Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ச்வேதாச்வதர உபநிஷத்- அத்யாயம் 1
ஸ்லோகம் 1
அத்தியாயம் 1
பிரஹ்மவாதின: வதந்தி
கிம் காரணம் பிரஹ்ம குத: ஸ்ம ஜாதா
ஜீவாம கேன க்வ ச சம்ப்ரதிஷ்டா:|
அதிஷ்டிதா: கேன ஸுகேதரேஷு
வர்த்தாமஹே பிரஹ்மவிதோ வ்யவஸ்தாம்||
பிரஹ்மவாதின: பிரம்மத்தை அறிந்தவர்கள்
வதந்தி- சம்பாஷிக்கிறார்கள்.
பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவைகளுக்கெல்லாம் பதிலாக அமைந்ததுதான் இந்த உபநிஷத்.
கிம் காரணம் பிரஹ்ம- இதில் இரண்டு கேள்விகள் உள்ளன.
1.கிம் பிரஹ்ம? பிரம்மம் என்பது என்ன ?
2.கிம் காரணம் பிரஹ்ம? பிரம்மம்தான் உலகின் காரணமா?
அப்படி என்றால் அது உபாதான காரணமா? அல்லது நிமித்த காரணமா?
உபாதான காரணம் என்பது ஒரு குயவன் பானை செய்ய உபயோகிக்கும் மண் போன்றது. நிமித்த காரணம் என்பது அந்த குயவனையே குறிக்கும்.
இந்தக் கேள்வியின் பொருள் என்னவென்றால், பிரம்மமே இந்த உலகத்தை சிருஷ்டித்தது என்றால் எதைக்கொண்டு ?
ஸதேவ இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம், ஸத் அல்லது பிரம்மம் ஒன்றே முதலில் உள்ளது ஒன்றேதான் வேறு ஒன்றும் அதைத்தவிர இல்லை என்கிறது சாந்தோக்ய உபநிஷத். அப்படி என்றால் பிரம்மமே உபாதான காரணம் அதுவே நிமித்த காரணம் என்று ஆகிறது.
குத: ஸ்ம ஜாதா- எங்கிருந்து நாம் தோன்றினோம்? நாம் என்பது ஆத்மாவைக் குறிக்கும் என்றால் ஆத்மாவுக்கு பிற்ப்பு இறப்பு என்பதில்லை என்று கூறுகிறது வேதம்.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்-----அஜோ நித்யோ சாச்வதோ அயம் புராண: நஹன்யதே ஹன்யமானே சரீரே
( கடோபநிஷத் 1.2.18)
ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை . அது நித்தியமானது. சரீரம் நசித்தாலும் ஆத்மா நசிப்பதில்லை.
அப்படியானால் இந்த சரீரம் இந்த்ரியங்கள் முதலியவை எவ்வாறு தோன்றின?
ஜீவாம கேன – தோன்றிய பிறகு எதனால் காப்பாற்றப் படுகிறோம்?
க்வ ச சம்ப்ரதிஷ்டா:- கடைசியில் எங்கு போய் ஒடுங்குகிறோம்?
அதிஷ்டிதா: கேன-எதனால் இயக்கப்பட்டு
ஸுகேதரேஷு- சுகம் துக்கம் முதலியவைகளுக்கு
வ்யவஸ்தாம் – கட்டுப்பட்ட தன்மையை
வர்தாமஹே- அடைகிறோம்?
அடுத்து பிரம்மத்தைத்தவிர வேறு காரணங்கள் ஆராயப்படுகின்றன.
No comments:
Post a Comment