Thursday, July 26, 2018

Svestasvaropanishad in tamil part2

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ச்வேதாச்வதரஉபநிஷத்- அத்யாயம் 1. ஸ்லோகம் 2

2. கால: ஸ்வபாவோ நியதி: யத்ருச்சா
பூதானி யோனி:புருஷ இதி சிந்த்யா

ஸம்யோக ஏஷாம் ந து ஆத்மபாவாத்
ஆத்மாபி அநீச:ஸுகதுக்கஹேதோ:

பிரம்மத்தைத் தவிர இதர காரணங்கள் ஒவ்வொன்றாக ஆராயப்படுகின்றன.
1. கால: - காலம்
2. ஸ்வபாவ:-ஸ்வபாவம்
3. நியதி;-விதி
4. யத்ருச்சா-தற்செயல்
5. பூதானி-பஞ்ச பூதங்கள்
6. புருஷ:-ஜீவாத்மா
7. ஏஷாம் ஸம்யோக:- இவைகளின் சேர்க்கை
யோனி: - காரணம்
இதி சிந்த்யா- என்ற எண்ணம்
ந து – சரி அல்ல
ஆத்மபாவாத்-இவைகள் ஜீவாத்மாவினால் உணரப் படுவதால்.

ஆத்மா அபி- ஜீவாத்மாவும் காரணம் அல்ல
சுகதுக்க ஹேதோ; - சுகம் துக்கம் இவற்றால் பாதிக்கப் படுவதால்
அநீச;- சுதந்திரமானது அல்ல.

இப்போது மேற் கூறிய காரணங்களை ஆராயலாம்.
காரணம் என்பது அதனுடைய விளைவான வஸ்துவிற்கு முன் இருக்கக்கூடியது. காரணமும் காரியமும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. இந்த நியாயப்படி பார்த்தால்,

காலம் என்பது நம்மால் இருக்கும் வஸ்துவாக உணரப்படுவது. அதனால் அது காரணமாக இருக்க முடியாது.

ஸ்வபாவம் – ஒரு வஸ்துவின் ஸ்வபாவம் அந்த வஸ்துவை விட்டு தனியாக இருக்க முடியாது. நெருப்பின் சூடு என்பது நெருப்பு உண்டான பிறகுதான் இருக்குமே தவிர அதற்குக் காரணமாக முடியாது.

நியதி- அதாவது விதி. விதி என்றால் destiny அல்ல. Law என்று பொருள். இந்த உலகம் முழுவதும் ஒரு நியதிக்குட்பட்டது. அப்படி என்றால் இந்த நியதியை நிறுவினவர் ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் நியதியும் காரணமாக முடியாது.

யத்ருச்சா அல்லது தற்செயல்- எல்லாம் தற்செயலாக உண்டானது என்றால் அது சரி அல்ல. ஒரு ஆலம் விதையில் இருந்து ஆலமரம்தான் உண்டாகிறது. அதேபோல எதுவும் உலகில் தற்செயலாக உண்டாவதில்லை
.
பஞ்ச பூதங்கள்-பஞ்ச பூதங்களால் உலகு உண்டாயிற்று என்றால் அந்த பஞ்ச பூதங்கள் தானாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உலகத்தை உண்டாக்குவதில்லை.

இவை அனைத்தும் சேர்ந்தும் காரணமாக முடியாது. ஏனென்றால் சேர்ப்பது யார் என்ற கேள்வி எழுகிறது.

சரி. இந்த புருஷன் எனப்படும் ஜீவாத்மாதான் இதற்குக் காரணம் என்றால் ஒரு காரணம் என்பது சுயேச்சையாக இருக்க வேண்டும் . ஆனால் இந்த ஜீவாத்மா சுகதுக்கங்களுக்கு ஆட்படுவதால் வேறு ஒருகாரணத்தை சார்ந்தே இருக்கிறது என்று ஆகிறது.

இதை உணர்ந்த பிறகு அங்கு கூடியிருந்த பிரம்ம வாதிகள் தியானத்தின் மூலம் பிரம்மமே காரணம் என்பதை உணர்ந்தார்கள்.
இது அடுத்து வருவது

No comments:

Post a Comment