Monday, July 9, 2018

Kunti asks for more & more difficulties

விசித்ரமும் சரித்திரமும் J.K. SIVAN

மஹா பாரதத்தில் எல்லா வித குணாதிசயங்கள் கொண்டவர்களையும் சந்திக்கலாம். ;ரொம்பவும் கஷ்டப்பட்ட ரெண்டு பெண்களில் குந்தி முதல். ஆரம்பம்முதல் ராஜகுமாரியாக இருந்தாலும் அவள் விட்ட கண்ணீர் இந்து மஹா சமுத்திரத்தை விட பெரியது எனலாம்.

நிறைய சோதனைகளை சந்தித்தவள் குந்தி. யாருக்கும் வராத கஷ்டங்கள், சங்கடங்களை அனுபவித்தவள் குந்தி. ஏன் இப்படி ஒரு பெண்ணை வியாசர் நமக்கு அறிமுகப்படுத்தினார்? கதையாக இருந்தால் இப்படி கேட்கலாம். உண்மையில் அப்படி இருந்தவளை வேறு எப்படி காட்டுவது என்று அவர் திருப்பி கேட்டால் நாம் என்ன பதில் சொல்வது?

ஒருவேளை இப்படிப்பட்ட ஒரு பழங்கால படிக்காத சம்மதிக்காத, ஒரு பெண் குந்தி, இந்த கால சில மனோதைரியம் இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத பெண்களைப் போல கஷ்டங்களை எதிர் கொள்ள பயந்துபோய், தற்கொலை செய்து கொள்ள அலையவில்லை, தைரியமாக எதிர்கொண்டாள, கடைசியில் வென்றாள் என்று காட்டுவதற்காக கூட இருக்கலாம். கிருஷ்ணனின் அத்தை அல்லவா?

பீஷ்மர் பார்த்து திருமணம் செய்து வைத்த ராஜா பாண்டு ஒரு ரிஷி சாபத்தால் மாண்டுபோனான். அவனுக்கு இன்னொரு மனைவி வேறு. நல்லவேளை துர்வாசர் உபதேசித்து வரமளித்த தேவ சந்தான மந்திரத்தால் குந்திக்கு மூன்று பிள்ளைகள், மாத்ரிக்கு ரெண்டு பிள்ளைகள் பாண்டு உயிரோடு இருந்தபோதே பிறந்து அவன் மகிழ்ந்தான்..

வனவாசம் செய்த குந்தி பாண்டு, மாதிரி இருவரையும் இழந்தவளாக ஐந்து பிள்ளைகளோடு மீண்டும் ஹஸ்தினாபுரம் செல்கிறாள். அஸ்தினாபுரத்து மகாராணி ஓரிரவுக்குள் ஆசிரமவாசியாகி ஆரண்யத்தில் விடப்பட்டாலும் விதி அவளை மீண்டும் ஹஸ்தினாபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்கிறது.

குந்திதேவி கணவன் பாண்டுவோடு காட்டில் உடன்கட்டையேறத் துணிந்தாள். ஆனால் மாதிரி ஐந்து குழந்தைகளையும் உன்னால் தான் வளர்த்து முன்னுக்கு கொண்டுவர முடியும் நான் உடன் கட்டை ஏறுகிறேன் என்று மாண்டுவிட்டாளே .

திருதராஷ்டிரனுக்கு நீ தான் இனி அரசன் உன் பிள்ளைகளோடு ராஜ்யத்தை ஆள் என்று சொல்லிவிட்டு பாண்டு கானகம் ஏகி, அங்கே ஐந்து பிள்ளைகளோடு குந்தி பாண்டு இல்லாமல் ஹஸ்தினாபுரம் திரும்புகிறாளே ஏற்றுக்கொள்வார்களா? இந்த சங்கடத்தையும் எதிர்கொள்கிறாள் குந்தி. பலே தைரியக்காரி.

ஐந்து பாண்டவர்களையம் பீஷ்மரிடம் ஒப்படைக்கிறாள். ''இனி நீங்களே இவர்களை தக்க முறையில் வளர்த்து ஆளாக்கவேண்டும்'' என்கிறாள். அவர் பொறுப்பேற்கிறார்.

திருதராஷ்டிரன் மக்கள் 100 பேரும் துரியோதனன் முதலாக பாண்டவ சிறுவர்களை வெறுக்கிறார்கள். அவர்களை அழிக்க எத்தனையோ திட்டங்கள். விதுரர் சகலமும் அறிந்தவர் இந்த சிறுவர்களுக்கு உதவுகிறார். திருதராஷ்டிரனோ, தனது மக்கள் மேல் லுள்ள பாசத்தால் அந்த பக்கமே சாய்கிறான்.

பீமனுக்கு நதியில் விஷம், அரக்கு மாளிகை தீ விபத்து, ஐந்து பிள்ளைகளோடு காட்டில் மறைந்து வாழும் நிலை,, துருபதன் மகள் திருமணத்தால் மறுபடியும் ராஜயோகம். இந்திரப் பிரஸ்தம், ராஜ சுய யாகம், விதியின் விளையாட்டால் அனைத்தையும் சூதாட்டத்தில் சகுனி கவர்வது, பிள்ளைகள் தன்னை பிரிந்து பதின்மூன்று வருட காலம் காட்டில் வாழ்ந்ததால் தனிமை, சோகம், கண்ணீர் மூத்தமகனை மற்றவர் அறியாத நிலை, அவனே தனது ஐந்து பிள்ளைகளுக்கும் முதல் எதிரி என்ற நிலை, அவனை நேரில் கண்டு உண்மை சொல்லி மற்ற பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற கெஞ்சல், அர்ஜுனனா, கர்ணனா ரெண்டில் எந்த பிள்ளை வேண்டும்?

எத்தனை துன்பம் வந்தாலும் குந்தி எப்படி தங்கினாள்? ஒரே ஒரு பிடிப்பு. அதுவே கிருஷ்ணன். எந்த துன்பத்திலும் அவனை வேண்டி கதறினாள். கைவிடவில்லை அந்த அனாத ரக்ஷகன். பொறுமையும் தியாகமும் வென்றது. நேர்மை, நீதி உயர்ந்தது.

சமீபத்தில் கண்ணன் பாரதப்போர் முடிந்து, ஹஸ்தினாபுரத்தில் குந்தியிடம் விடைபெற்று தனது ராஜ்ஜியம் துவாரகை செல்லும்போது குந்தி பிரார்த்திப்பதை எழுதினேன். யாரும் கேட்க துணியாததை குந்தி கிருஷ்ணனிடம் கேட்கிறாள் ''எனக்கு மேலும் மேலும் துன்பத்தை தா. அப்போது தான் உன்னையே நினைப்பேன், நீ வந்து எனக்கருள்வாய்''.

கண்ணன் வாழ்ந்த துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இப்போதுள்ள துவாரகை கோவில் கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் முதலில் கி. மு 400 இல் கட்டப்பட்டதாம். இப்போதுள்ளது நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது.

1241ல் முஹம்மது ஷா துவாரகை கிருஷ்ணன் கோவிலை நாசப்படுத்தினான். ஐந்து பிராமணர்கள் அவனை எதிர்த்து கொல்லப்பட்டார்கள். துவாரகை கோவில் அருகே அவர்கள் ''பஞ்ச் பீர்'' என்று வழிபடப்படுகிறார்கள். 1473 ல் குஜராத் சுல்தான், முஹம்மத் பேகடா, மீண்டும் கோவிலை நாசப்படுத்தினான். மீண்டும் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. 1551ல் துருக்க அஜிஸ் என்பவன் கோவிலை ஆக்கிரமித்த பொது கிருஷ்ணன் விகிரஹம் பெட் துவாரகா கொண்டு செல்லப்பட்டது. கெய்க்வாட் ராஜாக்கள் காலத்தில் அவ்வளவு ஆபத்தில்லை. வெள்ளைக்காரர்கள் ராஜ்யத்தை தான் கவர்வதில் ஆர்வம் காட்டினார்களே தவறி கோவில்கள் விகிரஹங்களை அழிக்க விரும்ப வில்லை போலிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் வேறு கிறிஸ்தவர்கள் வேறு என்று நோக்கத்தால் புரிகிறது. பிரிட்டிஷ் யுத்தத்தில் சில சிதிலங்கள் ஏற்பட்டது. 1960 லிருந்து இந்த கோவில் பாதுகாப்பு இந்திய அரசாங்கம் வசம் உள்ளது. நல்லதே நடக்கட்டும்.


No comments:

Post a Comment