Tuesday, August 21, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 18/19 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1 - அத்தியாயம் 18/19

அத்தியாயம் 18

ந உத்தமச்லோகவார்த்தானாம் ஜுஷதாம் தத்கதாம்ருதம் 
ஸ்யாத் ஸம்ப்ரமோ அந்தகாலே அபி ஸ்மரதாம் தத் பதாம்புஜம் (பா. 1.18.4)

உத்தமச்லோக வார்த்தானாம் –பகவானைப் பற்றியே பேசுபவர்களுக்கும்
ஜுஷதாம் தத் கதாம்ருதம்- அவனுடைய கதைகளாகிய அம்ருதத்தை பருகுபவர்களுக்கும் 
தத் பதாம்புஜம் ஸ்ம்ரதாம் – அவனுடைய பதகமலங்களையே நினைப்பவர்க்கும் 
அந்தகாலே அபி – மரணம் ஸம்பவிக்கும்போதும் 
ஸம்பிரம: -கலக்கம் 
ந ஸ்யாத்- உண்டாகாது

இவ்வாறு சூதர் கூறியதைக்கேட்ட முனிவர்கள் பரீக்ஷித்திற்கு சுகரால் பாகவதர்களின் மனதுக்கினிய ஒப்பற்ற புண்ணியம் வாய்ந்த முக்திக்கு வழியைக்காட்டும் பகவானின் லீலைகளைப் பற்றிய கதைகள் உபதேசிக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டனர். 
சூதர் கூறினார்.

ஒரு சமயம் பரீக்ஷித் வில்லேந்தி வேட்டையாடும் பொருட்டு வனத்திற்குச் சென்றார். மான்களை தொடர்ந்து ஓடி பசியும் களைப்பும் மேலிட்டு தாகத்தால் வருந்தியபோது அங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் கண்மூடி தியானத்தில் இருந்த முனிவரைக் கண்டார். அவரிடம் குடிக்க நீர் கேட்கையில் வாய் பேசாமல் அமர்ந்திருந்த அந்த முனிவர் தன்னை அவமதித்ததாக எண்ணி கோபமும் வெறுப்பும் மேலிட்டு வெளிச்செல்கையில் அங்கு ஒரு செத்த பாம்பினைக் கண்டார். அந்த முனிவர் நிஷ்டையில் இருப்பது நிஜமா அல்லது தன்னை அவமதிக்க பொய் சமாதியில் இருக்கிறாரா என்றறிய அந்தப் பாம்பை வில்லின் நுனியால் தூக்கி அந்த முனிவர் கழுத்தில் போட்டுவிட்டு தன் ராஜ்ஜியத்திற்கு திரும்பிப் போய் விட்டார்.
அவர் கலிக்கு இரங்கி இடம் கொடுத்ததால் கலி இவரிடமே த்ன் சேஷ்டையைக் காட்ட முற்பட்டான் போலும்.
அந்த முனிவரின் சிறுவயது மகன் ஆஸ்ரமத்திற்கு திரும்பியதும் அரசனின் செய்கையினால் கோபம் கொண்டு ஏழு நாட்களில் அவ்வரசன் தக்ஷகன் என்னும் பாம்பினால் கடிக்கப்பட்டு உயிர் நீப்பான் என சாபமிட்டான். முனிவர் நிஷ்டை கலைந்ததும் அதைக் கேட்டு வருந்தி . எல்லோரையும் காக்கும் அரசன் செய்த ஒரு சிறு பிழைக்கு இவ்வாறு பெரிய தண்டனை கூடாது என்று மகனை கடிந்துகொண்டார்.

இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். சிறுவனானாலும் தவவலிமை பெரிது என்று தெரிகிறது. நல்லவர்கள் கலியினிடம் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் புத்தி தடுமாற்றத்தால் தவறு இழைப்பவர்களை கலிபுருஷன் பிடிக்கிறான். பரீக்ஷித் பசியாலும் தாகத்தாலும் பீடிக்கப்பட்டு தன்னிலை இழந்து செய்த பிழையினால் பெரிய தண்டனை ஏற்க வேண்டியதாயிற்று. 
ஆனாலும் பக்தர்களை பகவான் கைவிடுவதில்லை. அவனுடைய சாபமே அவன் முக்தி பெறும் மார்க்கமாக அமைந்தது. மரணம் சம்பவிக்கும் போது சுகர் போன்ற மஹான்களின் அருள் கிட்டுவதென்பது மகாபாக்கியம் ஆகும்.

அத்தியாயம் 19
பரீக்ஷித் ராஜ்யத்திற்குத் திரும்பியதுமே தன் செய்கையை நினைந்து வருந்தினார். தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி தெரிந்து கொண்டபின் அதை பகவானின் சித்தம் என்று ஏற்றுக்கொண்டு தன் மகனான் ஜனமேஜயனுக்கு முடி சூட்டி அரசன் என்ற அபிமானம்தான் தன் செய்கைக்குக் காரணம் என்று அறிந்து வைராக்கியம் பூண்டு . தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்ய கங்கைக்கரைக்குச் சென்று வடக்கு நோக்கி தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில் அமர்ந்தார்.

அங்கு எல்லா முனிவர்களும் தங்கள் சிஷ்யர்களுடன் வந்தனர். இது ஒருவர் மனதில் வைராக்கியம் ஏற்படும்போது குருமார்கள் தாமே தேடி வருவர் என்பதை காண்பிக்கிறது.
அந்த முனிவர்கள் பரீக்ஷித்திடம் முக்தியடையும் மார்கத்தை உபதேசித்தனர்.. யாகம், தானம், தவம் முதலிய உபாயங்களை ரிஷிகள் கூற ஆரம்பித்தபோது குழப்பமடைந்த பரீக்ஷித் அவர்களிடம் எப்போதும் முழுமனத்துடன் செய்யவேண்டிய பரிசுத்தமான செயலும் முக்கியமாக மரணத்தருவாயில் இருப்பவன் செய்யவேண்டியது எதுவோ அதை கூறும்படி அவர்களிடம் கேட்டார்.

அப்போது.வ்யாசபுத்திரரான சுகர் அங்கு வந்தார். 
பாகவதம் கூறுகிறது,
தத்ர அபவத் பகவான் வ்யாஸபுத்ர: யத்ருச்ச்யா காம் அடமான: அனபேக்ஷ: (பா. 1.19.25)
அப்போது அங்கு, இச்சைப்படி பூமியெங்கும் சஞ்சரிப்பவரும், விருப்பு வெறுப்பற்றவரும் ஆன வியாசபுத்திரரான சுகர் யதேச்சையாக அவ்விடம் வந்தார்.

ராமாயணத்தில் கூனி யதேச்சையாக உப்பரிகை மேல் ஏறினாள் என்று வால்மீகி சொல்கிறார். பின்னர் சூர்பனகையும் யதேச்சையாக பஞ்சவடிக்கு வந்தாள் என்கிறார். இவர்கள் இருவரும் யதேச்சையாக செய்த காரியங்களே ராவண வதத்திற்கு அடிகோலின. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், யத்ருச்சா, யதேச்சை என்பது உண்மையில் ஈஸ்வர இச்சை. இங்கும் சுகர் தோன்றியது யதேச்சை . ஆனால் இது நன்மை விளைவித்தது. பரீக்ஷித்திற்கு மட்டும் அல்ல. உலக மக்களுக்கும் பாகவதம் என்ற முக்திமார்கத்தை காண்பிக்க எண்ணிய ஈஸ்வர இச்சை.

கிருஹஸ்தர்கள் வீட்டில் பிரம்மஞானிகள் பால் கறக்கும் போதளவே தங்குவர். அதாவது அவர்களுக்கு பாத பூஜை செய்ய ஆகும் தருணம். ஆனால் சுகர் ஏழு நாட்கள் தங்கி பாகவத உபதேசம் கூறியது பரீக்ஷித்திற்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்பட்ட பாக்கியம் ஆகும்.

பரீக்ஷித் சுகரை நோக்கி வினவினார்.
யத் ச்ரோதவ்யம் அதோ ஜாப்யம் யத் கர்த்தவ்யம் நருபி: ப்ரபோ
ஸ்மர்தவ்யம் பஜநீயம் வா ப்ரூஹியத் வா விபர்யயம்.
,
"பிரபுவே எதை மனிதர் கேட்கவேண்டுமோ, ஜபிக்க வேண்டுமோ, எது செய்யப்பட வேண்டுமோ, த்யானிக்கப்பட வேண்டுமோ, பூஜிக்க ப்பட வேண்டுமோ அதையும் எது செய்யக்கூடாது என்பதையும் விளக்க வேண்டும்."

அடுத்த ஸ்கந்தத்தில் இருந்து சுகமுககீதம் ஆகிய பாகவதாம்ருதம் பருகலாம்.


No comments:

Post a Comment