Friday, August 17, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 10/11 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1- அத்தியாயம் 1௦/11

அத்தியாயம் 1௦
பிதாமகரான பீஷ்மரின் ஆசியுடன் யுதிஷ்டிரர். ராஜபரிபாலனம் செய்தார். அவர் ஆட்சியானது எப்படி இருந்தது என்பதை பாகவதம் வர்ணிக்கிறது. 
காமம் வவர்ஷ பர்ஜன்ய: ஸர்வகாமதுஹா மஹீ
சிஷிசு:ஸ்ம: வ்ரஜான் காவ: பயஸோதஸ்வதீ முதா (பா.1. 1௦.3)
மழை வேண்டியவரை பெய்தது. பூமி காமதேனுவைப்போல் ஆசைப்பட்டதெல்லாம் வாரி வழங்கியது. மடிபெருத்த பசுக்கள் இடைச்சேரியெங்கும் பாலைப் பொழிந்தன.

நத்ய: ஸமுத்ரா கிரய: ஸவனஸ்பதி வீருத: 
பலந்தி ஓஷதய:: ஸர்வா: காமம் அன்வ்ருது தஸ்ய வை (பா.1.1௦.4)
நதிகள், கடல்கள், மலைகள், மரங்கள், மூலிகைகள் மற்றும் பயிர்கள் எல்லாம் அந்தந்த பருவத்தில் பலன் கொடுப்பவையாகின.

ந ஆதய: வ்யாதய: க்லேசா: தைவபூதாத்மஹேதவ:
அஜாதஸத்ரௌ அபவன்ம ஜந்தூனாம் ராக்ஞி கர்ஹிசித். (1.1௦. 5)
உடலுக்கோ மனத்திற்கோ எந்த துன்பமும் இயற்கையாலோ மற்றவர்களாலோ பிராணிகளுக்கோ மனிதர்களுக்கோ ஏற்படவில்லை.

கிருஷ்ணர் பாண்டவர்களையும் தங்கையையும் சந்தோஷப்படுத்த சிலகாலம் தங்கி இருந்துவிட்டு த்வாரகைக்கு புறப்பட்டார். ஸ்திரீகள் பிரிவாற்றாமையால் ஏற்பட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு உப்பரிகைகளில் இருந்து தங்கள் அன்பு கலந்த பார்வைகளுடன் மலர்களை தூவினர்.கிருஷ்ணரும் தன் பார்வையாலேயே அவர்களை மகிழ்வித்தார்.

தேரில் உத்தவரும் சாத்யகியும் கவரி வீச அர்ஜுனன் ரத்தினங்களும் முத்துக்களும் பதித்த குடையைப் பிடிக்க பிரிய மனமில்லாமல் தொடர்ந்த பாண்டவருடன் கிருஷ்ணர் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற பின் பாண்டவர்களை திருப்பி அனுப்பிவிட்டு சாத்யகியுடனும் உத்தவருடனும் தன் பிரயாணத்தை தொடர்ந்தார்.

அத்தியாயம் 11
த்வாரகையை சமீபித்ததும் கிருஷ்ணர் தன் வருகையை தெரிவிக்க பாஞ்சஜன்யத்தை முழங்கினார். பாகவதம் இதை இவ்வாறு வர்ணிக்கிறது.

ஸ உச்சகாசே தவளோதர: தர: அபி உருக்ரமஸ்ய அதரசோணசோணிமா
தாத்மாயமான: கரகஞ்சஸம்புடே யதாப்ஜகண்டே கலஹம்ஸஉத்ஸ்வன: 
(பா. 1. 11.2)
பாஞ்சஜன்யமானது வெண்மை நிறமானதாயினும் கண்ணனின் அதர சம்பந்தத்தால் சிறிது சிவந்து அவனுடைய கரகமலத்தில் இருந்து சப்தித்தபோது, ஒரு ராஜஹம்சம் தாமரை மலரின் உள்ளிருந்து கூவுவது போல இருந்தது.

அந்த சப்தத்தைக்கேட்டு எல்லோரும் விரைந்து வந்தனர். அவரவர் கொணர்ந்தவைகளை ஏற்று எல்லோருடனும் கிருஷ்ணர் த்வாரகைக்குள் பிரவேசித்தார் .

எப்போதும் கிருஷணனைப் பார்த்துக்கொண்டே இருப்பவராயினும் த்வாரகாவாசிகள் திருப்தி அடைந்தாரில்லை.

கிருஷ்ணர் தன் பெற்றோரை வணங்கிவிட்டு தன் மாளிகை அடைந்தார். அங்கு அவர் மனைவிகள் அவரைக் காணும்போது புதிதாகப் பார்ப்பதுபோல் ஒரு ஆநந்தத்தை அடைந்தார்கள்.


'பதே பதே கா விரமேத தத்பதாத் சலா அபி யத் ஸ்ரீ: ஜஹாதி கர்ஹிசித் ' 
யார்தான் அவர் பாதங்களை விட்டுச் செல்ல விரும்புவர்?ஓரிடத்திலும் நிலையாக நில்லாதவள் என்று கூறப்படும் ஸ்ரீதேவி கூட அவரை விட்டு பிரிவதில்லையே 
.
மானுட சரீரம் எடுத்து மனைவிகளுடன் ரமிப்பவர் என்ற பிரமையும் அவருடைய மாயை தான். 
எப்படி புத்தியானது ஆத்மாவுடன் கூடவே இருந்தாலும் ஆத்மாவுடன் ஒன்றுவதில்லையோ அதுபோல ஈச்வரன் பிரக்ரருதியுடன் சேர்ந்து இருந்தாலும் அதோடு ஒன்றுவதில்லை..


No comments:

Post a Comment