Monday, July 9, 2018

Story of Amaraneethi nayanar - Langot

அமரநீதி நாயனார் - J.K. SIVAN

''கோவணம் இவ்வளவு எடையா??''

அமரநீதி என்று ஒரு வைசிய குல சிவ பக்தர். சோழ நாட்டில் பழையாறை என்ற ஊரை சேர்ந்தவர். சுற்றிலும் வளமை மிகுந்த தோப்பும் துறவுமாக, பச்சை பசேலென்று செழிப்பான மலர் கொடிகள் நிறைந்த தோட்டங்களாக ஒரு கிராமம்.

வைசியர் என்ராலே வியாபாரி தானே. அமரநீதி தங்க, வைர, பட்டு, பருத்தி வியாபாரி. வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் வாங்கி இறக்குமதி செய்து உள்ளூரில் நல்ல விலைக்கு விற்றதில் கொள்ளை கொள்ளை யாக பணம் பானைகளில் சேர்ந்தது. நேர்மையானவர் , நியாயமான விலையில் விற்பதால் நல்ல பெயர் அவருக்கு. அவருக்கு ஒரு பழக்கம். நிறைய சிவனடியார்களை தேடிச்சென்று அழைப்பார், அவர்களுக்கு உபச்சாரங்கள் செயது, உணவளித்து, உடைகள் அதாவது கோவணம், மேல் துண்டு எல்லாம் பணத்தோடு சேர்த்து தானம் செய்பவர்.

மேலே சொன்ன நல்லூர் சிவன் அவரை ரொம்பவே ஈர்த்தான். அடிக்கடி அங்கே செல்வார். எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். முன்னின்று நடத்துவார். வாய் ஓயாமல் ஓம் நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து திரு மந்திரத்தை விடாமல் உச்சரிக்கும். மனம் ஈசனிடத்தில் ஆணி அடித்தது போல் நிலைத்திருக்கும். ஆகவே பழையாறை கிராமத்தை விட்டு நல்லூரிலேயே சென்று வாழ்ந்தார். சிவபக்தர்கள் வந்து தங்க ஒரு சத்திரம், மடம் அமைத்தார். வரும் அத்தனை சிவனடியார்களுக்கு கோவண தானம். கல்யாண சுந்தரேஸ்வரனுக்கு இந்த அடியாரின் பக்தியும் சேவையும் பிடிக்காமல் இருக்குமா?

நாட்கள் இப்படி செல்ல, ஒருநாள் ஒரு சிறு வயது பிரம்மச்சாரி அந்த மடத்துக்கு வந்தான். ஜடாமுடி, விபூதி ருட்ராக்ஷ மாலை.கையில் ஒரு தண்டம். அதன் ஒரு முனையில் சிறு விபூதிபை முடிந்து வைத்திருந்தது. ரெண்டு கோவணங்கள் அதில் சுற்றி இருந்தது. அதுவே அவன் ஆஸ்தி. கண்கள் ஞானத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தது.

பிரம்மச்சாரி மடத்திற்கு வந்தபோது அமரநீதி அங்கே இருந்ததால் வெகு மரியாதையோடு இந்த இளம் ப்ரம்மச்சாரியை வரவேற்று உபசரித்தார், வணங்கினார். பரம சந்தோஷம் அவருக்கு.

''பெரியவரே, நீங்கள் தான் அமரநீதியா? மிகவும் நல்ல காரியம் செயகிறீர்கள், சிறந்த தர்மம். உண்மையான சிவபக்தர் நீங்கள். நானே உங்களைத் தேடி தான் இந்த ஊருக்கு வந்தேன் ''

''சிவனடியாரே , நீங்கள் வாருங்கள் உணவருந்தி வாழ்த்தவேண்டும்'' என்று அமரநீதி உபசரித்தார்.

''எதிரே இருக்கு ஏழு சமுத்திரம் எனும் தீர்த்தத்தில் நீராடிவிட்டு எனது நித்ய கர்மாநுஷ்டானங்கள், பூஜைகளை முடித்துக் கொண்டு வருகிறேன். மழை தூறிக்கொண்டிருக்கிறதே. அதற்குள் நீங்கள் என்னுடைய இந்த உலர்ந்த கோவணங்களை மழையில் நனையாமல் காய்ந்த வஸ்த்ரங்களாக வைத்திருங்கள். இந்த கௌபீனம் (கோவணம்) மிகவும் முக்கியமானது எனக்கு. ஆகவே ஜாக்கிரதையாக வைத்திருக்கவும்'' என்று அந்த ப்ரம்ம சாரி சிவனடியார் கூறுகிறார்.

இவ்வளவு சொல்கிறாரே என்று அந்த பிரம்மச்சாரி கொடுத்த்த கௌபீனத்தை அமரநீதி 
ஜாக்கிரதையாக தனது அறையில் வைக்கிறார். ஸ்நானம் முடிந்து சிவனடியார் அமரநீதியிடம் தான் கொடுத்த உலர்ந்த கௌபீனத்தை உடுத்திக்கொள்ள கேட்கும்போது அதைக் காணோமே!

எங்கு தேடியும் அதை காணோம். அமரநீதி சிவனை வேண்டுகிறார். வேறு ஒரு கௌபீனத்தோடு அந்த சிவனடியாரை நெருங்கி அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்ட. அவரோ அது வேண்டாம் எனது கௌபீனம் தான் வேண்டும் என்கிறார். கோடானு கோடி பணம் கொடுக்கிறேன் என்கிறார் அமரநீதி.

''உன் பணம் எனக்கெதற்கு ஐயா, அதால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. என்
கௌபீனம், நான் கொடுத்தது தான் இப்போதே வேண்டும் என்கிறார் சிவனடியார்.
அப்போது சொல்கிறார் சிவனடியார். போனால் போகட்டும். என்னிடம் இன்னொரு கௌபீனம் அதற்கு ஈடாக அதே எடையாக இன்னொரு கௌபீனம் உன்னால் கொடுக்க முடிந்தால் கொடு பார்க்கலாம்?'' இதை கேட்டதும் அமரநீதிக்கு கொஞ்சம் நிம்மதி. சரி அப்படியே என்கிறார்

ஒரு தராசு கொண்டுவரச்சொல்லி, ஒரு தட்டில் பிரம்மச்சாரி கொடுத்த கௌபீனம் அடுத்ததில் அமரநீதி அடுக்கிய புது கௌபீனங்கள், செல்வம், பொன் ,பொருள் எல்லாம் வைத்தும், சிவனடியார் கௌபீனம் வைத்திருந்த தராசு தட்டின் எடை தாழ்ந்தே இருந்தது. என்ன ஆச்சர்யம் இது? மாயமாக இருக்கிறதே.

''ஓஹோ வந்தவர் சாதாரண பிரம்மச்சாரி இல்லையோ? பரமசிவன், கல்யாண சுந்தரேசன் விளையாடுகிறானா? என் சகல செல்வமும் சிவனடியாரின் ஒரு கோவணத்துக்கு ஈடாக வில்லையே.
அமரநீதி சாஷ்டாங்கமாக கண்களில் நீர் மல்க சிவனடியாரின் பாதங்களில் வீழ்கிறார்.

'' குருதேவா, என்னை, என் மனைவி என் குழந்தைகள் எல்லோரையும் கூட அந்த தட்டில் இருக்க அனுமதிக்கவேண்டும். அப்போதாவது ஈடு கட்ட முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அனுமதியுங்கள்'' என்கிறார் அமரநீதி.

''சரி உன்னிஷ்டம்..''என்கிறார் சிவனடியார்.

''சிவபெருமானே, நான் இதுவரை செய்த தான தர்மங்கள் சிவனடியாரிடம் கொண்ட அன்பு, பக்தி, பாசம் எல்லாம் உண்மையாக இருந்தால், இதோ நான், என் குடும்பமே என் சகல சொத்துக்களோடு இருக்கும் இந்த தராசு தட்டு, சிவனடியாரின் கோவணம் வைத்த அடுத்த தட்டுக்கு சமமாகட்டும்.''

சிவன் மனது வைத்தான். தட்டுகள் சமமாயின. இந்த அதிசயத்தை கண்டவர் சிலையானார்கள். எல்லோரும் அமரநீதியின் சிவபக்தி, தொண்டின் மஹிமை, எல்லாம் உலகத்துக்கு புரிந்தது. தேவர்கள் பாரிஜாத மலர்களை பூமாரி பொழிந்தனர். எல்லோரும் ப்ரம்மச்சாரியை தேடினர். எங்கே அவரை காணோம்? ஆனால் எப்படி ரிஷபாரூடராகி சிவன் பார்வதி சமேதராக அங்கே காட்சி தந்தார்.?

''அமரநீதி, உன்னுடைய தூய சிவபக்தி, சிவனடியார்க்கு நீ ஆற்றும் தொண்டு எம்மை மகிழ்விக்கிறது. உனது கௌபீன தானம் சிறந்த தொண்டு. தக்க நேரத்தில் நீ என்னை சேர்வாய் '' என்று பரமசிவன் திருவாய் மலர்ந்தருளினார்.

Image may contain: 1 person, standing, outdoor and water


No comments:

Post a Comment