Monday, July 9, 2018

Bhaja govindam part4 in tamil


Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம்-4

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவந்நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே,
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே! 
(5)

எதுவரை உன்னால் உதவிகள் உண்டோ,
அதுவரை உன் சுகம், அறிபவர் உண்டு;
பின்னால், நாடி தளர்ந்திடும் போது−
உன்னை நாடி வருவோர் ஏது? 
(5) 
யாவத் –எதுவரை , வித்த உபார்ஜனஸக்த: ஒருவன் பொருள் ஈட்டுவதில் கவனமாக இருக்கிறானோ, தாவத், அதுவரை , நிஜபரிவார: -உற்றார் உறவினர் ரக்த:- நட்புடன் இருப்பர். பஸ்சாத் –வயதான போது , ஜீவதி ஜர்ஜர தேஹே- தளர்ந்த உடலுடன் பிறர் கையை எதிர்பார்த்து வாழும்போது-, கேஹே கோ அபி - வீட்டில் உள்ளவர் எவரும் , வார்த்தாம் – எப்படி இருக்கிறாய் என்று ந ப்ருச்சதி – கேட்பதில்லை.
இந்த நிலை தற்போது பரவலாகக் காணப்படுகிறது என்பது வருந்தத்தக்கது. நம் முந்தைய தலை முறையில் வயது முதிர்ந்தோர் இல்லம் என்பதே அறியப்படாததாக இருந்தது. இந்த ஸ்லோகத்திற்கு விளக்கமே இப்போது தேவை இல்லை ஆனாலும் அப்போதே சங்கரர் அறிந்து சொல்லி இருக்கிறார் என்பது வியப்புக்குரியது.

இதன் பொருள் என்னவென்றால் பகவான் மட்டுமே நமது உண்மையான உறவு. அவனை மறந்து பொருள் சம்பாதிப்பதில் ஒரு பயனும் இல்லை. யாரும் நம்மை நமக்காக நேசிப்பதில்லை பகவானைத்தவிர. எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி கடமையைச் செய். பகவனை நம்பு . இதுதான் இந்த ஸ்லோகத்தின் முக்கிய கருத்து. சரி இது எல்லோருக்கும் பொருந்துமா? அன்பாக இருக்கும் குடும்பங்களும் இல்லையா? அதற்கு அடுத்த ஸ்லோகம் பதில் கூறுகிறது.

யாவத் பவனோ நிவஸதி தேஹே,
தாவத் ப்ருச்சதி குஸலம் கேஹே;
கதவதி வாயௌ தேஹோபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே! (6)

எதுவரை உடலில் உயிரும் உண்டோ,
அதுவரை உன் சுகம் அறிபவர் உண்டு;
பட்டென உயிரும் பறந்திடும் போது,
கட்டிய மனைவியும், எட்டியே நிற்பாள்! 
(6)
யாவத் – எதுவரை, பவன: - உயிர், தேஹே –உடலில் , நிவஸதி- உள்ளதோ, தாவத்- அதுவரை, கேஹே- வீட்டில் , குசலம் ப்ருச்சதி-உன் க்ஷேமலாபங்களை விசாரிக்கிறார்கள். தேஹாபாயே- மரணம் வரும்போது, கதவதி வாயோ – பிராணன் போன பின், தஸ்மின் காயே- அந்த உடலைக்கண்டு, பார்யா பிப்யதி- மனைவியும் , பிப்யதி- பயப்படுகிறாள்

அன்பாக இருத்தல் என்பது எதுவரை? இந்த உடல் இருக்கும் வரை. இறந்துவிட்டால் அன்பான மனைவியும் அந்த உடலை விரைவில் தகனம் செய்யவே நினைப்பாள்.

இதை கண்ணதாசன் எளிதாகக் கூறிவிட்டார் , 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ' என்று,

எல்லா உறவுகளும் இந்தப் பிறவியில் மட்டுமே. எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும் ஒரே உறவு இறைவன்தான் . அதனால் கோவிந்தனைப் பாடு என்கிறார்.

சங்கரர் உறவுகளைத் துறக்கும்படி கூறுவதாக எண்ணக்கூடாது. உறவுகள் நித்தியமானவை என்னும் எண்ணத்தைத்தான் துறக்கும்படி கூறுகிறார். இந்தஜன்மத்து உறவுகள் இந்த உடல் நிலைக்கும்வரைதானே.

உடலில் உயிர் உள்ளபோதே உடலில் சக்தி உள்ளபோதே கோவிந்தனை நினைக்க வேண்டும். தேக சுகங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைக் கழித்தால் வயதானபின் கடவுள் நினைவு வராது. இதைத்தான் அடுத்த ஸ்லோகம் சொல்கிறது.




No comments:

Post a Comment