Tuesday, July 17, 2018

Bhaja govindam 17 to 19 in tamil

Courtesy: Smt. Dr.Saroja Ramanujam

பஜகோவிந்தம் - 17, 18, 19

அடுத்தச்லோகம் சுபோதர் கூறியதாக சொல்லப்படுகிறது.

குருதே கங்கா ஸாகர கமனம்,
வ்ரத பரிபாலனம் அதவா தானம்;
ஞான விஹீன: ஸர்வ மதேன−
முக்திம் ந பஜதி, ஜன்ம ஸதேன! 
(17)

கங்கை ஸ்நாநமும், கடல் நீராடலும்−
நோற்கும் நோன்பும், செய்யும் தானமும்,
விடுதலை என்றும் தந்து விடாது−
உள்ளத் தெளிவு, இல்லாத போது! (17)

ஞானவிஹீன: - உண்மை எது என்ற அறிவு இல்லாதவன் ( உலகப்பற்று உள்ளவன்) 
கங்கா ஸாகர கமனம் – கங்கைக்கோ சேது சமுத்திரத்திற்கோ சென்று
குருதே- ஸ்நானம் செய்தாலும்
வ்ரதபரிபாலனம் – விரதங்களை மேற்கொண்டாலும் 
அதவா தானம் – அல்லது தானம் முதலிய தர்ம காரியங்களை செய்தாலும். 
சர்வமதேன- எந்தப் பிரிவை சேர்ந்தவனானாலும்
ஜன்மசதேன – நூறு பிறவி எடுத்தாலும்
முக்திம் ந பஜதி- முக்தி அடைவதில்லை

முக்தியைக் கொடுப்பது சாஸ்திரஞானம் தர்மநெறி வழிபாட்டு முறை இவைகள் அல்ல. இவைகளை மனத்தூய்மையுடன் பகவதர்ப்பணமாக செய்தால்தான் பலன்.

இதைத்தான் 'பக்த்யா து அனன்யயா லப்ய:,' பக்தி ஒன்றினால் மட்டுமே என்னை அடைய முடியும் என்று கீதையில் கூறினார்.

சங்கரர் பிராணாயாமம் முதலியவை மனம் ஒன்றாமல் வெறும் பழக்கத்தின் காரணமாக செய்தலை 'க்ராண பீடனம் ,' நாசியை துன்புறுத்தல் என்கிறார்.

இதற்கு மாறாக எல்லாம் துறந்த ஞானி எப்படி இருப்பான் என்று சுரேஸ்வரர் கூறியது.

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூஸ்தலம் அஜினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக:? (18)

மரத்தடி தன்னில் அவனுக்கு இருக்கை;
இரவில், மண்ணில், மான் தோல் உடை 
எல்லா சுகமும் வெறுத்தவன் வாழ்வில்,
வெள்ளம் போலே, ஆனந்தம் தானே! 
(18)
தருமூலநிவாஸ: முற்றும் துறந்த முனிவன் வசிப்பது மரத்தடி. 
சய்யா-படுக்கை
பூதலம் – பூமியில்
அஜினம் – மான்தோல் 
வாஸ; - உடை 
சர்வபரிக்ரஹபோகத்யாக: - எல்லா உடைமைகளையும் போகத்தையும் துறந்தவன் 
விராக: -துறவு என்பது 
கஸ்ய – எவருக்குதான் ஸுகம் ந கரோதி- சுகம் கொடுக்காமல் இருக்கும்?

'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஹ்தொப்பதில்'
என்பது வள்ளுவர் வாக்கு.

எதுவும் வேண்டாம் என்பதுதான் ஒப்புவமை இல்லாத செல்வம். இதை நம் காலத்திலேயே , ராமகிருஷ்ணர், ரமணர், காஞ்சி மகான், யோகிராம் சுரத்குமார் இப்படி பல உதார புருஷர்கள். மேல் நாட்டிலும் கூட அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு உதாரணம்

டயோஜீநஸ் எனற கிரேக்கநாட்டு ஞானி யை மாபெரும் வீரரான அலெக்சாண்டர் பார்க்க வந்தார். அறையில் ஒரே ஆடையுடன் ஒரு துருப்பிடித்த ஸ்நான தொட்டியில் உட்கார்ந்திருந்த அவரைக்கண்டு வியந்த அலெக்சாண்டர் ' உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர் ஒரே ஒரு உபகாரம் மட்டும் செய்தால் போதும். நீ நிற்கும் இடம் சூரியனை மறைக்கிறது. கொஞ்சம் தள்ளி நின்றால் போதும் .என்றார்."

முற்றும் துறந்த முனிவர்கள் நிலை இதுதான். யோகமும் போகமும் ஒன்றே. ஞானி அரசமாளிகையில் இருந்தாலும் காட்டில் தனியே இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறான் என்பதை அடுத்து நித்யானந்தர் கூறுகிறார்

யோகரதோ வா, போகரதோ வா,
ஸங்கரதோ வா, ஸங்கவிஹீன:,
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்−
நந்ததி, நந்ததி, நந்ததியேவ! (19)

தவத்தில் இருப்பனோ, சுகத்தில் திளைப்பனோ−
துணையுடன் இருப்பனோ, தனித்தே இருப்பனோ,
எவனின் சிந்தை, இறைவனில் கலப்பதோ−
அவனும் காண்பது, ஆனந்தம் தானே! 
(19)
யோகரதோ வா- காட்டில் யோக வாழ்க்கை வாழ்ந்தாலும் 
போகரதோ வா- அரச மாளிகையில் உபசரிக்கப்பட்டாலும் 
ஸங்க ரதோ வா- மனிதர் மத்தியில் இருந்தாலும் 
சங்கவிஹீன: - தனிமையில் இருந்தாலும் 
யஸ்ய சித்தம் – எவருடைய மனம் 
ப்ரம்மணி – பிரம்மத்தில் 
ரமதே – லயித்து உள்ளதோ அவருக்கு 
நந்ததி நந்ததி நந்ததி ஏவ- ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

யோகமோ போகமோ எந்த மாற்றத்தையும் தருவதில்லை. ஏனென்றால் அவருடைய மனம் அப்போதும் ப்ரம்மானந்தத்தில் ஆழ்ந்து இருக்கிறது. அதற்கு மேலான ஆனந்தம் எதுவும் இல்லை அல்லவா?.

இது நித்யானந்தர் கூறியதாக சொல்லப்படுகிறது. பொருத்தமான பெயர்.

அரச போகத்தில் மனம் மயங்கி விடாமல் ஞானியாகவே வாழ்ந்த, ராஜரிஷி எனக்கூறப்படும் ஜனகர் இதற்கு உதாரணம்
. 
நந்ததி என்ற சொல் மூன்று முறை வருவதன் பொருள் ஞானி உடல் , வாக்கு மனம் என்ற மூன்று நிலையிலும் ஆனந்தத்தை அனுபவிக்கிறான் என்பது.


No comments:

Post a Comment