Friday, July 6, 2018

Conversation between Garuda, Adisesha, shankam & chakram - Spiritual story

ஒரு சின்ன மீட்டிங் - J.K. SIVAN

வைகுண்டத்தில் காலை வேளை . அதிகம் யாரும் ஸ்ரீமந் நாராயணனை இன்னும் வந்து அவரது தனிமையை கலைக்கவில்லை. இருந்தும் அன்றென்னவோ கொஞ்ச நேரம் நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்ளவில்லை. அவருடைய ஒவ்வொரு செய்கைக்கும் எண்ணத்திற்கும் தக்க காரணம் இல்லாமலா இருக்கும்?. எழுந்து தனியே எங்கோ சென்றார்? மேலும் கையில் சங்கமோ சக்ரமோ எதையும் எடுத்துக் கொண்டும் செல்ல வில்லை. எனவே தான் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் 'ரெஸ்ட்'.

உலகத்தில் எங்கும் நடைமுறையில் நாம் அறிவது என்ன?

எஜமான் தலை மறைவில் எப்போதும் சிப்பந்திகளுக்கு கொண்டாட்டம் தானே. ஆகவே நாராயணனின் தலை மறைவில் இந்த சங்கு, சக்ரம், கருடன், ஆதிசேஷன் நால்வருக்குள்ளும் எந்த ஒரு சம்வாதமோ பட்டிமன்றமோ இல்லாவிட்டாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேச்சு நடந்தது என்று வைத்துக் கொள்வது இந்த சம்பவத்துக்கு உத்தமம்.

இது இப்படி நடைபெறும் என்று தெரிந்து தானோ, அல்லது நடக்கவேண்டும் என்று கருதி தானோ நாராயணன் அங்கில்லையோ? காரணம் நாம் அடிக்கடி சொல்வோமே அது தான்: ''அது அந்த நாராயணுனுக்கே வெளிச்சம்''

அங்கு ஒரு சின்ன மீட்டிங் நடந்தது. கவனிப்போமா?

"நான் மனசு திறந்து சொல்கிறேன் கேள், கருடா, நீ எப்போதும் ஒரு தனிப்பட்ட பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். எனக்கு ரொம்ப நாளா மனசிலே இது பற்றி வருத்தம் தான். அதை இப்போது சொல்லிவிட வேண்டுமென்று தோன்றியது '' என்றான் ஆதிசேஷன் கருடனைப் பார்த்து.

" அப்படியா சேதி. இதோ பார் ஆதிசேஷா, நீ இன்னும் தெளியவில்லை என்று தோன்றுகிறது. பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? உண்மையாகவே சொல் என் மேல் உள்ளூர அருவருப்போ, பொறாமையோ, கடுப்போ உனக்கு? உண்மையைச் சொல். நான் எப்போது பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்?. பூமியில் போய் எங்கேயோ கண்ணதாசன் பாட்டைக் கேட்டுவிட்டு " இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " டயலாக் எல்லாம் நமக்குள் வேண்டாம்" . வேற்றுமையை மனசில் வளர்க்காதே'' என்றான் கருடன்.

"ரொம்ப அழகாகத் தான் பேசுகிறாய் கருடா .நீ சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்துவிடுமா? நாராயணனை நான் தான் சுமக்கிறேன் என்று பெருமை பேசுகிறாயாம். என் காதுக்கு விஷயம் எட்டியது. என்னைப் பார். நான் இன்றேல், நாராயணனுக்கு நடுக்கடலில் பாற்கடலில் படுக்கை ஏதடா ? அதற்காக நான் பெருமையா பீற்றிக்கொள்கிறேன்?" என்று சொல்லாமல் சொல்லி தன் டம்பத்தை பீற்றி கொண்டான் ஆதிசேஷன்.

"ஹ ஹாஹா - ஆதிசேஷா, பலே பலே, ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கிச் செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன் அப்படித்தான் என்றாவது உன்னிடம் சொன்னேனா? எங்கே யாரிடம் நான் இப்படியெல்லாம் சொல்லி நீ கேட்டாய் சொல் '' என்று இடித்தான் கருடன்.

பேச்சு காரசாரமாக வளர்ந்தது.

ரெண்டு பேர் மோதினால் மற்றவர்களுக்கு கொண்டாட்டம் என்பது நமக்கு மட்டுமா சொந்தம்?. அங்கும் சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது, பேசியது.

"நீங்கள் ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா?

''நாராயணனை படுக்கும்போதும் பறக்கும்போதும் சுமக்கும் நீங்கள் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்?? என்னைப் பாருங்கள். நான் நாராயணனை சுமக்கவில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்குப் பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து என் பலத்தால் நாராயணனுக்கு பெருமை சேர்த்து அமைதியாக அவன் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி இதுவரை தற்பெருமை அடித்துகொள்கிறேனா? புரிந்துகொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள் வீண் அகம்பாவம் வேண்டாம் " என்று அமர்த்தலாக சக்ரம் சொல்லியது. மற்றவரகளை சக்கரம் கர்வத்தோடு ஒரு முறை பார்த்தது.

ஆதிசேஷனும் கருடனும் சுதர்சன சக்கரத்தின் பேச்சை ஏற்பவர்களா? அவர்கள் இருவருக்கும் ''இந்த பேச்சில் சக்கரத்தின் கர்வம் தான் உள்ளது. எனவே இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் சங்கு கிட்டே ஞாயம் கேட்போம் '' என பாஞ்ச ஜன்யம் எனும் நாராயணனின் சங்கின் பக்கம் திரும்பின.

''நீ என்ன சொல்கிறாய் சங்கா?''

அமைதியாக இதுவரை இத்தனையும் கவனித்த பாஞ்சஜன்யம் பேசாமல் தலையை மட்டும் ஆட்டியது

''என்ன பேசாமல் இருக்கிறாய் . நடுநிலையாய் நீ என்ன சொல்கிறாய்?''

"நான் பேசமாட்டேன்"

''சங்கே இந்த பிரச்னையில் நீ உன் அபிப்ராயம் கண்டிப்பாக நீ சொல்லியே ஆகவேண்டும்" என் மூவரும் கேட்க அமைதி யாக சங்கு சொல்லியது:

''சரி, என்னை பேசாமல் இருக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்:

''நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ கிருஷ்ணனாக இருந்த போது கூட திருவாய் இதழ் மலர்ந்தருளி அவனது மூச்சுக் காற்றின் சப்தம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் பாஞ்ச ஜன்ய ஜீவ நாதம் என்று உலகம் வியக்கிறது. நான் வெளிப்படுத்தும் ஒலியே ஸ்ரீமந் நாராயணனின் மூச்சு காற்று. இதை பிரபஞ்சமே அறியும்.. எனக்கென ஒரு செயலுமில்லை. நான் சொல்வது உங்களையும் சேர்த்து தான், உலகில் அவனின்று ஓர் அணுவும் அசையாது".

உங்களின் தன்மையும் நாராயணின் கருணையால் உங்களிடம் சேரும் அபரிமித சக்தியும் உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சரணாகதி அடைந்து சும்மா இருங்கள்".

பாஞ்ச ஜன்யத்தின் பொறுப்புணர்ச்சி பதிலால் அங்கே நிசப்தம் நிலவியது. நால்வருமே தங்களுக்குள் நாராயணனின் சர்வ சக்தியை, மஹிமையை முழுதுமாக அறிந்து ஒப்புக்கொண்டு தலையாட்டிக்கொண்டிருந்த போதுதான் இதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் இதழோரப் புன்னகையுடன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான். அவன் எதிர்பார்த்தது தான் நன்றாக நடந்துவிட்டதே.


No comments:

Post a Comment