ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 6
ஸர்கம் (சிருஷ்டி) வர்ணனையில் அடுத்து விராட்புருஷனின் உத்பத்தி மைத்ரேயரால் வர்ணிக்கப்படுகிறது.
சென்ற அத்தியாயத்தில் மஹத், அஹம்காரம், மனம், (cosmic mind) பஞ்ச ஞான இந்த்ரியங்கள் , பஞ்ச கர்ம இந்த்ரியங்கள், பஞ்சதன்மாத்திரைகள் , பஞ்ச பூதங்கள் ஆக இருபத்து மூன்று தத்வங்கள் உண்டாயின என்று பார்த்தோம். இவைகளின் உள் பகவான் ஒரே சமயத்தில் புகுந்ததனால் விராட் புருஷன் தோன்றினார்.
உபநிஷத் வாக்கியத்தின் படி "தத் ஐக்ஷத பஹுச்யாம் பிரஜாயேய " நான் பலவாக ஆவேன் என்ற பிரம்மத்தின் சங்கல்பத்தினால் இந்த 23 தத்துவங்கள் தோன்றின. பிறகு பிரம்மம் சங்கல்பித்தது 'அனேன ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி ,' இவைகளின் உள் இவற்றின்ஜீவனாகப் புகுந்து பெயர் உருவம் இவை கற்பிப்பேன். (சாந்தோ. உப.)இதுதான் இங்கே கூறப்படுகிறது.
விராட்புருஷன் தேவசக்தி, கர்மசக்தி, போகத்ரு சக்தி என்ற மூன்று விதங்களில் ஸ்தூல பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார்.
தேவசக்தி என்பது எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தராத்மாவாக இருக்கும் பகவானின் சக்தி. கர்ம சக்தி என்பது பஞ்ச பிராணனும் அவைகளின் செயல்களும். போக்த்ரு சக்தி அத்யாத்மம், அதிதைவிகம், அதிபௌதிகம் என மூன்று வகைப்படும். இவையும் விராட் புருஷனின் அங்கங்களும் இரண்டாவது ஸ்கந்தத்தின் 5, 6, அத்யாயங்களில் ஏற்கெனவே விளக்கப்பட்டிருக்கின்றன.
விராட் புருஷனின் விரிவான வர்ணனைக்குப்பின் மைத்ரேயர் பக்வானுடைய மாயையால் கற்பிக்கப்பட்ட இந்த விராட் புருஷனை எவராலும் கற்பனை கூட செய்ய முடியாது. வர்ணிப்பது எங்ஙனம் என்கிறார்.
யதோ அப்ராப்ய நிவர்த்தந்த வாசஸ்ச மனசா ஸஹ
அஹம் ச அன்ய இமே தேவா; தஸ்மை பகவதே நம:
( ஸ்ரீ.பா. 3.6.39)
எவரை அறியமாட்டாமல் வாக்கும் மனமும் திரும்பியதோ, எவரை அவரால் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகளும் அறிய முடியாதோ அவருக்கு நமஸ்காரம்.
'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ,' (தைத்திரீய.உப. 2.2.9)
No comments:
Post a Comment