ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 3-அத்தியாயம் 8
மைத்ரேயர் கூறினார்.
சனத்குமரரும் மற்ற ரிஷிகளும் ஒருமுறை பாதாள லோகத்திற்குச் சென்று சங்கர்ஷணரைக் கண்டு வாசுதேவரைப் பற்றி வினவினர்.
(பகவானின் வ்யூஹ உருவம் நான்கு. அவை முறையே வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர் எனப்படும்.ஆதிசேஷன் சங்கர்ஷணரின் அம்சமாகக் கருதப்படுகிறார். )
சங்கர்ஷணர் பாகவதத்தை சனத்குமாரருக்கு உபதேசிக்க அவர் அதை பரமஹம்சரான சாங்க்யாயனருக்குக் கூற அதை அவர் என் குருவான பராசரருக்கும் ப்ருஹஸ்பதிக்கும் கூறினார். பராசரரின் கருணையால் எனக்கு உபதேசிக்கப்பட்ட இந்த பாகவதத்தை உமக்குக் கூறுகிறேன்."
இந்த ஸ்தூல உலகம் பிரளயத்தில் அழிந்தபின்னர் மகாவிஷ்ணு சுத்த சத்வமாகிய நீரில்(cosmic waters) ஆதிசேஷன் மேல் சயனித்து நித்திரையில் இருந்தார். அப்போது இந்த பிரபஞ்சம் அவருக்குள் சூக்ஷ்மவடிவத்தில் இருந்தது.
ஆயிரம் சதுர்யுகங்கள் இவ்வாறு கழிந்த பின் காலம் என்னும் சக்தி அவர் துயிலெழக் காரணமாயிற்று. அப்போது ஸ்ருஷ்டிக்குத் தேவையான சக்திகள் அவருடைய நாபியில் இருந்து தாமரைமொட்டாக வெளிப்பட்டன. அதன் ஒளி எங்கும் பரவியது. அதனுள் பகவான் புகுந்து பிரம்மாவைத் தோற்றுவித்தார். தாமரையின் மேல் பிரம்மா தோன்றினார்.
பிரம்மாவுக்கு தான் யார் எனபது புரியவில்லை. அவர் நான்கு திசைகளிலும் திரும்பிப்பார்க்க அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின. ஆயினும் எங்கும் நீரைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் அந்தத் தாமரைத்தண்டின் உள்ளேயே பிரவேசித்து தன்னுடைய ஆதாரம் எங்கே என்று தேடினார். ஒன்றும் தெரியவில்லை
.பிறகு பிரயாசையை விட்டு சமாதியில் ஆழ்ந்தார். நூறு வருடங்களின் முடிவில் ( பிரம்மாவின் நூறு வருடம் , நம்முடையதல்ல.) அவருக்கு ஆத்மஞானம் கிட்டியது. பிறகு பகவானின் தரிசனமும் கிடைத்தது.
பிரம்மா கண்ட பகவானின் தோற்றம் பாகவதத்தில் அழகாக வர்ணிக்கப்படுகிறது.
பகவான் ஆதிசேஷன் மேல் ஒரு மரகத மலையைப்போல சயநித்திருக்கிறார். (பச்சைமாமலை போல மேனி) அவருடைய பீதாம்பரம் மலையின் மேல் உள்ள சந்த்யாகாலத்து மேகங்கள். அவருடைய கிரீடம் தங்கிய தலை அதன் ஒளிவிடும் சிகரம்.
அவருடைய மாலைகள் ஆபரணங்கள் முதலியவை மலையில் உள்ள நீரருவிகள் , மரங்கள், புஷ்பங்கள், ரத்தினங்கள். பகவானுடைய உருவம் இந்த பிரபஞ்சமாகவே தோன்றிற்று.
பிறைச்சந்திரனைப்போல் தோற்றமளிக்கும் அவருடைய பாதங்கள் பக்தர்களுக்கு வேண்டியதை வழங்கும் காமதேனு. அவர் மார்பில் உள்ள வைஜயந்திமாலை வேதமெனும் வண்டுகளால் சூழப்பட்டு விளங்கிற்று.
பிரம்மா பகவானுடைய நாபியில் ஒரு தாமரையையும் அதன் மேல் தன்னையும் கண்டார். சிருஷ்டி செய்யும் ஆவலால் உந்தப்பட்டு பிரம்மா பகவானைத் துதிசெய்யலானார்
No comments:
Post a Comment