Friday, July 6, 2018

Bhaja govindam part2 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் -2

2.மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்;
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

பணம், பணம் என்று நீ பறந்து விடாதே−
மனதைத் தேற்றவும், மறந்து விடாதே;
எதை உனக்கிறைவன் தந்து சென்றானோ−
அதையே கொண்டு நீ, ஆனந்தம் அடைவாய்! (2)
( Padma gopal)

தனாகமத்ரிஷ்ணா என்பது பணத்தாசை. இதை ஜஹீஹி ,விட்டுவிடு. அதாவது மேலும் மேலும் பணம் சேர்க்கவேண்டும் என்ற பேராசையை இது குறிக்கிறது. .

வித்ருஷ்ணாம் – ஆசையில்லாத , மனஸி- மனதில், குரு சத்புத்திம்- நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள் என்கிறார்.

அதாவது இருப்பதை வைத்து திருப்தி அடையும் எண்ணம். அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் அமைகின்றன. வேண்டும் என்றால் கிடைக்காது வேண்டாம் என்றால் வராமல் இருக்காது. நமக்கு இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. அவன் அருளாததை யாரும் கொடுக்கவும் முடியாது.

அதனால் எது வந்ததோ அது இறைவன் அருள் என்று எண்ணி த்ருப்தியடைய வேண்டும். இதைத்தான் யல்லபதே நிஜ கர்மோபாத்தம் வித்தம் தேன வினோதய சித்தம் என்று கூறுகிறார்.

மனித மனம் இருப்பதைவிட்டு இல்லாததை எண்ணி ஏங்கும் தன்மை வாய்ந்தது., அதை வெற்றி கொண்டால் என்றும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நிம்மதியாக இருக்கலாம்.

வித்ருஷ்ணா ஆசையற்று இருப்பது என்பது அவ்வளவு சுலபமா என்ன> அதற்கும் வழி கூறுகிறார், குரு சத்புத்திம் என்று. சத்புத்திஎன்பது கீழான உலக விஷயங்களை விட்டு மேலான இறைவனிடம் மனதை செலுத்துவதாகும். ஒரு குழந்தையிடம் ஒரு சுவை உள்ள தின்பண்டத்தைக் காட்டி வேண்டாத பொருளை மறக்கச் செய்வது போல மனதை இறைவனிடம் ஈடுபடுத்தி இந்த உலக இச்சைகளை மறக்கச்செய்வதுதான் குருசத் புத்திம் என்பதன் கருத்து.

இதைத்தான் வள்ளுவர் 'பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக அப்பற்று விடற்கு' என்று கூறியுள்ளார்

.மூவாசையாவது பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை. இதில் முதலாவது பெருவாரியாக காணப்படுவதால் அதை முதலில் கூறிப்பின் இரண்டாவதாகிய பெண்ணாசையைப் பற்றி கூறுகிறார்.


No comments:

Post a Comment