ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 2- அத்தியாயம் 1
பரீக்ஷித் கேட்ட 'ச்ரோத்வ்யாதிஷு ய: பர:,' கேட்கப்பட வேண்டியவைகளில் மிகவும் முக்கியமானது என்ன " என்ற கேள்விக்கு சுகர் அதுதான் பாகவத புராணம் என்று பதிலளித்தார் .
சுகர் கூறியதாவது,
" இந்த பாகவத புராணம் வேதத்திற்கு சமமானது. இதை கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன் த்வாபரயுகத்தில் என் தந்தையான வியாஸரிடமிருந்து அத்யயனம் செய்தேன்.
நிர்குண பிரம்மத்தில் நிலைத்த முனிவர்களும் ஹரியின் குணங்களைப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஹரியின் கருணைக்குப் பாத்திரமான உங்களுக்கு நான் இதை அளிக்கிறேன்
.
கட்வாங்கன் தன் ஆயுள் ஒரு முஹுர்த்தத்தில் முடியப்போவதை அறிந்து சர்வசங்க பரித்யாகம் செய்து ஹரியை சரணமடைந்து முக்தியடைந்தான். உங்களுக்கு ஏழு நாட்கள் இருக்கின்றனவே. அதற்குள் பரலோக சித்திக்கான எல்லாவற்றையும் சம்பாதித்த்துக்கொள்ளும் " என்றார்.
கட்வாங்கன் என்ற ராஜரிஷி தேவர்களுக்கு உதவியாக யுத்தம் செய்தபின் தன் ஆயுள் எதுவரை என்று கேட்க அதற்கு தேவர்கள் ஒரு முஹூர்த்தமே அவன் ஆயுள் என்று கூறினார். உடனே அவன் பூலோகம் திரும்பி ஹரியை சரணம் அடைந்தான். பரீக்ஷித்திற்கு தன்னால் முடியுமா என்ற சந்தேகம் வருமோ என்றெண்ணி சுகர் கட்வாங்கனைப்பற்றி கூறினார்.
( தேவலோகம் போக பூமி. பகவான் அருள் பெற பூலோகமாகிற கர்ம பூமிக்குத்தான் வரவேண்டும். இதனால் தான் சாபம் பெற்ற இந்திரன் முதலியோர் பூலோகத்திற்கு வந்த தவம் முதலியன செய்தார்கள். )
பிறகு சுகர் பரீக்ஷித்திற்கு என்னசெய்யவேண்டும் என்று உபதேசித்தார்
1.முடிவுகாலம் எய்தியபோது உடலிலும் உடல் சம்பந்தமான உறவிலும் பற்றை ஒழிக்க வேண்டும்.
2. துறவு பூண்டு வீட்டிலிருந்து வெளிக்கிளம்பி புண்ய தீர்த்தங்களில் நீராடி பரிசுத்தமான இடத்தில் ஆசனம் அமைத்து அமரவேண்டும்.
கீதையில் பகவான் இதை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போமா?
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸனம் ஆத்மன:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகுசோத்தரம்.(ப.கீ. 6.11)
பரிசுத்தமான இடம், மிக உயரமும் மிகதாழ்வாகவும் இல்லாத ஸ்திரமான ஆஸனம் , தர்பைப்புல், அதன்மேல் தோல் அதன்மேல் துணி. இவ்வாறுள்ள ஆசனம்தான் சிறந்தது.
மிக உயரம் என்றால் மலை உச்சி போன்ற இடம் , கீழே விழும் அபாயம் உள்ளதாகையால் சரியல்ல. மிகவும் தாழ்வான பூமிக்கடியில் உள்ள இடமும் சரியல்ல. புழு, பூச்சி , நீர்ப்பெருக்கு இவைகளால் இடைஞ்சல் ஏற்படலாம். ஸ்திரமான ஆஸனம் பாதுகாப்பிற்கு. தர்பைப்புல் குத்தாமல் இருக்க தோல் , துணியால் மூடுவது தோலின் ரோமங்கள் இடையூறாக இல்லாமல் இருக்க. இவ்வாறு எப்படி பகவான் பக்தனின் நலத்தை நாடுகிறான் என்பது வியப்பைத் தருவது. .
3. மூன்று மாத்திரைகள் கொண்ட ஓம்காரத்தை மானசீகமாக ஜபம் செய்ய வேண்டும்.ப்ராணாயாமம் செய்து மனத்தை வசப்படுத்த வேண்டும்.
4. புத்தியே சாரதியாக குதிரைகள் போன்ற இந்த்ரியங்களை வெளி விஷயங்களில் போக விடாமல் இழுத்துப் பிடித்து மனதை பகவானுடைய மங்கள ரூபத்தில் நிலைபெறச்செய்ய வேண்டும். இது ப்ரத்யாஹாரம்.
5. ஒருமுகப்பட்ட மனதினால் பகவானின் திவ்யமங்கள ஸ்வரூபத்தில் லயிக்கச்செய்து, (தாரணா) ஏகாக்ர சித்தத்துடன் அவனையே நினைக்கவேண்டும். ( தியானம்). .மனம் இவ்வாறு அடங்கியதும் உண்டாகும் ஆனந்தமே ஸமாதி.
'பதம் தத் பரமம் விஷ்ணோ: மனோ யத்ர ப்ரஸீததி.' அதுதான் விஷ்ணுவின் பரமபதம்.
மேலும் சுகர் கூறியதாவது ,
இந்த ஸ்தூலப்ரபஞ்சம் பகவானின் ஸ்தூலரூபம். ப்ரம்மாண்டகோசம் எனப்படும் இதில் ஏழு ஆவரணங்களாவன, மஹத் என்னும் புத்தி, அஹம்காரம் , பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம ரூபமான பஞ்ச தன்மாத்திரைகள்.
சுக்ர் பகவானின் விஸ்வரூபத்தை வர்ணித்துப் இந்த ரூபத்தையே யோகிகள் தியானிக்கின்றனர் என்றார். அடுத்த அத்தியாயத்தில் ஹ்ருதயத்தில் உள்ளதாக தியானிக்கும் திவ்யமங்கள அந்தர்யாமி ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார்.,
No comments:
Post a Comment