வேதங்களின் வாக்குகள் மறையாமல் இருக்க வேண்டும்.
பிரம்மா பகவானைத் தன் மனதிற்கும் வாக்குக்கும் எட்டிய வரையில் இவ்வாறு துதித்த பின் முழுவதுமாக அவருடைய மகிமையைக் கூறத் தன் இயலாமையை எண்ணியவர் போல வாளாவிருந்தார். அப்போது பகவான் அவரை ஸ்ருஷ்டி செய்வதில் ஊக்கமளிக்கும்போருட்டுபின்வருமாறு கூறினார்.
வேதத்தின் உருவாகிய பிரம்ம தேவரே, சோர்வடைய வேண்டாம். நீர் எதை விரும்புகிறீரோ ( சிருஷ்டித்திறன்) அது என்னால் ஏற்கெனவே கொடுக்கப்பட்டது. மறுபடியும் தவத்தையும் என்னிடத்தில் பக்தியும் மேற்கொள்ளும், நீர் சிருஷ்டிக்க விரும்பிய உலகங்களை உங்களுக்குள் காண்பீர். நீர் இந்த உத்தமமான ஸ்தோத்திரத்தை செய்தது என் அனுக்ரஹத்தினால்தான் என்று அறிவீர்.
ய ஏதேன புமான் நித்யம் ஸ்துத்வா ஸ்தோத்ரேண மாம் பஜேத்
தஸ்ய ஆசு ஸம்ப்ரஸீதேயம் ஸர்வகாமவரேச்வர: ( ஸ்ரீ.பா. 3.9. 4௦)
எந்த மனிதன் இந்த ஸ்தோத்திரத்தினால் என்னை தினமும் வழிபடுவானோ அவனுக்கு எல்லா மனோபீஷ்டங்களையும் அளிப்பவனாக அருள் புரிவேன்.
நான் ஜீவர்களுக்குள் அந்தராத்மாவாக இருக்கிறேன் அதனால் ப்ரியமானவற்றுள் மிகப் பிரியமானவன். ஆதலால் உடல் சம்பந்தப்பட்ட வஸ்துக்களிடம் இருந்து சிந்தையைத்திருப்பி என்னிடம் செலுத்தவேண்டும்.
நீர் முன்போலவே இந்த மூன்று லோகங்களையும் தானாகவே ஸ்ருஷ்டிப்பீராக.
இவ்விதம் பிரம்மாவுக்கு சிருஷ்டி செய்யும் முறையை உபதேசித்துவிட்டு பகவான் மறைந்தார்.
No comments:
Post a Comment