ஸ்ரீமதபாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 5
விதுரர் ஹரித்வாரத்தில் மைத்ரேயரைக் கண்டார். அவரிடம் பின்வருமாறு கூறினார்.
ஸுகாய கர்மாணி கரோதி லோக: ந தை: ஸுகம் வா அன்யத் உபாரமம் வா
விந்தேத பூய: தத ஏவ துஹ்கம் யதத்ர யுக்தம் பகவான் வதேத் ந:
மனிதர்கள் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று பல செயல்கள் செய்கிறார்கள் . ஆனால் அதன் மூலம் சுகமும் கிடைப்பதில்லை துக்கமும் அகல்வதில்லை. கஷ்டத்தைப் போக்க அனுசரிக்கும் செயல்கள் மேலும் கஷ்டத்தையே தருகின்றன. ஞானியாகிய தாங்கள் இதற்கு பரிஹாரம் கூறவேண்டும்.
முன் செய்த வினைப்பயனாக பகவானை மறந்து பாவங்கள் செய்து கஷ்டப்படும் மானிடர்க்கு இறங்கி தங்களைப்போன்ற பக்தர்கள் உலகில் சஞ்சரிக்கின்றீர்கள்.
இவ்வாறு கூறிவிட்டு விதுரர் மைத்ரேயரிடம் ஏழு கேள்விகள் கேட்டார்.
அவையாவன;
1.பக்தர்கள் ஞானம் பெற எவ்வழி சிறந்தது?
2. ஆசையே இல்லாத பகவான் எவ்வாறு இந்த உலகத்தை தோற்றுவித்தார்?
3. எவ்வாறு இந்த பிரபஞ்சத்தினுள் புகுந்து பலவாக தோற்றம் அளித்தார் ?
4. ஒவ்வொரு உயிரின் உள்ளும் ஹ்ருதயாகாசத்தில் புகுந்து அங்கு செயலற்றவராக எங்ஙனம் இருந்தார்?
5.உலகைக் காக்க எவ்விதம் பல அவதாரங்களை எடுத்தார் ?
6. உலகங்களையும் அவற்றின் அதிபதிகளையும் எவ்வாறு ஸ்ருஷ்டித்தார்?
7. ஒவ்வொருஜீவனின் கர்மாவையும் அதன் பலனையும் எவ்வாறு நிர்ணயித்தார்?
விதுரர் முடிவில் கூறினார்.
"பரமபாவனமான கீர்த்தியை உடைய சகல மங்களமும் அருளும் அந்த ஹரியின் கதையை வண்டுகள் புஷ்பங்களிளிருந்து தேனைத் திரட்டித் தருவது போல எம் போன்றவரின் நன்மைக்காக கூறியருளும்."
மைத்ரேயர் விதுரரை நோக்கிக் கூறினார்.
"தாங்கள் பகவானின் ப்ரியத்திற்குப் பாத்திரமானவர். அதனால்தானே பகவான் பரமபதம் செல்கையில் உமக்கு உபதேசம் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்!"
பிறகு மைத்ரேயர் விதுரருக்கு அவர் முன்ஜென்மத்தை நினைவு படுத்தி அவர் மாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் வந்த யம தருமன் எனக் கூறினார். பிறகு மைத்ரேயர் சிருஷ்டியைப் பற்றி கூற ஆரம்பித்தார்.
முதலில் பரப்ரம்மமான பகவான் ஒருவரே இருந்தார்., அவரைத் தவிரவேறு எதுவும் இல்லை.
'ஸதேவ சௌம்ய இதம் அக்ரா ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .' – சாந்தோ. உப. 6.2.1.)
தத் ஐக்ஷத் அபஹு ஸ்யாம்ம் பிரஜாயேய (சாந்தோ. உப. 6.2.3)
பிறகு அவர் பலவாக ஆக சங்கல்பித்தார் . அவருடைய மாயையின் மூலம் காலத்தின் தூண்டுதலால் மஹத் தத்வம் தோன்றியது. இது புத்தி ( cosmic intellect) என்றும் கூறப்படுகிறது. மஹத் தத்வத்தில் இருந்து அஹம் தத்வம் ( I consciousness) அல்லது அஹங்காரம் தோன்றிற்று. அஹம்காரம் என்பது சாத்விகம் ராஜசம் தாமசம் என மூன்றுவகைப்படும். இவை முறையே மனம் , இந்த்ரியங்கள், பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம உருவாகிய தன்மாத்திரைகள் இவைகளுக்கு காரணம் ஆவன.
பஞ்ச தன்மாத்திரைகள் ஆவன, சப்தம், ஸ்பர்சம் , ரூபம், ருசி, கந்தம்.. முதலில் சப்த தன்மாத்திரையில் இருந்து ஆகாசம்(SPACE not sky)தோன்றியது. ஆகாசத்திலிருந்து ஸ்பர்ச தன்மாத்திரையும் அதிலிருந்து வாயுவும் தோன்றின. வாயுவிலிருந்து ரூப தன்மாத்திரையும் அதிலிருந்து அக்னியும் , பிறகு அக்னியிலிருந்து ருசியும் அதிலிருந்து நீரும் , நீரிலிருந்து கந்தமும் அதிலிருந்து மண்ணும் என பஞ்ச பூதங்கள் ஈஸ்வர சங்கல்பத்தினால் மாயையின் மூலம் காலத்தின் உதவியால் உண்டாயின.
இவ்விதம் ஆகாசத்தின் குணம் சப்தம், வாயுவின் குணங்கள் சப்தம் , ஸ்பர்சம், அக்னியின் குணங்கள் சப்தம், ஸ்பரிசம், ரூபம் , நீரின் குணங்கள் சப்தம், ஸ்பரிசம், ரூபம், சுவை, மண்ணின் குணங்கள் இவை நான்கோடு கந்தம் சேர்ந்து ஐந்தாகும்.
பஞ்ச பூதங்களும் தனித்தனியே நின்றதால் பிரபஞ்சம் உருவாகவில்லை.
எவ்வாறு அது நிகழ்ந்தது என்பதையும் விராட் புருஷனின் வர்ணனையும் அடுத்த அத்தியாயத்தில் விளக்கப் படுகின்றன.
No comments:
Post a Comment