Monday, July 9, 2018

Bhaja govindam part3 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் -3

3.நாரீஸ்தனபரநாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் 
ஏதத் மாம்சவசாதிவிகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்

பெண் அவள் அங்க அழகினைக் கண்டு
தன்னிலை இழந்து நீ, தளர்ந்து விடாதே!
எலும்பும், சதையும், எடுத்த அவ்வடிவம்−
அலுக்கும் ஓர் நாள், அறிவாய் மனிதா
(Padma Gopalan)

ஏதத், இந்த நாரீ ஸ்தன பர நாபீதேசம் , பெண்ணின் அங்க அழகுகள் , மாம்சவசாதிவிகாரம், சதையின் வெவேறு வடிவங்களே என்று வாரம் வாரம் –திரும்பத் திரும்ப, அதாவது எப்போதெல்லாம் மனம் மோஹாவேசம், மோகத்தை அடைகிறதோ அப்போதெல்லாம் மனசி விசிந்தய , மனதில் நினைவு படுத்திக்கொள். என்று கூறுகிறார்.

மூவாசையில் இரண்டாவதான பெண்ணாசையைப் பற்றிய ஸ்லோகம் இது. பொன்னாசை பெரும்பாலோரை வசப்படுத்துகிறது என்றால் அடுத்தபடி பெண்ணாசையைச் சொல்லலாம். மண்ணாசை எல்லோருக்கும் வருவதில்லை . அதனால் அதைபற்றி விரிவாகச் சொல்லவில்லை.

வித்ருஷ்ணா அல்லது ஆசை அற்ற நிலை அடைவதற்கு இந்த உலகத்தின் சுகங்கள் எல்லாம் நிலையற்றவை என்று அறிய வேண்டும். இதை சங்கரர் ஒரு அழகான உவமை மூலம் விளக்குகிறார் . 
4. நலிநீதலகதம் ஜாலம் அதி தரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் .
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம் 
லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம்

தாமரை இலையின் தண்ணீர் போலே−
பாமரன் வாழ்வு தத்தளிக்கிறதே!
பிணியும், துன்பமும், பிடிப்பும், துடிப்பும்−
பனியாய் உலகில் படர்ந்திருக்கிறதே!
(padma gopalan)

ஒரு துளி ஜலம் நளிநீதலகதம் , தாமரை இலையில் விழுமானால் அது அதிதரளம், இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்து கடைசியில் அந்த தடாகத்தண்ணீரிலேயே விழுந்து விடும்.தத்வத், அதேபோல ஜீவிதம் , வாழ்க்கை அதி சபலம், நிலையில்லாதது,. இது எதனால் என்றால் உடலுக்கு வியாதி உள்ளத்துக்கு அபிமானம் இந்த இரண்டும்தான் காரணம். அதனால் உலகமே துன்பமயமானது, சோகஹதம் என்று கூறுகிறார். இதை சற்று ஆராய்வோம்.

தாமரை இலைமேல் உள்ள தண்ணீர் போல மனிதன் இங்கும் அங்கும் ஓடி இன்பம் காணத் துடிக்கிறான். நாம் பல ஜன்மங்களைக் கடந்து இன்னும் பல ஜன்மங்கள் எடுத்து கடைசியில் தாமரை இலைத் தண்ணீர் தடாகத்தில் விழுவது போல இறைவனுடன் கலக்கிறோம்.

எப்படி தடாகத்தில் உள்ள தண்ணீரில் இருந்து இந்தத்துளி வந்ததோ அது போல் நாமும் இறைவனிடம் இருந்து வந்து அத்துளி போல் தத்தளித்துக் கடைசியில் அவனுடன் கலக்கிறோம். நம்முடைய ஒரு ஜன்மம் என்பது அவ்வளவுதான்.

இதற்குள் உடலையும் மனதையும் இந்த்ரிய சுகங்களில் ஈடு படுத்தி தேக வியாதி மனோவியாதி இவைகளை வரவழைத்துக்கொள்கிறோம்

.இது எதனால் என்றால் நான் என்னும் அபிமானத்தினால்தான். என் உடல் என் வீடு என் குடும்பம் என் சுகம் இவை எல்லாமே தத்தளிக்க செய்பவை .வாழ்க்கை என்பது ஓர் நீர்க்குமிழி என்பதைப் புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம்.


No comments:

Post a Comment