ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 7
அத்தியாயம் 7
இதுவரை சர்கம் அதாவது பகவானின் விராட் ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டது. அடுத்து விஸர்கம் அதாவது விராட் புருஷனிடம் இருந்து தோன்றிய பிரம்மாவின் ஸ்ருஷ்டி இனி வரும் அத்தியாயங்களில் கூறப்படுகிறது.
இந்த அத்தியாயம் முக்கியமாக விதுரரின் கேள்விகளும் மைத்ரேயரின் விடைகளுமாக அமைந்துள்ளது. விதுரர் கேட்டார்.
ப்ரம்மன் கதம் பகவத: சின்மாத்ரஸ்ய அவிகாரிண:
லீலயா சாபி யுஜ்யேரன் நிர்குணஸ்ய குணா; க்ரியா: (ஸ்ரீ. பா. 3.7.2)
மஹரிஷியே, பிரம்மமாகிய பகவான் நிர்குணன், ஞானச்வரூபன் , மாற்றமில்லாதவன். அப்படி இருக்கையில் அவருக்கு குணம் செய்கை ஏது? இச்சையே இல்லாதவர் ஏன் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார்? அது உண்மையில் அவருடைய மாயையே என்றால், அவரே எல்லா ஜீவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்கிற போது ஜீவர்களுக்கு ஏன் கர்மா அதன்மூலம் சுகதுக்கங்கள் வருகின்றன?
இதைக்கேட்டு மைத்ரேயர் பின்வருமாறு பதிலளித்தார்.
பகவானின் மாயையே சம்சார பந்தத்திற்கும் அதனால ஏற்படும் துக்கத்திற்கும் காரணம். அது உண்மையில் ஸ்வப்ன நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வித்தியாசம் போலத்தான். ஆத்மா தேகத்தின் மூலம் பார்க்கப்படும்போது உடலின் அதன் மூலம் மனதின் குறைபாடுகள் ஆத்மாவில் ப்ரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.
சந்திரன் நீரில் பிரதிபலிக்கும்போது அந்த நீரின் நிலைக்கேற்ப மாறுபடுவதில்லையா?அதுபோலத்தான் ஆத்மா ஒன்றானாலும் வெவ்வேறாகத் தோற்றம் அளிக்கிறது. இந்த மயக்கம் பகவத்பக்தியின் மூலம் மறையும்.
அவரைப்பற்றி கேட்பதனாலேயே சம்சாரத்தினால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்றால் அவரிடம் நீங்காத பக்தி கொண்டவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ.
விதுரர் கூறினார்.
உங்கள் சொற்களால் எனக்கு சந்தேகம் எல்லாம் தீர்ந்தது. ஈஸ்வர-ஜீவ ஸ்வபாவத்தைப்பற்றி நன்கு அறிந்தேன். உலக வாழ்க்கையின் காரணம் மாயை. அதுவும் பகவானின் சக்தி. அவனை அறிந்துகொண்டால் மாயை விலகும்.ஏனென்றால் அவனன்றி உலகில்லை.
(இங்குதான் விதுரர் நம் போன்றவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்!)
அவர் கூறியது என்னவென்றால்,
யஸ்ச மூடதமோ லோகே யஸ்ச புத்தே: பரம் கத:
தாவுபௌ சுகம் ஏதேதே க்லிச்யந்தி அந்தரிதோ ஜனா:
உலக வாழ்க்கையிலேயே ஈடுபட்டு வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்பவரும், உடல் மனம் புத்தி இவற்றிற்கு மேலாக சிந்தித்து ஞானம் அடைந்தவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் இடையில் அகப்பட்டு இருக்கின்றவர்களே கஷ்டப்படுகிறார்கள்.
நாமெல்லாம் அப்படித்தானே ? பற்றை விட்டு அவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற இச்சை இருக்கிறது ஆனாலும் விட முடியாமல் தவிக்கிறோம்.
பிறகு விதுரர் கூறினார்.
விராட் புருஷனைப் பற்றி கூறினீர்கள் . அதற்குப்பின் ஏற்பட்ட சிருஷ்டி, , ப்ரஜாபதிகள், வர்ணாஸ்ரம தர்மங்கள், மனுக்கள், அவர்களின் வம்சம், பகவானின் அருள் பெரும் வழி, தர்ம காரியங்கள் அவற்றின் பலன்கள், சிருஷ்டி ஸ்திதி ,பிரளயம் , ஜீவன், ஈச்வரன் , குருசிஷ்ய உறவு, , பக்தி, ஞானம் , அதற்கு குருவின் முக்கியத்வம், பகவானின் அவதாரங்கள், முதலிய எல்லாவற்றையும் பற்றி கூறவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
அதற்கு பதிலாக பாகவதம் முழுவதையும் சொல்ல ஆரம்பித்தார் மைத்ரேயர்
(விட்டுப் போன அத்தியாயம்)
No comments:
Post a Comment