Friday, July 6, 2018

vishnu Sahasranamam

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்-முன்னுரை

மகாபாரதத்தில் உள்ள மூன்று ரத்தினங்களில் ஒன்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம். பகவத்கீதை, ஸனத்சுஜாதீயம் இவை மற்ற இரண்டு. பகவத்கீதை பாரதப்போர் ஆரம்பத்திலும் ஸஹஸ்ரநாமம் முடிவிலும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை எப்படி வாழ வேண்டும் என்று கூறுவதாக வைத்துக்கொண்டால் விஷ்ணு ஸஹஸ்ரநாம நாம் அடைய வேண்டிய இலக்கைக் குறிக்கிறது என்று கூறலாம்.

யுதிஷ்டிரர் கிருஷ்ணனிடம் தர்மோபதேசம் பெற விரும்பியபோது கிருஷ்ணன் அம்புப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் அழைத்துச்சென்றார். அபோது பீஷ்மர் சொன்னது இந்த விஷ்ணுஸஹஸ்ர நாமம். தர்மத்தைப் பற்றி அறிந்துகொள்ள வந்த யுதிஷ்டிரரிடம் விஷ்ணுஸஹஸ்ர நாமம் சொல்வானேன் என்றால் அதுதான் கண்ணனின் லீலை. யுதிஷ்டிரரின் கேள்வி பகவானின் திருவுள்ளப்படி பின் வருமாறு அமைந்தது. 
பீஷ்மரின் தர்மோபதேசத்திற்குப் பிறகு யுதிஷ்டிரரின் ஆறு கேள்விகள்.
1.கிம் ஏகம் தைவதம் லோகே – பரம்பொருள் யார்? 
2.கிம் வாப்யேகம் பராயணம்-அடைய வேண்டிய உயர் லட்சியம் எது? 
3.&4. ஸ்துவந்த: கம், கம் அர்சந்த: ப்ராப்னுயு: மானவா: சுபம்- யாரை துதித்து பூஜித்து மானுடர்கள் நலமடைவார்கள்? 
5. கோ தர்ம: ஸர்வதர்மானாம் பவந்த: பரமோ மத: - உங்கள் கொள்கைப்படி எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மம் எது?
6.கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்மசம்சாரபந்தனாத்- யாரை தியானித்து மக்கள் பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை அடைவர் ?
பீஷ்மர் கடைசிக் கேள்விக்கு முதலில் பதில் கூருகிறார். 
,'"'ஜகத்ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம்." என்று. அதை அடுத்து காண்போம்.விஷ்ணு ஸஹஸ்ர நாமம்- முன்னுரைpart 2

பீஷ்மர், கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்மசம்சாரபந்தனாத்- யாரை தியானித்து மக்கள் பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை அடைவர் ? என்ற கடைசிக் கேள்விக்கு முதலில் பதில் கூறுகிறார்.

,'"'ஜகத்ப்ரபும் தேவதேவம் ஆனந்தம் புருஷோத்தமம்." 
ஜகத் ப்ரபுவான புருஷோத்தாமன் ஆகிய நாராயணன் அனந்தன் தேவர்களுக்கெல்லாம் தலைவன்.. இவனை த்யானிப்பாயாக என்று.

ஜகத் என்பது சேதன அசேதனங்களை உள்ளடக்கியது. இவைகளை சிருஷ்டித்து, காத்து, மீண்டும் தன்னுள் ஒடுங்கச்செய்வதால் பகவான் ஜகத்ப்ரபு.

அவன் தேசம், காலம், உருவம் இவைகளுக்குட்படாததால் அனந்தன் என்று சொல்லப்படுகிறான். அந்தம் என்றால் முடிவு அல்லது எல்லை அனந்தம் என்றால் முடிவில்லாதது, எல்லையில்லாதது என்று பொருள்.

புருஷன் என்ற சொல் பூர்ணாத் புருஷ: , எங்கும் நிறைந்தவன் ,புரௌ சேதே இதி புருஷ: , புரம் என்ற சொல் உடலைக் குறிக்கும் அதன் உள் அந்தர்யாமியாக இருப்பவன் என்பது பொருள்.

புருஷ சூக்தத்தில் புருஷன் என்பது பரமபுருஷனே என்று காண்கிறோம்.. புருஷோத்தமன் என்றால் பரமபுருஷன் என்று பொருள். நம்மாழ்வார் உயர்வற உயர் நலம் உடையவன் என்று கூறினது போல், க்ஷர அக்ஷராப்யாம் கார்ய கரணாபயம் உத்க்ருஷ்ட: , அழியும் பொருள்களுக்கும் அழியாத பொருள்களுக்கும், காரிய காரணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.

தேவதேவன் என்றால் பிரம்மன் முதலிய தேவர்களுக்கும் அதிபதி, அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று நம்மாழ்வார் கூறியது போல்

. இதன் மூலம் பகவான் சர்வவ்யாபி அந்தர்யாமி என்று சொல்லப்படுகிறார். இந்த பிரபஞ்சமே அவருடைய சரீரம் அல்லது புரம்.அதனுள் சயநிப்பவர் புருஷன்.

இதற்குப்பிறகு பீஷ்மர் ஸ்துவந்த: கம், கம் அர்சந்த: ப்ராப்னுயு: மானவா: சுபம்- யாரை துதித்து பூஜித்து மானுடர்கள் நலமடைவார்கள்? என்ற மூன்றாவது நான்காவது கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் .

ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண- அவருடைய் ஆயிரம் நாமங்களைச் சொல்லி துதிப்பதால் நலம் உண்டாகும் என்று. பிறகு பீஷ்மர் எவ்வாறு பகவானை பூஜிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தமேவ அர்ச்சயன் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் -அந்த புருஷோத்தமனை எப்போதும் பக்தியுடன் அர்ச்சித்து, 
த்யாயன் ஸ்துவன் நமஸ்யன் ச யஜமான: தமேவ ச 
–தியானம் மனதினால் செய்வது, ஸ்துதி வாக்கினால் செய்வது, நமஸ்காரம் உடலினால் செய்வது. யஜமான என்பது யக்ஞம் செய்வது . இங்கு அது ஆத்மசமர்பணத்தைக் குறிக்கும்.

இந்த பக்தி யோகமே முக்திக்கு வழி என்று கூறுகிறார். கண்ணனும் கீதையில், 'புருஷ: ஸ பரம் பார்த்த பக்த்யா லப்ய: து அனன்யயா, அர்ஜுனா, அந்த பரமபுருஷன் பக்தியால் மட்டுமே அடைய கூடியவன் ,' என்று கூறுகிறார்.

இதன் மூலம் கிமேகம் தைவதம் லோகே, பரம்பொருள் யார்? , கிம் வாப்யேகம் பராயணம் , அடைய வேண்டிய லட்சியம் என்ன, என்ற முதல் இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடுகிறது.

பிறகு பீஷ்மர் விஷ்ணுவை இரண்டு ஸ்லோகங்கள் மூலம் வர்ணித்து விஷ்ணுபக்தியே எல்லா தர்மங் களிலும் மேலானது என்று ஐந்தாவது கேள்வியான கோ தர்ம:: சர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:- - உங்கள் கொள்கைப்படி எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மம் எது? என்பதற்கு பதில் கூறுகிறார்.


No comments:

Post a Comment